வியாழன், 3 ஆகஸ்ட், 2017

செம்மொழி



இராபர்ட் கால்டுவெல் பிறந்த இந்நாளிலே (7-5-1814) இந்திய நாட்டின் குடியரசுத் தலைவர் அவர்களால் தமிழ் அறிஞர்களுக்குச் செம்மொழி விருது அளிக்கப்பட்ட சேதி ஏடுகளில் எல்லாம் வண்ணப் படங்களுடன் வெளிவந்திருப்பது இறும்பூதெய்திட வேண்டிய பொருத்தமான நிகழ்வாகும்.

தமிழ் மொழி செம்மொழி என்று முதலில் சொன்ன வெளிநாட்டவர் அறிஞர் இராபர்ட் கால்டுவெல் அவர்கள் ஆவார்கள். திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற உயர் பெரும் நூலில் அறிஞர் கால்டுவெல் அவர்கள், திராவிட மொழிகள் அனைத்திலும் உயர்தனிச் செம்மொழியாய் நிலைபெற்று விளங்கும் தமிழ், தன்னிடையே இடம் பெற்றிருக்கும் சமஸ்கிருதச் சொற்களை அறவே ஒதுக்கிவிட்டு உயிர் வாழ்வதோடு, அவற்றின் துணையை ஒரு சிறிதும் வேண்டாமல் வளம் பெற்று வருவதும் இயலும் என்று நிறுவிக் காட்டியவர் என்று முதல் அமைச்சர் கலைஞர் அவர்கள் இன்றைய முரசொலியில் (7-5-2011) குறிப்பிட்டு இருப்பது சிறப்பானதாகும்.

நெல்லை மாவட்டத்து இடையன்குடியில் கால்டுவெல் வாழ்ந்த இல்லம், 20 லட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டு, அவரது சிலையும் தி.மு.க. ஆட்சியில் நிறுவப்பட்டுள்ளது. முதல் அமைச்சர் கலைஞர் அவர்கள் காணொலிக் காட்சி மூலம் அவற்றைத் திறந்து வைத்தார். (17-2-2011).

தெலுங்கு, மலையாளம், துளு, கன்னடம், குடகு ஆகிய மொழிகள் தமிழிலிருந்தே பிறந்திருப்பது மட்டுமல்லாமல், நீலகிரி, ஒரிசா, மற்றும் நாகபுரி ஆகிய மலைப் பகுதிகளில் வாழும் பழங்குடியினர் மொழிகளும் மற்றும் வடக்கே பலுசிஸ்தானத்தில் பேசப்படும் பிராகி ஆகிய மொழிகளும் தமிழ் மொழியிலிருந்தே பிறந்த திராவிட மொழிகள் என்பதை நிறுவியவர் அறிஞர் கால்டுவெல்.

1838 ஜனவரி 8 ஆம் தேதி சென்னைக்கு வந்த இந்த அறிஞர் இறுதி மூச்சு அடங்கும்வரை (1891) தமிழ் மொழி ஆய்வுக்காகவே தன் ஆவியை அர்ப்பணித்தவர்.

தமிழ் செம்மொழி என்ற நிலை இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டதற்குக் காரணமானவர்களில் இந்த அயர்லாந்து நாட்டு அறிஞரும் அடக்கமாகும்.

1918 ஆம் ஆண்டு மார்ச்சு 30, 31 ஆகிய நாள்களில் நடைபெற்ற நீதிக்கட்சி மாநாட்டில் 8 (ஆ) தீர்மானம் கூறுகிறது:

எல்லாப் பழமையான மொழிகளைப் போல பழமையான, வளமையான, உயர்தரமாக உருவாக்கப் பட்ட பல திறப்பட்ட இலக்கியங்களைக் கொண் டது தமிழ் மொழி. இது பல்கலைக் கழகத்தால் பாரசீக, அரேபிய, சமஸ்கிருத மொழிகளுக்கு ஈடாக மதிக்கப்பட்டுச் செம்மொழி என்று ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்று தீர்மானம் செய்யப்பட்டதை இந்நாளில் பதிவு செய்வது அவசியமாகும்.



7.5.2011

நூல் :  விடுதலை ஒற்றைப் பத்தி - 4
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...