பார்ப்பனனைக் குறை சொல்வானேன்? கொடைக்கானல் பார்ப்பனன் பஞ்சு மெத்தை போட்டு, காலாள், கையாள்களோடு மோட்டார் வாகனத்தில் குடும்ப சகிதமாய் சுகபோகமனுபவிப்பதைக் கண்டு பொறாமை கொள்வதும், வக்கீல் பார்ப்பனன் இல்லாததும் பொல்லாததும் சொல்லிக் கொள்ளையடிப்பதைக் கண்டு துவேஷப்படுவதும், சிம்லாப் பார்ப்பனன் துரைபோல சட்டை மாட்டி, மேஜை மீது உட்கார்ந்து விஸ்கி, பிராந்தி, ஒயினோடு சாப்பிடுவதையும் கண்டு ஆத்திரப்படுவதும் கூடாது, பார்ப்பனரல்லாத நீங்களும் அவர்களைப் போல் படித்து முன்னுக்கு வாருங்கள்.
பார்ப்பனனை நிந்திக்கும் நேரத்தையும், திறத்தையும் நீங்கள் முன்னேற்றமடைவதில் செலவிடுங்கள் என்று யாரேனுமொரு மேதாவி கூறலாம்.
கடவுள், மதம்,
வேதம், சாஸ்திரம், சாதி ஆகிய சகலமும் பார்ப்பனர்களாலே பார்ப்பனர்களுக்காக சிருஷ்டிக்கப்பட்டன. இதில் பார்ப்பனர்கள் முன்னேறுவதற்கு சகல உரிமைகளுமுண்டு. ஆனால் பார்ப்பனரல்லாதார் முன்னேற்றமடைவதற்கு இப்பார்ப்பனக் கடவுள்களும், மதமும், சாஸ்திரங்களும், சாதிகளும் இடங் கொடுக்காமல் பல நூற்றாண்டுகளாக மக்களைக் கொடுமைப்படுத்தி வருகின்றன.
மனிதன் பிறப்பினால் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற கொள்கையும், ஒரு மனிதனைப் பிற மனிதன் கண்ணால் பார்க்கக்கூடாது என்ற கொள்கையும் இருக்கும் வரையில் மக்கள் எப்படி முன்னேற முடியும்?
இவ்விருபதாம் நூற்றாண்டிலும் நாகரிகம் வாய்ந்த ஆங்கில துரைத்தனத்தின் ஆதினத்தின் கீழுள்ள பக்தி சிரத்தையுள்ள மைசூர் மன்னரின் நாட்டிலுள்ள பண்டிதப் பார்ப்பனன் சமஸ்கிருத வியாகரணத்தைப் பார்ப்பனர் அல்லாத ஏனைய மக்களுக்குச் சொல்லிக் கொடுக்க; மறுத்தனன் என்றால் என்னே பார்ப்பனக் கொடுமை! மக்களின் பிறவியில் உயர்வு தாழ்வு இல்லை என்ற கொள்கையைக் காங்கிரஸ் கமிட்டியில் தீர்மானித்தவுடன் ஒப்போம்! ஒப்போம்!! என வெளியேறிய ராஜகோபாலாச்சாரிகளை வைத்துள்ள பிராமணியத்தின் கொடுமையை அளவிட்டுக் கூறமுடியுமா? (அய்யாமுத்து கட்டுரைகள் என்ற புத்தகத்திலிருந்து பக்கம் 5,6,-7)
ஸ்ட்ராங் என்ன, லேசு என்ன?
அந்தக் காலத்தில் நான் ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்களுக்கு மிகவும் வேண்டியவனாகத்தான் இருந்தேன். என்னை நிரம்பவும் மதிப்பார்கள். காரணம் நான் எல்லாப் பதவிகளிலும் இருந்து வந்தவன்; திரு. இராஜகோபாலாச்சாரியாரே வந்து, சமுதாயச் சீர்திருத்தம் தானே நமக்கு வேண்டும். அது காந்தியால்தான் முடியும். என்று சொல்லி என்னைக் காந்திக்குச் சிஷ்யன் ஆக்கினார். நானும் சேர்மன் (ஈரோடு நகர்மன்றத் தலைவர்) பதவியை இராஜிநாமா கொடுத்து வெளியேறி, காங்கிரசில் சேர்க்கப்பட்டு விட்டேன். சென்றபிறகு தமிழன் ஒருவனுக்காவது அதுவரை கிடைத்திருக்காத தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிச் செயலாளர் தலைவர் இடத்தில் உட்கார வைத்தார்கள்.
ஏனென்றால் திரு.வி.க.
(கலியாண சுந்தரனார்) சாதாரணமாக ஒரு பள்ளிக்கூட வாத்தியாராக இருந்தவர். டாக்டர் வரதராஜுலு அவர்கள் பிரபஞ்சத்தின் வாரப் பத்திரிகை நடத்தி வந்தார் என்றாலும் பார்ப்பனர்கள் அவரை அவ்வளவு நம்பமாட்டார்கள். திடீரென அவர்களை யாரும் மாற்றி விடலாம் என்று அவர்களுக்குத் தெரியும். வ.உ. சிதம்பரனார் ஒருவர் அவர் பாவம்! எல்லாவற்றையும் விட்டு நொடிந்து போய் கஸ்தூரி ரங்க அய்யங்கார் தயவில் இருந்தவர். அதனால் சிறிது வசதி உள்ளவன்; பெரிய வியாபாரி; பதவிகளை விட்டு வந்தவன் என்கிற முறையில் இராஜகோபாலாச்சாரியார் என்னைத்தான் நம்பி எதற்கும் எனக்கு மதிப்புக் கொடுத்து முன்னே வைப்பார்.
உண்மையாகவே நானும் அதைநம்பி அவரிடம் மிக்க விசுவாசமாக இருந்து பெரிய பிரச்சாரம் செய்து பார்ப்பனருக்கு நாங்கள் மேடை தேடிக் கொடுத்து விட்டோம்! அப்போதே நான் நாம் தொட்டால் தீட்டுப்பட்டு விடும் என்கிற சாமி நமக்கு எதற்கு? அதை எடுத்து ரோட்டுக்கு ஜல்லி போடணும்; அல்லது ஆற்றிலே தூக்கிப் போட்டு வேட்டி துவைக்கப் போடணும் இப்படித்தான் பேசுவேன். டாக்டர் வரதராஜுலு, கல்யாணசுந்தரனார். சிதம்பரனார். நான் ஆகிய நால்வரில் பார்ப்பனர்கள் என்னைத்தான் முன்னே தள்ளுவார்கள்! என்னைப் பார்த்து பதவி வேட்டைக்காரன் என்று எவரும் சொல்ல முடியாது என்பதால் பார்ப்பனர்களும் நான் என்ன சொன்னாலும் வாயை மூடிக் கொண்டுதான் இருப்பார்கள்.
ஜாதி, மதம்,
கடவுள் துறையில் இப்பொழுது சொல்லுவதெல்லாம் நான் அப்போதே சொல்லுவேன். நான் பேசி முடித்து வந்ததும் ஆச்சாரியார் சொல்லுவார். உங்களுடையது ரொம்ப (நிறைய) (Strong dose) என்று சொல்லுவார். நான் சொல்லுவேன் நீங்க என்னங்க. இந்த மடப்பசங்களுக்கு Strong என்ன,
லேசு என்னங்க என்று சொல்லித் தப்பித்துக் கொள்ளுவேன். அவரும் வேறு வழி இல்லாததால் சிரித்துக் கொள்ளுவார்.
(08.01.1959 அன்று கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம், இரணியல் ஆகிய ஊர்களிலும் சுற்றுப் பயணத்தின்போது பெரியார் சொற்பொழிவு விடுதலை 08.01.1959).
நூல் : பார்ப்பன புரட்டுக்கு பதிலடி
ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்
நூல் : பார்ப்பன புரட்டுக்கு பதிலடி
ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக