சனி, 15 ஜூலை, 2017

ஆரியர்கள் உயர்ந்தவர்கள்


``ஜெர்மனியில் இன்று ஆரியர்கள் உயர்ந்தவர்கள் என்றும், உலகத்துக்கே அவர்கள் நாகரிகத்தை ஏற்படுத்தப் போவதாகவும், மற்றவர்கள் தங்களுக்குக் கட்டுப்பட்டவர்களென்றும் சொல்லிவருவது யாவர்க்கும் தெரியும், இதனால் மிகவும் பயங்கர முடிவு ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை.

இந்து சமவெளிப் பிரதேசத்திலும் மொகஞ்சதாரோ பிரதேசத் திலும் வெட்டி எடுக்கப்பட்ட பண்டைக்காலத்துச் சின்னங்களிலிருந்து, ஆரிய நாகரிகத்திற்கு முன் ஒரு நாகரிகமிருப்பது நன்கு விளங்கும்.

மேற்கு ஆசியாவில், மத்தியதரைக்கடல் ஓரமாகவும் வடஇந்தியாவிலும் தான் பண்டைய நாளையில் சிறந்த நாகரிகமடைந்த மக்களிருந்து வந்தனர் என்று சொல்லப்படுமானால், இந்தியாவில் ஆரியர்கள் வரவால் நாகரிகம் புகுத்தப்பட்டதென்று சொல்வதில் ஏதேனும் அர்த்தம் இருக்கமுடியுமோ? என்பது யோசிக்க வேண்டியதாகும்.

நாகரிகம் தெற்கேயிருந்து வடக்கு நோக்கியோ, அல்லது கிழக்கிலிருந்து மேற்குத் திக்கை நோக்கியோ அல்லது அதற்கு நேர் எதிராகவோ பரவியிருக்கக்கூடும்.

பழையகால நிர்ணய நூல் பிரகாரம் பார்த்தால், ஆரியர்கள் இந்தியாவுக்கு மிகப் பிந்திய காலத்திலே வந்திருக்கிறார்கள் என்று சொல்ல வேண்டியதாயிருக்கிறது.

தென்னிந்தியாவின் பழக்க வழக்கங்களை நம்பினால் தெற்கே ஓர் உபகண்டமிருந்ததாகவும், அதன் பெரும்பாகத்தைக் கடல் கொண்டுவிட்டதாகவும், அப்பாகங்களில் உலகிலே தலைசிறந்ததாகக் கருதப்படும் நாகரிகம் இருந்து வந்ததாகவும் தெரிய வருகிறது.

தமிழ்க் கலைகள், மக்கள் சுதந்திரத்தோடு இருந்து வந்ததாகவும், மக்கள் எத்தகைய துன்பத்தையும் கண்டறியார்கள் என்றும் கூறுகின்றனர்.

பழைய பெருமையைக் குறித்துப் பேசுவதில் பலனில்லை என்று நாம் கருதுகிறோம்.

நமது முன்னோர்கள் கலாசாரத்தைக் குறித்தோ, மொழியைக் குறித்தோ சிறிதும் கவனம் செலுத்துவதில்லை. தெற்கே எங்கும்,

பழைய நாகரிகத்தைக் கண்டறியக்கூடிய நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை.

ஆரியர்கள்தான் குரு, சமஸ்கிருத மொழிதான் உயர்ந்த மொழி என்று கொண்டதால்தான், மற்றவைகள் மூலமாக ஏதாவது கற்றுக்கொள்ளலாம் என்பது அடியோடு புறக்கணிக்கப்பட்டது.

இதைக் குறித்து ஏதோ அங்கொருவர் இங்கொருவர் ஆட்சேபிக்கிறார் களேயல்லாது, சமீப காலம் வரை யாரும் பலமாகத் தங்கள் ஆட்சேபணை களைத் தெரிவிக்கவேயில்லை.

இந்தியாவில் உள்ள பலதிறப்பட்ட ஜாதிகள் கலந்துவிட்டன வென்றாலும், ஜாதியில் உள்ள உயர்வு தாழ்வு ஒரு சிலரைத் தாங்கள்தான் சுத்தமான ஆரிய வம்சத்தினர் என்றும்சமஸ்கிருதம்தான் உயர்ந்த மொழியென்றும், மற்ற மொழிக்கும் கலைக்கும் நாகரிகத்திற்கும் தாங்கள்தான் பாதுகாப்போர் என்றும் சொல்லும்படி செய்து வருகின்றது.

இந்த நிலையை இப்படியே விட்டுக்கொண்டு போனால், இதனால் வரும் பலன் மிக்க பயங்கரமாயிருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

(1940-இல் திருப்பதியில் நடைபெற்ற 10-ஆவது அகில இந்தியக் கீழ்நாட்டுக்கலை மாநாட்டின் வரவேற்புக் கழக தலைவராக இருந்த, திருவாளர் டி.. இராமலிங்கம் செட்டியார் அவர்களின்  சொற்பொழிவு)


நூல் : ஆரியமாயை

ஆசிரியர் “ அறிஞர் அண்ணா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...