வியாழன், 4 ஜனவரி, 2018

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்கான அவதூறுகளைத் தொடர்ந்து ஊடகங்கள் வழி பரப்புகின்றனர். இதனால் இளைஞர்கள் மற்றும் சில முற்போக்குச் சிந்தனையாளர்கள் கூட குழப்பம் அடைகிறார்கள். இப்படி எதிரிகள் பரப்பும் பொய்களில் ஒன்றுதான் மேற்கண்ட கேள்வி! எனவே, இதுசார்ந்த சில உண்மைகளைத் தொகுத்துத் தருகிறேன். 1. அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரின் கொள்கைகளை, சாதனைகளை, வரலாற்றை எல்லோரும் அறியும்படி நான் எழுதிய நூல் (மறைக்கப்பட்ட மாமனிர்கள்) திராவிடர் கழகத்தால் வெளியிடப்பட்டு, தொடர்ந்து நாடு முழுக்க விற்பனை செய்யப்படுகிறது. 2. இவர்களைப் பற்றி நான் பேசிய உரை பெரியார் வலைத்தளம் மூலம் உலகம் முழுவதும் பரப்பப்படுகிறது. 3. கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள், "மயிலாடன்" என்ற பெயரில், விடுதலையில் "ஒற்றைப்பத்தி” என்ற பகுதியில் நிறைய எழுதியுள்ளார். அவையும் தொகுக்கப்பட்டு நூலாகத் திராவிடர் கழகத்தால் விற்பனை செய்யப்படுகிறது. 4. இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவிடம் பராமரிப்பின்றி இருந்ததைப் படம் எடுத்து "உண்மை" இதழில் எழுதி, அரசு அதைச் சீர் செய்ய ஏற்பாடு செய்தது திராவிடர் கழகம். 5. உண்மை, விடுதலையில் இவர்களின் பிறந்த நாள், நினைவு நாள்களில் செய்திகள் வெளியிட்டு அவர்களை மக்களுக்குத் தொடர்ந்து நினைவூட்டி வருகிறது. 6. பெரியார் நூலக வாசகர் வட்டம் சார்பில் இவர்கள் இருவருக்கும் விழாக்கள் எடுத்து, அந்த விழாக்களில் சிறப்புப் பேச்சாளர்கள் மூலம் அவர்களது கொள்கைகளும், பெருமைகளும் பரப்பப்படுகின்றன. ஒரு நிகழ்வில் அய்யா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் பேத்தியை அழைத்து வந்து சிறப்பு செய்தது திராவிடர் கழகம். அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரின் கொள்கைகள் எப்போதும் பிரச்சாரம் செய்யப்படும். நன்றி! தரவு: மஞ்சை வசந்தன், பெரியார் திடல், சென்னை.

திங்கள், 18 டிசம்பர், 2017

திருமண எண்ணம் தோற்றத்துக்கும், அவசரத்துக்கும் முக்கியக் காரணம் - தந்தை பெரியார்


என்னைக் கொன்று விடுவதால் எனது பலதரப்பட்ட உள் எதிரிகளின் பல கஷ்ட, நஷ்டப் பிரச்சினைகள் தீர்ந்துவிடும் என்பது துர் ஆலோசனையின் முடிவாயிருந்ததால் அதற்கு வேண்டிய காரியம் சில நாட்களாக நடந்து வருவதாக அறிந்து வந்தேன்.

எங்கள் ஜில்லாவில் இது சாதாரணமாகப் பெரிய குடும்பங் களில் நடப்பது சகஜம். இதுபோலவே சென்னையிலும் எதிரியைக் கொன்று விடுவது என்பது சகஜம்.

அதிலும் சென்னையில் இந்த ஏற்பாடு சுலபமாய் செய்யக் கூடிய அளவுக்கு அங்கு ஆட்கள் உண்டு.

இந்தக் கொலை ஏற்பாட்டுக்குக் காரணம்என்னிடம் கொஞ்சம் பணமிருக்கிறது’, அதோடு அதிசயிக்கத்தக்க வண்ணம் என் உடல் நிலை நோய் நொடி இல்லாமல் நல்ல உழைப்புக்குப் பயன்பட்டு வருகிறது, என் ஆயுளும் எப்படியோ வளர்ந்து வருகிறது.

என் ஆயுள் உள்ளவரையிலும், சுயநலக்காரர்களுக்கும், இயக்கத்தால் பணம், பதவி, பெருமை பெறலாம் என்று அவசரப்படுபவர்களுக்கும், தன்னிஷ்டப்படி இயக்கத்தைத் திருப்பிக் கொள்ளலாம் என்று கருதுபவர்களுக்கும், இயக் கத்தின் பேரால் பணம் வசூல் செய்து வயிறு வளர்ப்பவர் களுக்கும், சில மைனர்களுக்கும் பெரிய சங்கடமாயிருந்ததால் என்னைக் கொன்று விடுவதைத் தவிர வேறு வழி சாத்திய மற்றதாகி விட்டது.

ஏன்எனில், எதிரிகள் பலர் வேறு வழியில் பல தடவை செய்த முயற்சிகள், எதிரிகளுக்குப் பயன் தராமல் தோல்வி அடைய வேண்டியதானதோடு, அதற்கு ஆக அவர்கள் நிபந்தனை அற்ற சரணாகதி அடைய வேண்டியதாகவும் ஏற்பட்டுவிட்டதால், கொலையே தக்க பரிகாரம் என்ற முடிவுக்கு வர வேண்டியவர் களாகி விட்டார்கள்.

6, 7 மாத காலமாய் என்னைச் சந்திக்க நேர்ந்த பல நண்பர்கள்வெளியே தனிமையாய்ப் போக வேண்டாம்என்று வலியுறுத்திச் சொல்லி வந்தார்கள். நான் அலட்சியமாக அதைக் கருதி, அப்படிப் போகிற உயிர் போகட்டுமே, நான் என்ன அற்ப வயதுக்காரனா? 70 ஆண்டைக் கடந்து விட்டேனே என்று சொல்லுவேன்.

அதற்கு அவர்கள் என்னைப் புகழ்ந்து கூறி எச்சரிக்கை செய்வார்கள். நான் வெளியில் செல்லும்போது வம்பில் நான்கூட வர வேண்டாம்என்றாலும் எனக்குத் துணை விடுவார் கள். என் கூடவே இருந்து இப்போது எனக்குப் பக்காத் துரோகி களான எனது சிஷ்யர்கள் என்பவர்களே கூட சதா என்னைப் பயப்படுத்துவார்கள். இந்தப் பழக்கத்தால் நானும் சதா துணை தேடுவதில் கவலை கொள்ளும்படியாக ஆகி விட்டேன்.

சென்னையில் நான் இருக்கும் வீட்டில் அடிக்கடி சந்தேகப்படும்படியாக பலர் வருவதும், நாம் கவனித்தால் சரியான தகவல் சொல்லாமல் ஓடுவதும், சிலரை நான் மேற்படி ஆள்களில் ஒருவரை விட்டு விரட்டுவதும், வருபவர்களை யெல்லாம் முதலில் சந்தேகித்து சோதனை பார்த்து உட்கார வைப்பதுமான காரியங்கள் வெட்கப்பட்டுக் கொண்டு செய்ய வேண்டியதாகி விட்டது. சீட்டு இல்லாமல் யாரையும் விட வேண்டாம் என்று கண்டிப்பாய் உத்தரவு போட்டு ஒரு ஆளைப் போட்டு விட்டேன். கூட இருக்கும் தோழர்கள் சதா என்னுடன் இருப்பதற்கு இதைப் பயன்படுத்திக் கொண்டு எனக்கு மேலும் கவலையை உண்டு பண்ணி விட்டார்கள்.

நிற்க, நான் பணம் காசு விஷயத்தில் அதிக சிக்கனப் புத்தி உள்ளவன், பணம் காசு விஷயத்தில் யாரிடமும் நம்பிக்கை வைக்க முடியாதபடி என்னைச் சுற்றித் திரிந்த தோழர்கள் நடந்து வந்தார்கள்.

இயக்கம் எப்படி இருந்தாலும், இயக்கத்துக்கு யார்  தலைவராய் இருந்தாலும், என்னுடைய கொள்கைகளும், கொள்கைக்கு ஏற்ற பிரசாரம் எனக்குப் பின்னும் நடந்தேற வேண்டும் என்கின்ற பேராசை எனக்கு உண்டு

இயக்கம் நடந்து வர ஏதாவது ஏற்பாடு இருந்தால் தான் முடியுமே ஒழிய, இப்போது போல் ஒரு மனிதனிடம் இருக்கும் தனி மரியாதையால் இனி நடந்து வர முடியாது என்கின்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டு 2 வருஷம் ஆகிவிட்டதுடன் அப்படிப்பட்ட தனி மனிதனை மக்கள்  இனி உண்டாக்கிக் கொள்ளவும் மாட்டார்கள் என்பதும் என் முடிவாகி விட்டது. மேற்கண்ட எல்லாக் காரணங்களாலும் நான் ஒரு ஏற்பாடு செய்ய எண்ணினேன். இந்த ஏற்பாட்டுக்கு சம்பத்தை பல தடவை நினைத்தேன். அவன் இயக்கத்தினுடையவும் என்னுடையவும் எதிரிகளினுடைய கையாளாகி விட்டான். மகா சூதனாகவும் காணப்பட்டு விட்டான். ஒரு தடவை அல்ல.

இந்த ஏற்பாட்டில் இன்று சென்னையில் தங்களுக்குள் ஒற்றுமை இல்லாவிட்டாலும்என்னை எப்படியாவது ஒழித்துக் கரைத்து விட்டு விட வேண்டும் என்ற காரியத்தில் - கருத்தில் சிறிது கூட பேதமில்லாத ஒற்றுமை கொண்ட கூட்டத்தவரையும், மற்றும் அவர்களது வெளியூர் பொறுப்பற்ற நண்பர்களையும் கண்டிப்பாய் நான் சேர்க்க மாட்டேன்என்றும், அனேகமாக அவர்கள் அந்த ஏற்பாட்டில் விலக்கப்பட்டே போவார்கள் என்றும் அவர்களுக்கு நன்றாய்த் தெரிந்து விட்டது.

அதற்கு ஆக அவர்கள் இந்த 5, 6 மாதமாக சிறப்பாக 3 மாதமாய் ஊர் ஊராகக் கட்சி சேர்த்தார்கள்.  இந்த நிலையானது நான் எல்லாத் தலைவரையும், தொண்டரையும் நிர்தாட்சணியமாய் நடத்தி வந்ததாலும், அவர்கள் யாராயிருந் தாலும் மிகவும் கண்டிப்புச் செய்து வந்ததாலும், என்னிடம் வெறுப்பும், துவேஷமும் கொண்டிருந்த மக்களில் உல்லாசத் துக்கும், சுயநலத்துக்கும், பெருமைக்குமாகக் கட்சியில் இருந்து பயனடைந்து வருகிறவர்களுக்கு என் மீது சமயம் பார்த்துப் பழி வாங்க வேண்டிய அளவு ஆத்திரம் ஏற் பட்டிருந்தது. அதிலும் சிறு பிள்ளைகளுக்கு அதாவதுநேற்று வந்து இன்றுபேச் சாளி, எழுத்தாளி ஆக ஆகிவிட்டதாகக் கருதிக் கொண்டிருப் பவர்களுக்கும், அடிக்கடி பேச்சுக்கு ஆகப் பல ஊர்களில் இருந்து அழைக்கப்படுகிறவர்களுக்கும் நான் எதிரியாகவே காணப்பட்டு விட்டதால், இந்தக் கூட்டமும் சேர்ந்து எதிரிக்குக் கையாட்களாக ஆகி ஒரு அய்க்கிய முன்னணி ஆகி விட்டார்கள்.

இதன் பயனாய் அவர்களிடம் விஸ்வாசமற்ற தன்மையையும், பொய்ப் பக்தி காட்டும் தன்மையையும் நான் தெளிவாய் கண்டு வந்ததோடு, அவர்கள் வெளியில் என்னைப் பற்றிப் பேசு வதையும், கட்சி சேர்ப்பதையும் நான் அடிக்கடி கேள்விப்பட்டு வந்தேன்.

இவைகள் எல்லாவற்றுடன் இந்தி எதிர்ப்பில் இந்தக் கூட்டம் செய்து வந்த துரோகமும் சேர்ந்து என் உணர்ச்சியையும், ஊக்கத்தையும் குறைத்து வந்ததோடு, இப்படிப்பட்ட ஆட்களை வைத்து இனி கட்சியில் ஒரு காரியமும் செய்ய முடியாது என்று கருதி, சீக்கிரம் ஏதாவது ஒரு கட்டுப்பாடான ஒரு ஏற்பாடு செய்ய வேண்டிய அவசியத்துக்குத் தூண்டி விட்டது.

கடைசியாக கோவை மாநாட்டில் மேடையிலும், தனிமை யிலும் இதைச் சொல்லி விட்டேன். அவ்வளவுதான் தாமதம். உடனே விஷமப் பிரசாரத்துக்குக் கட்டுப்பாடாய் ஆரம்பித்து விட்டார்கள். முதல் முதல் தஞ்சை திராவிட மாணவர் மாநாட்டில் கொட்டி விட்டார்கள்.

இதைவிடுதலையிலும் தந்திரமாகப் பிரசுரித்து விட்டார்கள்.  மற்றும் சில சங்கதிகள் என் காதுக்கு வந்தவுடன் அதைக் கண்டிக்கும் முறையில் ஒரு குறிப்பு எழுதச் செய்துவிடுதலைபத்திரிகையில் போடும்படி சென்னைக்கு அனுப்பி னேன். அதில் இரகசியம் என்று எழுதி அனுப்பினேன். அது போடப்படவில்லை. அதோடு மாத்திரமல்லாமல் அதை உரியவரல்லாதவர் இரகசியமாய் உடைத்துப் பார்த்து உடனே யாரைப் பற்றிப் போடும் படி எழுதினேனோ அவருக்குச் சேதி கொடுக்கப்பட்டு நேரில் போய்க் காட்டப்பட்டு உஷார் படுத்தப்பட்டு விட்டது.

 அச்சேதி சரியானபடி பிரசுரித்திருந்தால் இன்றையச் சம்பவங்கள் இவ்வளவு சீக்கிரத்தில் நடந்திருக்காது. எதிரி களுக்கும் இவ்வளவு செல்வாக்கு ஏற்பட்டிருக்காது.

அந்தச் சேதி எனது பத்திரிகையிலேயே போடப்படவில்லை என்பதும், உடனே தகவல் கொடுக்கப்பட்டது என்பதும் நான் தெரிந்த உடன்  பதறி விட்டேன். அதே ஆத்திரத்தில் நான் சென்னை வந்த உடன் ரிஜிஸ்ட்ரார் ஆபீசுக்குப் போய் நோட்டீஸ் கொடுக்கும் பாரமும் பெற்று விவரமும் தெரிந்து வந்தேன். கவலையோடு யோசித்தேன். இதன் மத்தியில் சில இரகசிய ஏற்பாடுகள், அதாவது இந்த எதிரிகள் ஊர் ஊராய்ச் சென்று ஒரு எதிர்ப்பை ஏற்படுத்தத் திட்டமிட்டிருப்பதையும் தெரிந்தேன்.

மணியம்மைக்குக் கூடத் தெரியாமல் அந்த பாரத்தில் கையெழுத்து வாங்கி ரிஜிஸ்ட்ரார் ஆபீசுக்கு அனுப்பி விட்டேன். ஆனால், நான் அதை அனுப்பியது அந்தக் கோஷ்டியைச் சேர்ந்த ஆள் வசமே அனுப்பியதால் அது திருட்டுத்தனமாய் பார்க்கப்பட்டு, உடனே வெளியாக்கப்பட்டு விட்டது. அதைப் பற்றிக் கவலைப்படாமல் ஊருக்குப் புறப் பட்டுப் போய் விட்டேன்.

பிறகு உடனே எதிரிகளால் அவர்கள் திட்டப்படி எதிர்ப்பு துவக்கப்பட்டது. பலருக்குத் தந்தி டெலிபோன் செய்து வரவழைத்துப் பேசி, ஆத்திரம் ஏற்படும்படியான பல பொய், கற்பனை, மிரட்டல்களைக் காட்டிக் கையெழுத்து வாங்கித் துண்டு விளம்பரம் அச்சடித்துக் கொண்டு ஜில்லா ஜில்லாவுக்கு ஆள்கள் புறப்பட்டார்கள். அது வெற்றிகரமாக நடந்து வந்தது. இந்த எதிர்ப்பு வேலை என் மனதில் தோன்றிய எண்ணங்களை உறுதிப்படுத்தி வந்தது. அதை தெரிவித்தும் விட்டேன்.

இதன் மீது எதிரிகளுக்கு  தங்கள் தோல்வி தெரிந்து விட்டதால் கொலை வேலையில் பிரவேசித்து விட்டார்கள். அதாவது கொலை வேலை நெருங்கிவிட்டது. பொறுப்புள்ள C.I.D..கள் என் வீட்டுக்கு வந்து ஜாக்கிரதையாக இருக்கச் சொன்னார்கள். கவர்ன்மெண்டு சீஃப் செக்ரடெரிவிடுதலைஆபீசுக்கு டெலிபோன் செய்து விஷயத்தை உணரும் முறையில் தோழர் குருசாமிக்குஎச்சரிக்கைசெய்தாராம்.

சில தோழர்கள் வீட்டுக்கு வந்துவெளியில் போகாதேஎன்றார்கள்.

பத்திரிகைக்காரர்கள் கேமராவுடன்  ஆபீசுக்கு வந்து படம் எடுக்க அனுமதி கேட்டார்கள். என் வாழ்க்கைச் சரிதமும் சொல்லச் சொன்னார்கள். எனக்குக் கோபம் வந்து விட்டது. ‘நான் என்ன  சாகப் போகிறேனா, என் படமும், வாழ்க்கைச் சரிதமும் கேட்கிறாயேஎன்றேன்.

அதற்கு அவர்,

வெளியில் நடக்கிற சங்கதி உங்களுக்குத் தெரியாது போல் இருக்கிறது. அதுதான் உங்களுக்கு இவ்வளவு கோபம் வருகிறதுஎன்றார்.

நான் செத்தால் மயிர் போச்சுது, என்ன தைரியம் உனக்கு? என்னையே வந்து போட்டோவும், சரித்திரமும் கேட்கிறாயே போ வெளியேஎன்று சொல்லி கோபமாய் விரட்டி விட்டேன். இவர்கள் பாரததேவி, தினசரி நிருபர்கள் என்று சொன்னார்கள்.

மறுநாள் ஒரு அடி நீளமுள்ள கத்தியோடு வீட்டிற்கு முன் நின்று கொண்டிருந்த ஒருவன் என்னைக் கண்டதும் கத்தியை மறைத்துக் கொண்டான். உடனே கமிஷனர் ஆபீசுக்கு ஆள் அனுப்பிப் போய் தகவல் கொடுத்து வருமாறு சொன்னேன். அங்கு சென்று பேச முடியாத நிலையில். ஒரு கூட்டம் இருப்பதாகப் போனவர் திரும்பி வந்தார். வந்தவர் நேரே சிந்தாதிரிப் பேட்டை போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் வேறு விதமாய் தகவல் கொடுத்தாராம். சிந்தாதிரிப்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் வந்து கூட்டத்தைக் கலைத்து விட்டு ஒரு கான்ஸ்டேபிளை உடுப்பில்லாமல் உட்கார வைத்துவிட்டுப் போய்விட்டார்.

அன்று எனக்கு வந்த ஒரு கடிதத்தில் உன் வீட்டின் முன்னும் ஆபீசின் முன்னும் கோட்சேக்கள் இருக்கிறார்கள். ஜாக்கிரதை என்று கண்டிருந்தது.

ரத்தத்தில் கத்தி மாதிரியும், ரத்தம் வழிவது மாதிரியும் சித்திரம் போட்டு சபதம் கூறி இருந்தது. பல கடிதங்கள் சத்தியம் செய்து ரத்தக்குறியும் கையெழுத்தும் இருந்தது. இவை களெல்லாம் C.I.D..-க்குக் காட்டப்பட்டன.

அவர் கவலைப்பட்டு இந்த ஆள்களில் சிலரைத் தெரியும் என்றும், ஆனால் சில ஆளுக்கு C.I.D. போட்டிருப்பதாகவும் சொல்லிப் போனார்.

இதன் மத்தியில் இந்த 2 மாதத்தில் தமிழ் பெரியார் திரு.வி.. அவர்கள் என்னிடமும், மணியம்மை இடமும் சுமார் 4, 5 தரம்சிறிது நாட்களுக்கு நீங்கள் வெளியில் செல்ல வேண்டாம்என்று மிகக் கவலையோடு சொன்னார். சில ஆளுகள் பெயரையும் சொன்னார். எனக்கு அலட்சியத்துடன் இயக்கக் கவலையும் உண்டாயிற்று.

கடைசி நாள் 9-ந் தேதி உடுமலைப்பேட்டையில் என் பேரில் கேஸ் ஏற்பட்டு சம்மன் வெளியாய்விட்டதாகத் தகவல் வந்தது.

உடனே அவரசப்பட்டேன். ஒரு நபரை அழைத்தேன். ஒரு வீட்டைக் குறிப்பிட்டு அவ்விடத்துக்கு ரிஜிஸ்ட்ராரை அழைத்து வாருங்கள் என்று சொல்லி அனுப்பிவிட்டு, முன்னெச்சரிக்கை இல்லாமல் தியாகராயர் நகரில் ஒரு வீட்டுக்குச் சென்றோம். 15 நிமிஷத்தில் அங்கு ரிஜிஸ்ட்ரார் வந்தார். பதிவு நடந்தது. வீட்டிற்கு வந்து ஈரோட்டிற்குப் புறப்பட்டு விட்டேன்.

இதுவரை ஒரு உயிரைக் கொன்றால் போதும் என்று கருதிய என் எதிரிகள், இனி இரண்டு உயிரைக் கொன்றாக வேண்டிய அவசியத்துக்கு வந்துவிட்டார்கள் என்பது தான் இந்தப் பதிவுத் திருமணத்தால் இப்போதைக்கு எனக்கு ஒரு ஆறுதல்.

நான் மேலே குறிப்பிட்டவைகள் எல்லாம் ஆதாரத்துடன் குறிப்பிடுவதாகும். ஒன்றும் உத்தேசமல்ல. கற்பனை அல்ல. இதில் பெயர் குறிப்பிட்டுள்ள எந்த நபரை வேண்டுமானாலும் கண்டு கேட்டுக் கொள்ளலாம். ரிக்கார்டுகள் வேண்டுமானாலும் பார்த்துக் கொள்ளலாம். பரிகாசம் செய்பவர்கள் பொறுப்பில்லாதவர்களே யாவர்.

ஆகவே, இவர்கள் சதியில் சம்பந்தப்பட்ட என் எதிரிகள், வெகு சுலபத்தில் பாமர மக்களை என் மீது வெறுப்படையச் செய்து சமயம் பார்த்துக் கொண்டிருந்து கன்னியாகுமரி முதல் சென்னை வரை மக்களை ஏய்த்து விட்டார்கள், எனக்கு எதிர்ப்பாய் கிளப்பியும் விட்டார்கள். கண்டபடி எழுதும்படியும் இவர்கள் எழுதியவற்றில் கையெழுத்துச் செய்யும்படியும் செய்து விட்டார்கள் என்பதில் அவர்களுக்கு மிகுந்த வெற்றியும், மகிழ்ச்சியும் இருக்கலாம். ஆசை தீரக் கீழ்த்தரமாய் தங்கள் பத்திரிகைகளில் எழுதிக் கொள்ள வாய்ப்பும் பெற்று விட்டார்கள் என்றாலும், இந்தக் காரியத்தில் தாங்கள் பெருத்த ஏமாற்றமடைந்தார்கள் என்பதோடு அதை இப்போதே உணரத் தொடங்கி விட்டார்கள்.

இனி என்னோடு கலந்து வேலை செய்யவும்,  மிக மிக வெட்கப்பட வேண்டிய நிலைக்கும் வந்து விட்டார்கள்.

நானும் எதிரிகளின் விஷமப் பிரசாரத்துக்கும், சதி வேலைகளுக்கும் தாராளமாய் காலமும், வாய்ப்பும் இருக்கும்படியான தன்மை உண்டாக்கிக் கொடுத்தது போல் ஜெயிலுக்குப் போகப் போகிறேன்.

இளைஞர்கள் எப்படியோ போனாலும், சுயநலக்காரர்கள் எப்படியோ போனாலும் பொறுப்பு உள்ள மக்கள் உஷாராய் இருங்கள்.

எனது திருமணத் தோற்றத்துக்கும், அவசரத்துக்கும் இது முக்கியக் காரணம்.
நம்பிக்கையான ஆள் கிடைக்கவில்லைஎன்று சொன்னதற்கு ஆக கோபித்துக் கொண்டதாக வேஷம் போட்டு, மக்களுக்கு ஆத்திரத்தை மூட்டிய உத்தமர்களின் யோக்கியதை ஆதாரத்துடன் பின்னால் விளக்கப்படலாம்.
பொறுத்து இருங்கள்.

-.வெ.ரா.16.7.1949 ‘குடிஅரசு’ (13.7.1949 ‘விடுதலை’)

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...