ஞாயிறு, 17 டிசம்பர், 2017

‘தமிழ்ச் சித்தர்கள் இலக்கியங்களில் வடமொழி ஆட்சி’ - - டாக்டர் இரா. மாணிக்கவாசகம்


முன்னுரை :

இறையுணர்வு மிக்கோரைப் பத்தர், சித்தர் என இரு வகையினராகப் பிரிக்கலாம். முன்னவர் இறை உருவ வழிபாட்டில் நம்பிக்கையுடையவர். கோயில்தோறும் சென்று பல்வகையாகப் பாடிப் பரவியவர். பின்னவர் அஃதொழிந்தவர். சுருங்கச் சொன்னால் முன்னவர் புறத்தவம் பயின்றவர். பின்னவர் அகத்தவம் பயின்றவர். இரு பிரிவினராலும் தமிழ்மொழி சிறந்துள்ளது. எனினும் தமிழ்ச் சித்தர்களால் வேறு ஒரு பயனும் விளைந்துள்ளது. அதுவே பல்துறைச் சமூக நலப்பணிகள்.

சமுதாயத்துடன் சேர்ந்தும் சேராமலும் தாமரை இலை மேல் நீர்போல வாழ்ந்த இவர்கள் யோகம் பயின்று விரிந்த காட்சியுற்றுப் பொருள்களின் உண்மையியல்புகளையும், அவற்றைப் பயன்படுத்தும் முறைமைகளையும் அறிந்து மந்திரம், மருந்து, யோகம், ஞானம், வேதியல் (ரசவாதம்) முதலிய பல துறைகளிலும் மிகப்பல நூற்கள் தோன்றக் காரணமாக இருந்தவர்கள். இவர்களது நூற்களில் வடமொழியாக்கம் பற்றிச் சிறிது இக்கட்டுரையில் காணலாம்.

சித்தர்கள் இலக்கிய மரபு :-

தமிழ் இலக்கியங்களைக் காலமுறைப்படி வகைப்படுத்தினால் ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு வகையானவை தோன்றின என்பது விளங்கும். ஒவ்வொன்றும் ஒவ்வோர் அமைப்போடும் பயனோடும் விளங்குவது பெரும்பாலான பழைய இலக்கியங்கள் அல்லது பாடல்கள் அவற்றுக்குரிய ஆசிரியரால் எழுதப்பெற்றனவாகவோ அல்லது அவர் காலத்தில் வாழ்ந்த பிறரால் எழுதப்பெற்றனவாகவோ இருக்கும். ஆனால், சித்தர் பாடல்கள் என்று இன்று நமக்குக் கிடைக்கும் இலக்கியங்கள் அனைத்தும்-எந்தத் துறையைச் சார்ந்ததாக இருந்தாலும்-அந்தந்த ஆசிரியரால் எழுதப் பெற்றனவாயிராதென்பது உறுதி. அதற்கு இரண்டு காரணங்களைக் கூறுதல் கூடும்.

முதலாவதாக இவர்கள் சமுதாயத்தை விட்டு மிக ஒதுங்கி வாழ்ந்தவர்கள்.
பேய்போல் திரிந்து பிணம்போல் கிடந்து இட்ட பிச்சையெல்லாம்
நாய்போல் அருந்தி நரிபோல் உழன்று நன் மங்கையரைத்
தாய்போல் கருதித் தமர்போல் அனைவர்க்கும் தாழ்மை சொல்லிச்
சேய்போல் இருப்பர் கண்டீர் உண்மை ஞானம் தெளிந்தவரே

பற்றனைத்தும் விட்ட பட்டினத்தார் தரும் உண்மைச் சித்தருக்கான விளக்கம் இது. இவ்வளவு ஒதுங்கி வாழ்ந்த சித்தர்கள் உட்கார்ந்து கொண்டு நூற்களை எழுதினர் என்பது பொருந்துமாறில்லை. இரண்டாவது காரணம் இதற்குத் துணையாய் அமைவது - மிகப் பல சித்தர்கள் பாடல்களில் பேச்சு வழக்குச் சொற்களும் புதிய சொல்லாட்சிகளும் மிகப் பரவலாகக் காணப்படுகின்றன.

மக்கட் சமுதாயத்திற்குப் பயன்பட வேண்டுமென்றே பல அரிய செய்திகள் சித்தர் பாடல்களில் கூறப்பெற்றுள்ளன. அவற்றில் பெரும்பான்மையானவை பலருக்கும் புரியாக் குறிப்பு மொழியாலும் குழூஉக் குறியாலும் பாடப் பெற்றவை. பண்படா மனத்தோர் பயிலக்கூடாது அல்லது அறிந்து கொள்ளக்கூடாது என்றே அவர்கள் அத்தகைய முறையைப் பயின்றனர் என்பதை அவர்கள் பாடல்கள் வாயிலாகவே அறிகின்றோம். எனவே, கருத்துக்குச் சித்தர்கள் சொந்தக்காரர்கள்; கவிதைக்கல்லர்.

உண்டான மூலியைத்தான் குகையினுள்ளே
ஒளித்து வைத்தார் சித்தரெல்லாம் வெளியாமென்று
பண்டான சித்தருக்கு மூலியிட்டுப் பாவிகட்கும்
கர்மிகட்கும் கிட்டுமோ சொல்
செண்டான பூவுலகில் மானுட ரெல்லாம்
செத்தவர்க ளெழுந்திருப்பார் இடம்கொள்ளாது
கொண்டான விதியாளி வந்தானாகில்                      கூப்பிட்டுத் தான்கொடுப்பார் சித்தர்தானே;
- 167 புலிப்பாணி வைத்தியம் 300

தாமிந்த சூத்திரத்தைக் கொளியா தீந்தால் தலைதெறித்துப் போகுமடா சத்தியம் சொன்னேன்
நாமிந்தப் படிசொன்னோம் யோகிக் கீவாய்”- 216 அகத்தியர் பூரண சூத்திரம்

குணமாகப் பலபேர்க ளிடத்தில் வாதம் கூக்குரலாய்ச் சொன்னாக்கால் குடி கெடுக்கும் பணம்போகு மாக்கினைதான் மிகவுண்டாகும் பதிவான தலைபோகும் பாரிலேதான்

உணவாக உனைநம்பார் உலுத்தமாடு
உற்றுமே பொருளறியார் ஒழுங்குமில்லை
பிணம்போல இருந்துமே வேலைபாரு
புத்ததனில் வைத்திருக்கும் பிரிதிதானே
- 103, யாகோபு சுண்ணம், 300

மேலே காட்டப்பெற்ற பாடல்கள் முற்கூறிய கருத்துக்குத் துணைசெய்வதைக் காணலாம்:

காயகல்பம், ரசவாதம், பல்வகை மந்திரங்கள் - இன்னமும் இவை போன்ற அரிய முறைகளைப்பற்றிய உண்மைகளை அனைவரும் அறிந்து கொண்டால் ஏற்படும் விளைவினை எண்ணிப் பார்க்கவும் முடியாதன்றோ? அவரவர்கள் தம்தம் விருப்பப்படி செயல்படத் தொடங்கின் இயற்கையின் கட்டுக்கோப்பு உடைபட்டுப் போகும். ஆகவே மறைவாகவே வைக்கப்பெற்றன.

இத்தகைய கருத்துக்களைஎழுதாக் கிளவியாககுரு மாணவர் முறையிலே கற்றுத்தரப்பெற்றன. மறைவாக இருந்த இவ்வரிய கருத்துக்களைமறைஎன்று கூறும் மரபு உண்டாகியது. வடமொழியாளர் வேதம் என்ற சொல்லால் இத்தகைய மறைபொருட்களைக் குறித்தனர். ‘வித்என்னும் சொல்லின் அடியாக இது பிறந்தது என்பர். ஆனால் மறைத்தல் அல்லது வேய்தல் என்னும் சொல்லின் அடியாக மறையும் வேதமும் தோன்றின என்பது பொருந்தும். ‘கூரை வேய்ந்தான்என்பதும் காண்கநீண்ட காலமாக மறைவாக செவி வழியாகவே கூறப்பெற்று வந்த அரிய கருத்துக்களைப் பின்னர் தோன்றியவர்கள் குறிப்பாகவும் குழூஉக் குறியாகவும் வெளிப்படுத்தினர் ஆதலின் அப்பாடல்களில் பேச்சு வழக்குச் சொற்களும் புதிய சொல்லாட்சிகளும் மிக அதிக அளவிற்கு இடம் பெற்றன. எனவே, சித்தர் பாடல்களில் இடம்பெறும் சொற்களை வைத்துக் கொண்டு அவர்களது காலத்தைக் கணிப்பது தவறுடையதாக அமையும். ஆதலின் இவர்கள் பெயரில் கிடைக்கும் பாடல்கள் அவர்கள் காலத்தில் பாடப்பெற்றிருக்க வாய்ப்பில்லை எனலாம்.

இனி, இவர்கள் தொண்டாற்றிய துறைகளை மருத்துவம், வேதியியல் (ரசவாதம்) யோகம், ஞானம் என்னும் நான்கு பெரும் பிரிவினுள் அடக்கலாம். இந்த நான்கு துறைகளிலும் தமிழர் மிகுதொன்மைக் காலம் தொட்டே புலமை மிக்கவராய் விளங்கினர் என்பதற்கும் வேற்றுமொழியினர் அல்லது வேற்றுநாட்டினர் தொடர்பாலும் இவ்வறிவினைப் பெறவில்லை என்பதற்கும் சித்தர் பாடல்களே பெரும் சான்றாக விளங்குகின்றன.

வடமொழியாக்கம்

தமிழ்ச் சித்தர் பாடல்களில் மிகப் பரவலாகக் குறிப்பு மொழியும் குழூஉக் குறியும் இருப்பினும் வட சொல்லாக்கம் மிக அதிக அளவில்-எல்லாத்துறைப் பாடல்களிலும் இடம் பெற்றுள்ளது என்பதை நினைத்துப் பார்க்க வியப்பாக உள்ளது. தமிழர்க்கான இயல்பான பெருமை குன்றும் அளவிற்கு இடம் பெற்றுள்ளது.

புகழ் பெற்ற பதினெண் சித்தர்களுக்குக் குருவாக இருந்தவர் அகத்தியர். ஆதலின் அவரைக் குருமுனி எனக் குறிக்கும் மரபு இருந்தது.

ஆமென்றஎன் பேரகத்தியனாகும் அருளினோம்
என்னுடைய சீஷர் பதினெண்பேர்
தேமென்ற தென்பொதிகை தென்கயிலை சீஷர்
தேறினாரிவர் பெருமை”.
- 77 அகத்தியர் சவுமிய சாகரம் 1200

சீரேதான் சங்கத்தார் எல்லாம் கூடி
சிறப்புடனே அரங்கேற்றம்
நீரேதான் அகத்தியர்க்குக் குருபட்டம்
திகழாகத் தான்கொடுத்தார் தானே”.
- 699 - II காண்டம், அகஸ்தியர் 12000

இப்பாடல் வரிகள் மேற்கூறிய கருத்துக்குத் துணை நிற்பன. இவர் குடக்குத் திசையில் உள்ள மலையை வாழ்விடமாகக் கொண்டிருந்தவர். ஆதலின் குடமுனி எனப் பெயர் பெற்றார்.

திசையைக் குறிக்கும் சொல்லாகியகுடக்குஎன்பதைக்குடம்என ஆக்கி அதன் வட சொல்லாகியகும்பம்என மொழிபெயர்த்து அதில் தோன்றியவர் என்று ஒரு கதையையும் கட்டிவிட்டுக்கும்பமுனிஎன்றும் குறுகிய வடிவுடைய குறுமுனி என்றும் விளக்கம் தந்து அவரது வடிவையும் புகழையும் குறைத்தனர் ஒரு சாரார் என்பதை நினைக்கும் தோறும் வேதனை மேலோங்கும்.

குடமூக்கு என்ற இனிய தமிழ்ப் பெயர் கும்பகோணம் என மாற்றப்பெற்றமை இணையான பிறிது ஒரு எடுத்துக்காட்டு. திருமறைக்காடு என்பதை வேதாரண்யம் என்றும் பழமலை என்பதை விருத்தாசலம் என்றும் மாற்றம் செய்யப்பட்டுள்ளமை நோக்கற்குரியது.

மருத்துவத்தில் வடமொழி

நீர், நிலம் இவற்றில் வளர்ந்துள்ள செடி, கொடி, மரம் ஆகியவற்றின் இலை, பூ, பிஞ்சு, காய், கனி, விதை, பட்டை, வேர் ஆகிய அனைத்து உறுப்புக்களின் குணம் அறிந்து நோய்க்குத் தக்க மருந்தாக்கியுள்ளனர் நம் நாட்டு சித்தர்கள். இத்துடன் அமையாமல் உலோகங்களின் குணங்களையும் அறிந்து அவற்றை நீறாக்கி (பஸ்பம்), நோய்களுக்குத் தந்துள்ளனர். எந்தப் பொருளை எப்படித் தூய்மை செய்தல் வேண்டும், எப்படி எரித்தால் (புடமிடல்) நீறாகும் என்பனவற்றையும் அறிந்திருந்தனர். எந்தவித அறிவியல் கூடமோ, சாதனமோ இல்லாமல் இவற்றை அறிந்திருந்தனர் என்பதை நினைத்துப் பார்க்கும்போது எவராலும் வியவாதிருக்க முடியாது.

தமிழ் நாட்டு மூலிகைகளையும், உலோகங்களையும் கொண்டு தமிழ் மருத்துவர் கண்டதே தமிழர் மருத்துவம். இத்தமிழ் மருத்துவம் தோன்றவும் வளரவும் காரணமாயிருந்தவர்கள் சித்தர்கள். தமிழ்நாட்டு மலைகளிலும் காடுகளிலும் அலைந்து திரிந்த இவர்களின் அனுபவங்களின் விளைவே இம்மருத்துவ முறை எனலாம். ஆனால், தற்போது கிடைக்கும் மருத்துவ நூல்களில் காணப்பெறும் சொற்களில் எழுபத்தைந்து விழுக்காடு நோய்ப் பெயர்கள், மருந்துப் பெயர்கள், பொருட் பெயர்கள் - அனைத்தும் வட சொற்களாகவே விளங்குகின்றன. வடமொழி ஆதிக்கம் பெற்றிருந்தபோது இவை எழுதப் பெற்றிருத்தல் வேண்டும்.

தமிழர் கண்ட மருத்துவத் துறையில் தற்போது வழங்கி வரும் சொற்களும், இணையான தமிழ்ச் சொற்களும் கீழே சான்றுக்குச் சில தரப் பெற்றுள்ளன.

மூலிகை வகை :
சௌந்தர்யம்              -              வெள்ளாம்பல்
ப்ருந்தா            -              துளசி
சப்ஜா -              திருநீற்றுப் பச்சை
கூஷ்பாண்டம்          -              பூசணி
சாயாவிருட்சம்       -              நிழல்காத்தான்
ரத்தபுஷ்பி     -              செம்பரத்தை
மருந்து வகை :
ஒளஷதம்     -              அவிழ்தம்
லேஹியம்  -              இளக்கம்
பஸ்பம்               -              நீறு
கஷாயம்        -              குடிநீர்
ப்ரமாணம்     -              அளவு
சூரணம்           -              இடிதூள்
நோய் வகை :
திருஷ்டி         -              கண்ணேறு
க்ஷயம்             -              என்புருக்கி
ஆஸ்துமா       -              ஈளை இரைப்பு
அரோசகம்    -              சுவையின்மை
அஜீர்ணம்      -              செரியாமை
குஷ்டம்          -              தொழுநோய்
மருந்துப் பொருள் வகை :
சொர்ணமாட்சிகம்                -              பொன்னிமிளை
நேத்ரபூஷ்ணம்         -              அன்னபேதி
ப்ரவளம்         -              பவழம்
நவநீதம்          -              வெண்ணெய்
லவணம்        -              உப்பு
தசமூலம்      -              பத்துவேர்
த்ரிகடுகு         -              முக்கடுகு
த்ரிபலா           -              முப்பலா

வேதியலில் வடமொழியாக்கம் :

வாதி கெட்டு வைத்தியன்என்பது தமிழில் வழங்கும் ஒரு பழந்தொடர். பல்வகை மருந்துப் பொருள்கள், மூலிகைகள், உலோகங்கள் முதலியனவற்றோடு பயின்று பயின்று வேதையில் வெற்றி காணமுடியாமல் இறுதியில் மூலிகையின் குணம் முதலியன அறிந்தமையால் மருத்துவராவர் என்பது இத்தொடரின் பொருள். ரசவாதம் எனத்தற்போது குறிக்கப்பெறும் சொல்லுக்குப் பண்டைய இலக்கியங்களில் வேதித்தல் என்ற சொல்லே காணப்படுகின்றது. வேதை என்ற சொல்லும் காணப்படுகின்றது.

பரிசோதனைக் குழாய், மருந்துப் பொருட்கள், வாயு அடுப்பு போன்ற எந்தவிதத் துணைக் கருவிகளும் இல்லாமல், துருத்தி பச்சிலை முதலியன கொண்டே வேதித்தனர் என்பது அவர்தம் எல்லையில்லா அறிவாற்றலை விளக்கும். இதைக் காட்டிலும் வியக்கத்தக்க முறைகள் இருந்ததாகச் சென்ற நூற்றாண்டின் தலைசிறந்த சித்தராக விளங்கிய இராமலிங்க அடிகளாரது குறிப்புக்களால் அறியலாம். இவர் வேதை (ரசவாதம்) ஏழுவகையாகவும் துணை வேதை (உபரசவாதம்) ஏழுவகையாகவும் ஆற்றல் கூடும் என்கிறார்.

ரசவாதம் :

ஸ்பரிசவாதம்             -              தீண்டி வேதித்தல்
ரசவாதம்       -              மருந்தால் வேதித்தல்
தூமவாதம்  -              புகையால் வேதித்தல்
தாதுவாதம் -              உலோகத்தால் வேதித்தல்
வாக்குவாதம்            -              சொல்லால் வேதித்தல்
அக்ஷவாதம்               -              பார்வையால் வேதித்தல்
அங்கப்பவாதம்        -              இறையுணர்வால் வேதித்தல்
எளிதில் புரிந்துகொள்ள முடியாத சொற்களால் இராமலிங்க அடிகளாரே எழுதியுள்ளது வியப்பு. வடசொற்களுக்கு இணையான தமிழ் அடுத்து எழுதப் பெற்றுள்ளது காண்க.

உபரசவாதம் :

மந்தரவாதம்              -              எழுத்தால் வேதித்தல்
புரீஷவாதம்               -              சிறுநீரால் வேதித்தல்
தூளனவாதம்            -              கால் தூசால் வேதித்தல்
வாயுபிரேரகவாதம்             -              நச்சுக்காற்றால் வேதித்தல்
பிரவேச விசிரிம்பிதவாதம்- தாதுப்பொருட்களால் வேதித்தல்
தேவாங்க வாதம்   -              தியானத்தால் வேதித்தல்
தந்திர வாதம்             -              காரணமின்றி வேதித்தல்
வடசொற்களுக்கான பொருளும் உடன் தரப்பெற்றுள்ளன.

இத்தகைய கருத்துக்களை ஊன்றிப்படித்து ஆழ்ந்து சிந்திக்கின் அறிவியலில் மிகப் பன்மடங்கு வளர்ந்துள்ள இக்காலத்தில் ஆராய்ச்சிப்பூர்வமாக மிகப்பெரும் அளவு பணம் செலவு செய்தாலும் சாதாரண உலோகத்தைத் தங்கமாக மாற்ற முடியாத அரிய செயலை மிக எளிதாக மேற்காட்டிய வகைகளில் செய்தனர் நம் முன்னோர் என்பதை நினைத்துப் பார்த்துப் பெருமிதம் அடையாமல் இருக்கமுடியாது; வியவாமலும் இருக்க முடியாது. இதைவிட வியப்பு அத்துணை சொற்களும் இத்துறையில் வட சொற்களாக இருப்பதுவே.

ஞானத்தில் வடமொழி : பண்டைத் தமிழகத்தில் பயின்று வந்துள்ள மிகு பழங்கடவுட் கோட்பாடு சிவன் தொடர்பானது ஆகும். பிற்காலத்தில் தோன்றிய பல்வகைப் புராணங்கள், தலக்கதைகள், சமய இலக்கியங்கள் ஆகியவை சிவனைப்பற்றித் திசை திருப்பும் உண்மைக்குப் புறம்பான கதைகளைக் கூறி இழிவுபடுத்தும் நிலைக்குக் காரணமாயின என்பது உண்மை. ஓர் இயக்கத்தின் ஒப்பற்ற தலைவனாக விளங்கியவன் சிவன். அனைத்துச் சித்தர்களும் இக்கருத்தைக் கூறுவதைக் காணலாம். சிவன் அகத்தியர்க்கு உணர்த்த, அகத்தியர் பிறருக்கு உணர்த்த வந்த ஆன்மீக அறிவு என்பதைச் சித்தர்கள் மரபு ஆய்வாளர்கள் நன்கு அறிவர். இந்தச் சித்தர்கள் கண்ட கடவுட்கொள்கையே சித்தாந்தம் என்பது. சித்தர்கள் கண்ட முடிபு என்பது இச்சொல்லின் பொருளாகும்.

தமிழகத்தில் கி.பி. 11ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் தோன்றிய சைவ சமய சாத்திரங்கள் பதினான்குக்கும் அடிப்படை சித்தர் பாடல்களே. காலம் கணித்துச் சொல்லமுடியாத வாழ்வினையுடைய சித்தர்களில் தொன்மையான அகத்தியர், தமிழில் முதல் தந்திர சாத்திரம் எழுதிய திருமூலர் முதலியோரின் நூல்களில் காணப்பெறும் கருத்துக்களின் ஒருபகுதியே சாத்திரங்களாக மலர்ந்தது என்பதை இரண்டும் பயின்றார் அறிவர். தத்துவங்களைச் சொன்ன அவர்கள் சமயம் என்னும் வட்டத்தை உருவாக்கவில்லை. பின்னர் வந்தவர்களே சைவ சித்தாந்தம் என்னும் எல்லையுடைய சொல்லைத் தோற்றுவித்தனர்.

தமிழ்ச் சித்தர்களால் தோற்றுவிக்கப்பட்டுப் பின்னர் வந்த சாத்திர வல்லுநர்களால் வளர்க்கப்பெற்ற சித்தாந்தத்தில் காணப்பெறும் வடசொற்களின் விழுக்காடும் வியக்கத்தக்கதாகவே உள்ளது.

கீழே சில வடசொற்களும் இணையான தமிழ்ச் சொற்களும் சான்றாகத் தரப் பெற்றுள்ளன.
சர்வஞ்ஞன்               - முற்றுணர்வினன்
இச்சா சக்தி                - விழைவாற்றல்
கிரியாசக்தி                - செயலாற்றல்
ஞானசக்தி  - அறிவாற்றல்
திரோதானசக்தி    - மறைப்பாற்றல்
அனுக்கிரகசக்தி    - அருளாற்றல்
மலபரிபாகம்            - மலநீக்கம்
இந்திரியம் - பொறி
கரணம்          - கருவி
சாலோகம்  - இறையுலகு பேறு
சாமீப்யம்     - இறையருகு பேறு
சாரூபம்        - இறையுரு பேறு
சாயுச்சியம்                - இறையாதல் பேறு
பஞ்சாட்சரம்             - அய்ந்தெழுத்து
சகமார்க்கம்              - தோழமை நெறி
தாசமார்க்கம்           - அடிமை நெறி
சற்புத்ரமார்க்கம்   - மகன்மை நெறி
இத்தகைய சொற்களின் பட்டியல் மிகப் பெரிதாகும் தன்மையதுஇடம் கருதி சில சான்றுகளே தரப்பெற்றன.

யோகத்தில் வடமொழி :

இணைதல் என்னும் பொருளுடையயுஜ்என்னும் சொல்லில் இருந்து யோகம் என்னும் சொல் தோன்றியதாகச் சொல்வர். சிற்றணு பேரணுவுடன் ( ஜீவன் - சிவனுடன் ) இணைதற்கான முயற்சியே இது. இதுவும் தமிழர்க்குத் தொன்றுதொட்டு அறிமுகம் ஆன துறையே. இந்திய நாகரிகத்தின் தொன்மையான சிந்துவெளிப் பகுதியினர் யோகம் பயின்றனர் என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன என்பதையும், அந்த நாகரிகம் திராவிட நாகரிகமே என்பதையும் திராவிட நாகரிகம் தமிழர் நாகரிகமே என்பதையும் ஆராய்ச்சி அறிஞர்கள் பலரும் ஏற்பர்.

இந்த இறையொன்றல்  ( யோகம் ) துறையிலும் வடசொற்கள் மிகுந்து காணப்பெறுகின்றன.
சான்றாகச் சில :
அஷ்டாங்க யோகம்            -              எண்நிலையொன்றல்
அஷ்டமா சித்து       -              எண்பெரும் பேறு
ரேசகம்            -              விடுதல் ( வளி )
பூரகம்               -              வாங்கல் ( வளி )
கும்பகம்         -              உள்ளடக்கல்
பிரமாந்திரம்               -              பெருந்துளை
ஸ்தூல தேகம்            -              பருஉடல்
சூட்சும தேகம்           -              நுண்உடல்
சாக்கிரம்        -              நினைவு
சொப்னம்       -              கனவு
துரியம்            -              பேருறக்கம்
துரியாதீதம் -              உயிர்ப்படங்கல்
காயப் பிரவேசம்     -              கூடுவிட்டுக் கூடுபாய்தல்
ஆகாயப் பிரவேசம்              -              வெளிப்பயணம்

பிறதுறைகள் :

மேற்காட்டிய துறைகளில் மட்டுமல்லாமல் சோதிடம், மந்திரம் ஆகிய சித்தர்கள் கண்ட பல துறைகளிலும் குறிப்பிடத்தக்க அளவிற்கு வட சொல்லாக்கம் நிகழ்ந்துள்ளன என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.

முடிவுரை :

தமிழகத்தில் தோன்றிய இறையுணர்வு மிக்கச் சித்தர்கள் தமிழுக்கும் மக்கட் கூட்டத்திற்கும் மருத்துவம் முதலிய பல துறைகளினாலும் தொண்டாற்றியுள்ளனர் என்பதையும், அந்த நூல்களில் கூறப்பெற்றுள்ளவற்றில் பல மறைபொருட் கூற்றாகவே இருப்பினும் எவ்வாறோ வடசொல்லாகவும் விரைந்து நிகழ்ந்துள்ளன என்பதையும் சிற்சில சான்றுகளுடன் இக்கட்டுரையில் கூறப்பெற்றது.

தமிழ்ச் சித்தர்கள் கண்ட அனைத்துத் துறைகளும் இன்றைய தமிழகத்தில் உள்ளன. ஆனால் சொற்கள் இல்லை அவற்றை மீண்டும் தமிழாக்கி மக்கள் வழக்கில் கொண்டுவரச் செய்து தமிழும் தமிழனும் இழந்த புகழை நிலை நிறுத்துவதே அவை பயின்ற அறிஞர்தம் கடனாக இருத்தல் வேண்டும்.

(நூல்  - சமற்கிருத ஆதிக்கம்)
பதிப்பாசிரியர் : கி.வீரமணி


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...