திங்கள், 18 டிசம்பர், 2017

இங்கர்சாலின் வாழ்க்கை வரலாறு

இராபர்ட் கிரீன் இங்கர்சால் 1833-ஆம் வருடம் ஆகஸ்டு 11-ஆம் தேதி அமெரிக்காவிலுள்ள நியூயார்க் மாகாணத்தில் ட்ரெஸ்டன் என்ற ஊரில் பிறந்தார். அவருடைய தந்தையான ரெவரெட் ஜான் இங்கர்சால் என்பவர் ஒரு பாதிரியார். அவருடைய தாயாரான மேரி லிவ்விங்ஸ்டோன் அழகும் நற்குணமும் படைத்தவர். இங்கர்சால் இரண்டு வயதுக் குழந்தையாயிருக்கும் காலத்திலேயே அவ்வம்மையார் உயிர்துறந்தார். அவருடைய தகப்பனார் வேதப் புத்தகத்தின் (Bible) ஒவ்வொரு வார்த்தையையும் அப்படியே நம்புகிறவராய்க் கடவுள் நம்பிக்கையோடு இருந்தாலுங்கூட, அவர் தீவிர அன்பு காட்டி நீதி செலுத்தும் மனப்பான்மையையுடையவர்.  உறுதியான உடற்கட்டு உடையவர். எனவே, இங்கர்சாலை அவர் கண்டிப்புடனேயே வளர்த்தார்.

இங்கர்சாலும் தகப்பனார் கட்டளைப்படி வேதப் புத்தகத்தை வரிவரியாகவே வாசித்தார். அவர் மிக்க அறிவாளியாக  இருந்தபடியால், படிக்கப் படிக்கச் சந்தேகங்கள் அவருக்கு அதிகமாகவே ஏற்பட்டன. ஆனாலும், அவரது தந்தை இவ்விஷயத்தில் அவரை அடித்துத் தொந்தரவு செய்து, அவரது மூளையைக் கெடுக்காமல், அவரது மனச் சாட்சிக்கு உண்மையாக இருக்கும்படிச் சொல்லிவிட்டார். இங்கர்சாலுக்கு விளையாட்டுகளிலும், வேடிக்கைகளிலும், பலருடன் அளவளாவி இன்புற்றிருப்பதிலும் அதிகம் பிரியம்.

இங்கர்சாலுக்குப் பள்ளிப் படிப்பு சொற்பம். ஆனால், ஞாபகசத்தி அதியற் புதம். பேசுவதிலும், கதை சொல்வதிலும், மொழிகளைச் சரியாக உபயோகிப் பதிலும் அதிகத் திறமைவாய்ந்தவர். தானாகவே நூல்களைப் படிக்க ஆரம்பித்து அவருடைய அரிய நினைவாற்றலால் சகல செய்திகளையும் அப்படியே சேமித்து வைத்துக்கொண்டார். அவரது பத்தொன்பதாம் வயதிலே அழகிய பாடல்களை இயற்றும் சக்தி பெற்றார். இருபதாம் வயதில் தாமாக ஒரு பள்ளிக்கூடம் நடத்தினார். ஏழை மாணவர்களுக்குச் சம்பளமில்லாமல் கல்வி அளித்தார். அப்பொழுது ஞானஸ்நானத்தைப் பற்றி அவருடைய அபிப்பிராயத்தைச் சில பாதிரிகள் கேட்டபொழுது அவர் விளையாட்டாக, "என்னுடைய அபிப் பிராயத்தில் சோப்போடு (With Soap) ஞானஸ்நானம் செய்வது நல்ல காரியந்தான்" என்றார்.

பின்னர் அவர் சட்டங்களைப் படித்துத் தன்னை 1854 ஆம் ஆண்டில் ஒரு வழக்கறிஞன் (Bar-at law) ஆக ஆக்கிக்கொண்டார். அவர் "இல்லிய்ஸ்" பிரதேசத்தில் "பியோரியா" என்ற நகரில் தன்னுடைய வக்கீல் தொழிலை நடத்தி, அதிகப்பேரும் புகழும், வருமானமும் பெற்றார்.  அவர் 1860 -ஆம் வருடத்தில் "காங்கிரஸ் " என்ற அமெரிக்கா தேசத்துச் சட்டசபைக்கு நின்றார். அதில் அவரை வேறு ஒரு கட்சியைச் சேர்ந்த "கெல்லாக்" என்ற  நீதிபதி எதிர்த்தார். எதிர்க்கட்சி அதிக செல்வாக்குடையதாகயிருந்த படியால், அவர் தோல்வியடைந்தார். எனினும் அவருடைய தேர்தல் பேச்சுகள் மக்களைப் பிரமித்துத் திடுக்கிடச் செய்தன. அவர் அவருடைய எதிரியை "அடிமைத் தனம் " என்ற விஷயமாகப் போட்டிப்பேச்சுக்கு  அழைத்தார். கெல்லாக் என்பவர் அடிமைத்தனத்தை ஒழிக்கும் கட்சியைச் சேர்ந்த வராக இருந்தாலுங்கூட, தான் சட்டப்படி நடக்கும் மனிதன் என்ற முறையில் அப்பொழுதிருக்கிற அடிமைகளுக்கு ஏற்பட்ட சட்டங்களைச் செயற்படுத்த உடன்பாடுடையவர் என்று ஒத்துக்கொண்டார். ல், இங்கர்சாலோ, யாவரும் அவர் அடிமை ஏற்பாட்டைப் பாதுகாத்து, நியாயங்கட்டிப் பேசுவார் என்று எதிர்பார்த்திருக்க அதற்கு விரோதமாக அடிமை வழக்கத்தைத் தாக்கி பேசியதுமல்லாமல், தான் அச்சட்டங்களை மீறத்தயாராக இருப்பதாகவும் பேசினார். இத்தேர்தலுக்குப்  பிறகு  அவர் இணையற்ற சொற்பொழிவாளர் என்று பெரும் புகழ் பெற்றார்.

1861-ஆம் வருடத்தில் உள்நாட்டுச்சண்டை ஏற்பட்டபொழுது, தேசம் பிரிவுபட்டுப் பிரிந்து விடக்கூடாது என்ற கட்சியின் தீவிர வாதியானார்.

1862-ஆம் வருடத்தில் 'மூடக்கொள்கைகளற்ற ஒரு மங்கை' யான ஈவா பார்க்கரை அவர் மணந்தார். அவர் ஒரு பெரிய கொலைக்கேசில் வக்கீலாக நியமிக்கப்பட்டபொழுது, இந்நங்கையைச் சந்தித்துக் காதலித்து மணந்தார். இவர் சண்டைக்காலத்தில் போர்வீரனாக இருந்தபடியால், ‘கர்னல்' இங்கர்சால் என்ற பட்டமும் பெற்றார். அதன் பின்னர்த் திரும்பவும் 1863 ஆம் வருடம் முதல், வக்கீல் தொழிலை அதிகச் செல்வாக்குடன் நடத்தினார்.

                அவர் 34-ஆம் வயதிலேயே இல்லினாய்ஸ் பிரதேசத்திற்கு அட்டர்னி ஜெனரல் என்ற பெரிய பதவியை இரண்டு வருடங்கள் வகித்து நடத்தினார். அவருக்குக் கவர்னர்பதவி கிடைக்கக்கூடியதாகவிருந்தும், அவர் தன்னுடைய கொள்கைகளைச் சிறிதளவும் விட்டுக் கொடுக்க மனமற்றவராயிருந்தபடியால் அவர், "என்னுடைய நம்பிக்கை என்னைச்சேர்ந்தது. அது இல்லினாய் நாட்டைச் சேர்ந்ததன்று. இந்த உலகத்திற்கே மன்னரே ஆவதாயினுங்கூட என்னுடைய மன உணர்ச்சிகளில் ஒன்றையேனும் என்னால் அடக்கி விரட்டமுடியாது" என்று சொல்லி அப்பதவியை நிராகரித்து விட்டார். இக் கொள்கைகளாலேயே அவர் அரசாங்கத்தார் அளிக்கக்கூடிய எப்பதவியையும் ஏற்றுக்கொள்ளவில்லை.  இங்கர்சால் தனது சொல்வன்மையினால் நீதிபதிகளையும் ஜூரிகளையும் தன்னுடன் இணங்கச் செய்வதில் இணையற்றவர் எனும் புகழைப் பெற்றார். அவர் பெருத்த கிளர்ச்சிகளை உண்டுபண்ணிய பல பெரிய வழக்குகளை ஏற்றுத் திறமையுடன் வாதம் செய்திருக்கிறார். அவருடைய வாக்கு வன்மையையும், சட்ட அறிவையும், நியாயமும் பொறுப்பும் காட்டும் பெருந்தன்மையையும், வியக்காத நீதிபதிகள் கிடையாது. அறிவுச் சுதந்தரத்திற்காகப் பாடுபடுபவர்களைத் தொல்லை கொடுப்பதாகக் கொண்டு வந்த வழக்குகளில் யாதொரு பயனையும் எதிர்பாராது ஏற்று வெகுபாடு பட்டிருக்கிறார். அப்படிப்பட்ட ஒரு கேசில் அவர், "உலகத்திலே அதி முக்கியமான விஷயம் சுதந்திரம். அது உணவைவிட, உடையைவிடப் பெரியது; செல்வத்தைவிட, வீடுகளைவிட, நிலங்களைவிடப் பெரியது; சிற்பம், ஒவியம், கலைகள் யாவற்றினும் உயர்ந்தது; எல்லா மதங்களைக் காட்டினும் சுதந்திரமே நனி சிறந்தது. இத்தகைய இணையிலா மதிப்புடைய மனித சுதந்திரமெனும் மரகதத்தைக் காப்பாற்ற நான் எதனையும் இழக்கத் தயாராக இருக்கிறேன்" என்று அழகாகப் பேசியிருப்பது, நமக்குப் பாரதியாரின், "சுதந்திரதேவி! நின்னருள் பெற்றிலாதார் நிகரிலாச் செல்வரேனும், பன்னருங்கல்வி கேள்வி படைத்துயர்ந்திட்டாரேனும், பின்னரும் எண்ணிலாத பெருமையிற் சிறந்தாரேனும், அன்னவர் வாழ்க்கை பாழாம், அணிகள் வேய் பிணத்தோடொப்பார்" என்பவை போன்ற வீரமொழிகளை நினைப்பூட்டுகின்றது.

அரசியல் விஷயங்களில் இவர் ஆற்றிய சொற்பொழிவுகள் அப்படியே கேட்பார் இதயங்களை இளகச்செய்து இழுத்து, அவர் வயப்படச் செய்தன. 1877-ஆம் வருடத்தில், 'மனிதன், மங்கை, குழந்தை, அவர்தம் சுதந்திரம்' எனும்தலைப்பில் ஓர் அரிய சொற்பொழிவாற்றினார்.  சொல்லினைத் தேனிற் குழைத்து உரைக்கும்' இவர்தம் ஆற்றல் வியக்கத் தக்கது. மங்கையர்தம் நற்சுதந்திரம் பற்றிப் பேசுமிடத்து இவர், "ஓர் உயர்ந்த மாதினுடைய காதலைப் பெறுவதற்காகத் தான் வாழ்ந்து தன்னை உயர்த்திக்கொள்ள வேண்டுமென்று ஆசைப்படுவதைவிட மனிதனுக்கு உயர்ந்த நோக்கம் வேறெதுவுமிருக்க முடியாது, ‘‘காதல்’, ‘‘மணம்'’ "இவை  யொழிந்த வாழ்வும் வெற்றியும் என்னால் சிந்திக்க முடியவில்லை. இந்த உலகத்திலே ஒரு நல்ல நங்கையின் காதலைப் பேணும் ஒரு மனிதனை எடுத்துக் கொள்ளுங்கள்  அவன் பிச்சைக்காரனாய் குப்பைக் குழியில் இறந்தாலுங்கூட - அவனே வாழ்க்கையில் வெற்றி அடைந்தவன் என மங்கையர்தம் நல் அறம் பேணுகின்றார்.

1880-ஆம் வருடத்து அமெரிக்கா தேசத்துத்தலைவர் தேர்தலில்' கார்பீல்டு' என்ற பெரியாரைத் தெரிந்தெடுக்கும்படியாகப் பெரும் கூட்டங்களில் அருஞ் சொற்பொழிவுகள் செய்திருக்கிறார்.

1884-85-ஆம் வருடங்களில் இவர், ‘வைதிகம்', ‘அறவழி', ‘பொய்யும் அற்புதமும்' என்ற விஷயங்களைப் பற்றிச்  சொற்பொழிவுகள் செய்தார். 1894-ஆம் வருடத்தில்ஆபிரகாம் லிங்கன்' , ‘வால்ட்டெயர்', ‘வேதப்புத்தகம் என்பவைகளைப்பற்றிய இவரது சொற்பொழிவுகள் பிரசுரிக்கப்பட்டன. 1897-ஆம் வருடத்தில், ‘நான் ஏன் நம்பிக்கையற்றவன்', 'மனிதரை சீர்திருத்தும் விதம்'  என்பவைபற்றிய இவரது பெரும் சொற்பொழிவுகள் உலகிற்குக் கிடைத்தன.

அறிவியக்க வாதிகளுக்கு, உணர்ச்சி, கருணை, அன்பு போன்ற இயல்புகள் கிடையாதெனச் சொல்லப்படுகிறது. ஆனால், இங்கர்சாலுக்கு இக்குணங்கள் இயற்கையாக அமைந்து கிடந்தன. சில சமயங்களில் இவரது மானத்தையே வெள்ளமெனப் பொங்கும் உள்ள உணர்ச்கிகள் கொள்ளை கொண்டன.

இவரது 'உண்மை', 'கடவுள்கள்' போன்ற எண்ணற்ற சொற்பொழிவு களும்,கொள்கைகளும் இவருக்கு ஏராளமான விரோதிகளை உண்டு பண்ணி விட்டன. இவரை உண்மையாகத் தெரிந்துகொள்ள முயன்றவர் சிலர். ஒன்றும் தெரியாமலே நாத்திகர் என்று தூற்றியோர் பலர். மத நம்பிக்கையுடைய பெரிய கலைவாணர்கள் எல்லாம் இவருக்கு எண்ணற்ற மறுப்புகள் எழுதி எழுதிப் பிரசுரித்தனர். அவைகளுக்கெல்லாம் ஆணித் தரமான பதில்களை இடைவிடாது சரமாரியாகப் பொழிந்து கொண்டே இருந்தார். இவர் கடைசியாகமதமென்றால் என்ன? என்ற விஷயத்தைப் பற்றி 2-6-1899-இல் பாஸ்டன் நகரத்தில் சொற்பொழிவு செய்தார். சாதாரணப் போக்கிரிகள் முதல் கிளாட்ஸ்டன் (Glad stone) போன்ற பெரிய அறிவாளிகள் வரை இவருக்கு எதிர்ப்பிரசாரங்கள் செய்தனர். கிளாட்ஸ்டன்  ஒரு தடவை, "மதவாதம் அதிக அடக்க ஒடுக்கத்துடனும், மரியாதையும் நிம்மதியும் காட்டும் சுபாவத்துடனும் செய்யப்பட வேண்டுமென்றும், ஆனால் இங்கர்சால் பழக்கப்படாத ஒரு காட்டுக்குதிரையின் மேல் சவாரி செய்வது போதாதென்று கடிவாளத்தின் கயிறுகளையும் அதன் கழுத்திலேயே எறிந்து விடுகிறார்" என்றும் எழுதினார். உடனே இங்கர்சால் இந்த நல்ல சந்தர்ப்பத்தை நழுவவிடாமல் பதிலுக்குக் கிளாட்ஸ்டன், மேற் சொல்லியபடி நான் செய்வதாக ஒத்துக்கொண்டாலும்கூட, "ஆழ்ந்த அமைதியும் நிம்மதியுமுடைய மனத்துடன் ஓர் இறந்த குதிரையின் மீது பயபக்தியுடன் உட்கார்ந்திருப் பதைவிட நான் செய்வதாகச் சொல்லும் காரியம், புதுப்புது உணர்ச்சிகளையும், அதிகமான இன்பத்தையும், பந்தய ஓட்டத்தில் வெற்றி கிடைப்பதற்கு அதிகமான வாய்ப்பினையும்  கொடுக்கக் கூடியதாக இருக்கிறது" என்று அழகாகப் பதிலிறுத்தார்.

இங்கர்சால் ஒரு சிறந்த மனிதன். பிறப்பினால் மனிதன். மனிதனாக வளர்ந்தார். மனிதனுக்காக உழைத்தார். மனிதனாகவே உயிர்துறந்தார். இவருடைய மனித சுபாவமே இவரைத் தனக்கென வாழா பிறர்க் கெனவாழும் செயற்கரிய செய்யும் பெரியாராக்கியது

கொன்றலைக்கும் மதவெறி பிடித்தவர்கள், பிற அறிவியக்க வாதிகளைத் தூற்றுவதுபோலவே இவரது அழகிய மாசற்ற பெயரையும் பலவழிகளிலும் தூற்றிக் கெடுக்கத் தம்மாலியன்ற சூழ்ச்சிகளும் பெரு முயற்சிகளும் செய்தனர். ஒரு வாதத்தின் சக்தி அதன் உண்மையிலிருக்கிறது. சொல்பவன் கெட்ட வனாயின், அவன் சொல்லும் வாதமும் உடனே கெட்ட தென்று எடுத்துக் கொள்வதற்கில்லை. ஆனால், அதைஅப்படியே வைத்துக் கொண்டால், இருதரப்பிற்கும் அது பொதுவாகும். அப்படியாயின், இங்கர் சால் ஒரு மாசற்ற உயரிய குணக்குன்றாதலின், அவருடைய வாதங்களத் தனையும் உடனே உண்மையெனக் கொள்ளுதலே பொருந்தும்.

நாகரிக உலக  ஆராய்ச்சி காட்டுமிராண்டிகளின் வாழ்க்கையில் எஞ்சியது என எள்ளி நகைத்தற்கிடமாய மதக்கொள்கைகளை, இருந்த இடம் தெரியாமல் ஒழியும்படியாகச் செய்தலே இங்கர்சால் வாழ்க்கையின் தனிப்பெரும் வேலை. இதனை இவரினும் திறம்படச் செய்பவர் இருந்திருக்க முடியாது. மூடக் கொள்கைகள் இவர் பார்வைக்கு நேரே நெருப்பிற்கு முற்பட்ட பஞ்சைப்போல் பறந்தன. நரகபயம், மக்களிடத்துச்செய்யும் கொடுமைகளை உணர்ந்து அதனை ஒழித்தார்.

"தெய்வந் தொழாள் கொழுநற் றொழுதெழுவாள்" என்பதைத்திருத்தி இங்கர்சால், "கடவுளை நேசிப்பதை விட மனிதனுக்கு மனைவியைக் காதலித்தல் நிரம்ப முக்கியமானது" என்று உரைத்தார். இதற்கு வைதிகர்கள் வயிறு எரிந்தால், அதற்கு இங்கர்சாலைப் பழி கூறுவ தெங்ஙனம்?

அவருக்குக் குடும்பப்பாசம் மிக அதிகம். எப்பொழுதும் யாவரும் இன்புற்றிருக்கும் குடும்பவாழ்வே அவரது நோக்கம். அன்பு அவரிடமிருந்து எப்பொழுதும் ஆறாய்ப்பெருகி ஓடிக்கொண்டே இருந்தது. அவர் பேரன், பேர்த்திகள், பூட்டன் முதலான வழி மரபினருடன் இறக்கும்வரை ஒரே குடும்பமாக வாழ்க்கை நடத்தினார்

ஈகை, கருணை முதலிய குணங்கள் இவருக்கு இயற்கையாக அமைந் திருந்தன. யாதொரு கதியுமின்றிப் பரிதவிக்கும் ஒரு பெண் ஒரு பாதிரியிடம் போய்  யாதொரு உதவியும் பெறாமல் இந்த நாஸ்திகன் என்ன செய்கிறான் பார்ப்போமென்று இங்கர்சாலிடம் போனாள். அவரிடம் போய் வந்த பின்னர், "என்னுடைய இருதயம் துடி துடிக்க, என்னுடைய மூளை கலக்கமுற எனக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் தவிக்கும் நிலையில், நான் அவருடைய ஆபீஸ்அறைக்குச் செல்ல அனுமதிக்கப் பட்டேன். உடனே அவர் தயவுசெய்து உட்காருங்கள். என்ன கஷ்டம் தங்களுக்கேற்பட்டது என்று, அன்பும் ஆதரவும் வெளிப்படுத்தும் புன்முறு வலுடன் வினவினார். என்னுடைய குறைகளைச் சொல்லி என் நிலைமையைத் தெரிவித்தேன். என்னைக் கவனமாகப்பார்த்து, பல கேள்விகளைக் கேட்டதன் பின்னர் எனக்கு வேண்டிய பல அறிவுரை களையும் அன்புடன் சொன்னார். இன்பத்தினால் கண்ணீர் வடித்தேன். அவருடைய மொழிகள் எனக்குப் பேராதரவைத் தந்தன. அப்பொழுதே பெரும் பணக்காரியாய் விட்டதுபோல் தோன்றியது. அவர் நான் கேளாமல் தானாகவே எனக்குப் பெருந்தொகை அளித்து, வாசல்வரை வந்து நான் அடிக்கடி என்னுடைய நிலைமையைத் தெரிவிக்க வேண்டுமென்றும், போய் வாருங்கள், உங்களுக்கு வெற்றி உண்டாகுக என்றும் சொல்லி அனுப்பிவைத்தார். அதுமுதல் நான் ஒவ்வொரு நாளும் தூங்கும் முன்பாகவும் இன்னும் ஆயிரக்கணக்கான தடவைகளிலும் கடவுள் இங்கர்சாலுக்கு அருள் புரிவாராக என்று வணங்குகிறேன் " என்று அவளே அவளுடைய கதை யைச்சொல்கிறாள்.

இன்னும் நீக்ரோவர்கள் என்று தீண்டப்படாதவர்களிலும் கொடுமையாக நடத்தப்படும் கருப்பு மனிதர்களை இவர் எப்பொழுதும் சமமாகப் பாவித்துப் பல உதவிகைளயும் அவர்களுக்குச் செய்து வந்தார். மதவிரோதியான இங்கர்சாலிடம் நீக்ரோ கிறிஸ்தவக் கோவிலின் மேற்கூறை காற்றில் விழுந்து விட்டபடியால், அதைத் திரும்பவும் போடுவதற்காகப் பண உதவி கேட்கப்பட்டது.  உடனே இங்கர்சால் பணத்தை அனுப்பிவிட்டுக் கடவுளுக்கு மேற் கூரை வேண்டியதில்லை போலும்! அப்படியில்லாவிட்டால், பழைய கூரையைப் பறக்கச் செய்திருக்மாட்டார். இன்னும் புத்திசாலிகளான அந்த நீக்ரோவர்கள் அடிமைத்தனத்திற்கு ஆதரவளிக்கும் ஒரு புத்தகத்தை (வேதம் ) எப்படி விரும்பினர் என்று தெரியவில்லை" என்று சொன்னார்.

நம்பிக்கை, மத நம்பிக்கையன்று; ஆனால், உண்மையில் நம்பிக்கை-மனித சுபாவத்தில் நம்பிக்கை-அவருடைய வாழ்க்கையின் அடிப்படையாக விருந்தது. வறுமை, கொடிய குற்றங்கள், துன்பங்கள் இவையெல்லாம். சமீபத்தில் ஒழிந்துவிடப் போகிற குறைகளாகவே கருதினார்.

இங்கர்சால் வருடத்திற்கு  20,000 பவுன்கள் வீதம் பல வருடங்கள் சம்பாதித்தார். இதில் நாலில் ஒரு பாகம் அறச்செயல்களுக்காகச் செலவழிக்கப்பட்டு வந்தது.
தன்னுடைய வாழ்க்கையின் கடைசி பதினான்கு வருடங்களை இங்கர்சால் நியூயார்க் பட்டணத்திலேயே கழித்தார். அவர் 21-7-1899-இல் அமைதியாக உயிர் நீத்தார். அவருக்கு மரணச்சடங்குகள் நடக்கவில்லை. அவருடைய புத்தகங்களிலிருந்து சில பாகங்களை அவருடைய நண்பர்கள் வாசித்தனர். அவருடைய மரணத்தைக்கேட்டு அமெரிக்கா முழுவதுமே துக்கமடைந்தது.
1911-ஆம் வருடம் அக்டோபர் மாதத்தில் அவருடைய உருவச்சிலைபியோரியா' என்ற ஊரில் திறக்கப்பட்டது. அவர் உலகில் தோன்றி நூறாண்டுகளாயிற்று. நூறாவது ஆண்டு நிறைவுவிழா உலகிலுள்ள எல்லாப் பகுத்தறிவுச் சங்கங்களாலும் கொண்டாடப்பட்டது. இனி நமது தமிழ் நாட்டிலுள்ள ஒவ்வொரு பகுத்தறிவுச் சங்கமும் அவர் இயற்கையோடியைந்த (இறந்த) நாளை இங்கர்சாலின் தினம் (Ingersall day) என்று ஆங்காங்கே கூட்டங்கூடி, அவரது வாழ்க்கைச் சரித்திரத் தையும், அவரது அரிய போதனையையும் தெளிவாய் மக்களுக்குக் கூற வேண்டும். அவர்தம் நூற்கள் குறைந்த விலைக்கு அனைத்து மொழிகளிலும் மொழி பெயர்த்து வெகு தீவிரமாய்ப் பரவுதல் வேண்டும். அவர்தம் நூற்கள் ஏழை, பாமரர்கள், பெண்கள் முதலியவர்களின் கண்களை எளிதில் திறக்கச் செய்யும். இங்கர்சால் என்னும் இவ்வரிய மெய்ஞ்ஞான வீரரை இவ்வுலகம் மறந்துவிட முடியாது. அவரது புகழ் ஒருக்காலும் மறையாது. அது உலகமெங்கும் பரவி வருகிறது.

நூல் பெயர்கடவுள்  
ஆசிரியர் : ராபர்ட் ஜி.இங்கர்சால் 
மொழிபெயர்ப்பு : எஸ். லக்ஷிமிரதன்பாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...