வியாழன், 3 ஆகஸ்ட், 2017

ஓவியர் உசேன்!



உலகப் புகழ் பெற்ற ஓவியர் எம்.எஃப் உசேன். தமது 95ஆம் வயதில் லண்டனில் மறைவுற்றார் (9.6.2011) என்பது வருத்தத்துக்கு உரியதாகும். பத்மஸ்ரீ விருது, பத்ம பூஷண் விருது, பத்ம விபூஷண் விருதுகள் எல்லாம் இந்தியக் குடியரசு தலைவரால் வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டவர்.

உலக அளவில் புகழ் பெற்ற ஓவியரான பிக்கா சோவுக்கு நிகராகப் பேசப்பட்டவர் உசேன். அவர் எடுத்த ஓர் ஓவியரின் பார்வையில் என்ற திரைப்படம் பெர்லின் திரைப்பட விழாவில் தங்கக் கரடி விருது பெற்றது. அவர் வரைந்த ஓவியம் ஒன்று ரூ.85 கோடிக்கு ஏலம் போனது என்றால் உசேனிடம் குடிகொண்டிருந்த ஓவியக் கலையின் உயரத்தைக் கணக்கிட்டுக் கொள்ளலாமே!

இவ்வளவுப் புகழ் பெற்ற ஓவியர் பிறப்பில் முசுலிம் என்பதால் இந்துத்துவா காவிக் கூட்டத்தால் அனுபவித்த தொல்லைகளும், இழப்புகளும் சொல்லி மாளாது.

1996 மே திங்களில் மும்பையில் அவர் நடத்திய ஓவியக் கண்காட்சி அரங்குக்குள் நுழைந்து சிவசேனா குண்டர்கள் அடித்து நொறுக்கினர். தீ வைத்துக் கொளுத்தித் தீர்த்தனர். உலகம் இன்னொரு முறை தன் தலையைக் கவிழ்த்துக் கொண்டது.

இந்து மதக் கடவுளச்சியான சரஸ்வதியின் படத்தினை அவர் ஆபாசமாக வரைந்து விட்டாராம் (இந்து மதக் கடவுளான சரஸ்வதிக்குத் தந்தையும் பிர்ம்மா, கணவனும் பிர்ம்மா இதைவிட ஆபாசம் என்ன இருக்கிறதாம்?).

அதுவும் 20 ஆண்டுகளுக்கு முன் வரையப்பட்டதாம். இவர்களுக்கு 20 ஆண்டுகளுக்குப் பின் மீசை, துடியோ துடியெனத் துடித்திருக்கிறது போலும்!

அப்பொழுது சிவ சேனா தலைவர் பால் தாக்கரே என்ன சொன்னார்?

ஓவியர் உசேன் ஹிந்துஸ்தானத்துக்குள் நுழைய முடிகிறதென்றால், நாங்கள் அவர் வீட்டுக்குள் நுழைய முடியாதா? என்று வன்முறைக்கு வக்காலத்துப் போட்டுப் பேசினார்.

இந்தியாவில் வாழ முடியாது - உயிருக்கும் உத்திரவாதம் இல்லை - கலைக்குப் பாதுகாப்பு இல்லை என்று முடிவெடுத்து துபாயிலும், லண்டனிலும் வாழ்ந்து வந்தார். கடைசியாக கத்தார் நாடு அந்தப் புகழ்பெற்ற ஓவியருக்கு குடியுரிமை வழங்கிப் பெருமை பெற்றது. மதம் மிருகங்களுக்குப் பிடித்தாலும், மனிதனுக்குப் பிடித்தாலும் ஆபத்து - ஆபத்து தான்!


10.6.2011

நூல் :  விடுதலை ஒற்றைப் பத்தி - 4
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...