பர்ப்பானெல்லாம் இப்போது சம்பந்தி போஜனம் கூட செய்கிறார்களாம், ஜாதி பாராட்டாமல். எங்கள் வீட்டுச் சோறு ருசியாயிருந்தால் எந்தப் பார்ப்பானும்தான் சாப்பிடுவான். உண்மையில் எத்தனை பிராமணர்கள் தங்கள் வீட்டில் ஒரு பறையனையோ சக்கிலியையோ தம்முடனிருந்து சாப்பிட அனுமதிப்பார்கள்? நீ சாப்பிடுவதைக் கூட நாங்கள், பார்க்கக் கூடாது என்கிறாயே. அதுதான் போகட்டும் என்றாலும், நான் வெட்டிய குளத்துத் தண்ணீரானாலும், அதையும் திரைபோட்டு மறைத்துக் கொண்டுதானே குடிக்கிறாய்.
ஆலயப் பிரவேசம் உண்மையென்றால் அவனும் மணியை அடிக்கச் செய்!
பஞ்சமனைக் கோயிலில் கூட அனுமதித்து விட்டார்களாம். அவனும் முடிச்சவிழ்க்க வேண்டுமென்று விட்டாயா? அல்லது மோட்சத்திற்குப் போகட்டுமென்று விட்டாயா? மோட்சத்திற்குப் போவதற்காகவே விட்டிருந்தால், இத்தனை நாள் அடித்து அனுபவித்த அந்த மணியைக் கொஞ்சம் அவனிடம் கொடேன்? அவனும் ஆசைதீர அடிக்கட்டுமே! செய்வையா! செய்தால் சாமி ஓடிப் போகுமே! அல்லது செத்துப் போகுமே? அப்புறம் உன்னை யார் காப்பாற்றுவார்கள்?
இந்த அக்கிரமமல்லாம் செய்ய உனக்கு உரிமையுண்டு. நான் ஏன் சூத்திரன் என்று கேட்பதற்குக் கூட எனக்கு உரிமை இல்லையா? கேட்டால் கலகம் செய்கிறேன் என்பதா? உனக்குப் பழக்கமாகி விட்டது. உன் புத்தி அடிமைத்தனத்தால் சின்னப் புத்தியாகி விட்டது. ஆகவே பொறுத்துக் கொண்டிருக்கிறோம். மானமுள்ள, அறிவுள்ள, வேறு எவன் இவ்விழிவைப் பொறுத்துக் கொண்டிருக்க முடியும்? வேறு எந்த நாட்டிலாவது சூத்திரனும் பஞ்சமனும் உண்டா? இந்த உயர்வு தாழ்வு இருக்கும் வரைக்கும் இது ஒரு ஞானபூமியாகவும் ஆக முடியுமா?
- குடிஅரசு, சொற்பொழிவு 08.05.1948
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக