வியாழன், 3 ஆகஸ்ட், 2017

காம்ரேட்


கேள்வி: தி.மு.க., அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் இலவசங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதே?

ஜி. இராமகிருஷ்ணன் (சி.பி.எம்.): அவரவர் கட்சிகள் சார்பில் மக்களைச் சந்தித்து அறிவித்திருக்கிறார்கள். நாங்கள் எங்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையைப் பற்றித்தான் கூற முடியும்.
(தினத்தந்தி, 28.3.2011, பக்கம் 15)

இப்படி சொல்லுகிற சி.பி.எம். கட்சியின் அதிகாரப்பூர்வ ஏடான தீக்கதிர் ஏட்டில்தான் (21.3.2011) இலவசங்கள் பற்றி கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் டி.கே. ரெங்கராஜன் எம்.பி., சாடியிருக்கிறார். தி.மு.க.வின் தேர்தல் அறிக்கைபற்றி டி.கே. ரெங்கராஜன் எம்.பி. சாடல் என்று அதற்குத் துணைத் தலைப்பும் கொடுக்கப்பட்டுள்ளது.

தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் இலவசங்கள் என்றால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாடோ சாடென்று சாடும்.

தி.மு.க.வின் தேர்தல் அறிக்கைக்குப் பிறகு அ.இ.அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை வெளிவருகிறது. அதில் தி.மு.க.வை விஞ்சும் அளவுக்கு ஏட்டிக்குப் போட்டியாக இலவசங்கள் அவிழ்த்துக் கொட்டப்பட்டுள்ளன.

அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை அதற்குமுன் வெளிவந்திருந்தால் காம்ரேட் டி.கே.ரங்கராஜன் வாயைப் பொத்திக் கொண்டிருந்திருப்பார். அதைத்தானே கட்சியின் மாநில செயலாளர் தோழர் ஜி.இராமகிருஷ்ணன் இப்பொழுது செய்திருக்கிறார்.
இதில் ஒரு வேடிக்கை என்ன தெரியுமா? தோழர் ஜி. இராமகிருஷ்ணன் அவர்களைப் பார்த்து செய்தியாளர்கள் கேட்ட இலவசம் தொடர்பான கேள்வியும், பதிலும் மற்ற ஏடுகளில் வெளிவந்திருக்கிறது. ஆனால், கட்சியின் அதிகாரப்பூர்வமான தீக்கதிரில் மட்டும் அந்தச் செய்தி இடம்பெறாமல் பார்த்துக் கொண்டுவிட்டனர். ஆகா, எப்படிப்பட்ட நழுவலிசம்!

மார்க்சியம் பேசுவோரின் பரிதாப நிலையைப் பார்த்தீர்களா? கூட்டுச் சேர்ந்த கட்சிக்கு ஏற்பக் குரலை மாற்றிப் பேசுவதுதான் இடதுசாரித் தன்மையா? முற்போக்குச் சிந்தனையா?

இதில் கொஞ்சம் இந்திய கம்யூனிஸ்ட் பரவாயில்லைபோல் தோன்றுகிறது. சரியோ, தப்போ இலவசங்களைப் பொம்மலாட்டம் என்று கேலி செய்திருக்கிறது.

அவர்களைவிட தாங்கள்தான் முற்போக்கு என்று காட்டிக் கொள்வதில் முந்தும் சி.பி.எம். கட்சியோ எதற்காகவோ பதுங்குகிறது.

பொதுவாக இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் கிட்டப் பார்வை, எட்டப் பார்வை தொல்லைகளால் மிகவும் சேதாரப்பட்டுப் போய்விட்டன என்பது மட்டும் உண்மை.

30.3.2011

நூல் :  விடுதலை ஒற்றைப் பத்தி - 4
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...