அனுமந்தபுரம் பண்ணை ஏஜண்டு கிருஷ்ணமூர்த்தி அய்யர் வயல் கரையில் வந்து நின்றுகொண்டு, நேற்றைய தினம் காங்கிரஸ் மகாநாட்டில் நடந்த சமபந்தி போஜனத்தில் சாப்பிட்ட பயல்களைக் கொண்டுவா என்று சொன்னார். உடனே தலையாரி மாணிக்கம் என்பவர் எங்களைக் கூப்பிட்டு சாப்பாட்டுக்கா போனீர்கள் என்று தடிக்கம்பால் அடித்து விளாமரத்துக்குப் போங்கடா என்று தள்ளினார்.
நாங்கள் விளாமரத்துக்குப் போனவுடன் என்னுடைய வேஷ்டியை எடுத்துப் போட்டு என்னை விளாமரத்தோடு கட்டி தடிக்கம்பால் அடித்து நாட்டாமைக்கார அடைக்கலம், சின்ன நாட்டாமை ராமன் இருவரையும் கூப்பிட்டு இந்தப் பயல்களை அவிழ்த்துக் கொண்டு போய் முழுதும் மொட்டையடித்து வா என்று கிருஷ்ணமூர்த்தி அய்யர் (ஏஜண்ட்) சொல்ல பள்ளிப் பரியாரி கதிர்வேல் மகன் ஆறுமுகம்
தான் எனக்கு மொட்டை அடித்தான். பிறகு தலையாரி சாணிப்பால் ஊற்றினார்.
பள்ளிப்பரியாரி கதிர்வேல் மகன் ஆறுமுகத்துக்கு நாராயணசாமி அய்யர் கார்வாரி கதிர்வேலைக் கூப்பிட்டு, உன் மகன் ஆறுமுகத்திற்கு உச்சியில் கொஞ்சம் மயிர் வைத்து மொட்டை அடி, ஏனென்றால், அவன் கலியாணம் செய்து கொள்ளப் போகும் மாப்பிள்ளை என்று சொன்னார். உடனே கதிர்வேல் தன் மகனுக்கு மொட்டையடித்தான்.
பழைய நீடாமங்கலம் காமாட்சி மகன் ரெத்தினத்தை வெட்டியானை விட்டுக் கொண்டுவரச் சொன்னார். வெட்டியான் பழைய நீடாமங்கலம் போய் பொன்னுசாமி வீரமுண்டார் உதவியைக் கொண்டு காமாட்சி மகன் ரெத்தினத்தை அனுமந்தபுரம் கொண்டு வந்தார்கள். அய்யர் அவனுக்கும் மொட்டையடித்து சாணிப்பால் ஊற்றச் சொன்னார். அவர்களையும் அதேபோல் செய்தார்கள்.
- குடியரசு, 30.1.1938
புகைவண்டி நிலையங்களில் இந்து மக்களுக்கென்று ஏற்படுத்தப்பட்டிருக்கிற உண்டிச் சாலைகளில் பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார் என்று பாகுபாடு செய்திருப்பதானது, பார்ப்பனரல்லாத மக்களின் சுயமரியாதைக்கு மிக்கதொரு அவமானத்தை விளைவிப்பதால், அவ்வகையான வேற்றுமையை ஒழிக்கும்படி புகைவண்டி அதிகாரிகளைக் கேட்டுக் கொள்கிறது.
ரயில்வேக்காரர்களால் ஏற்படுத்தப்பட்டிருக்கிற உண்டிச் சாலைகளில் பார்ப்பனர்கள் மாத்திரமே
சமையல் செய்கிறவர்களா யிருந்து வருகிற வழக்கத்தை மாற்றி விடுமாறு ரயில்வே அதிகாரிகளைக் கேட்டுக் கொள்கிறது.
(திருநெல்வேலி ஜில்லா சுயமரியாதை மகாநாட்டு தீர்மானம்
- குடிஅரசு, 11.12.192)
இந்து சமூகத்திற்குச் சம்பந்தப்பட்டதென்று சொல்லப்படுகிற கோயில், குளம், சத்திரம் முதலிய எல்லா விடங்களிலும் இந்து மதத்தைச் சேர்ந்தவர்களென்று சொல்லப்படுகிற எல்லா மக்களுக்காவது சம உரிமை கொடுக்கப்பட வேண்டுமென்று இம்மகாநாடு முடிவு செய்கிறது.
(திருநெல்வேலி ஜில்லா சுயமரியாதை மகாநாட்டு தீர்மானம் -
குடிஅரசு, 11.12.192)
கோயில்களில் கடவுளை வழிபடுகிறதற்கு இடையில் தரகர்கள் வேண்டியதில்லையயன்றும், ஒவ்வொருவருக்கும் நேராகவே கடவுளை வந்தனை, வழிபாடு செய்து, பூசனை புரிவதற்கு உரிமையுண்டென்றும், அதனை இது முதலே ஒவ்வொருவரும் நடவடிக்கைக்குக் கொண்டு வர வேண்டுமென்றும் இம்மகாநாடு முடிவு செய்கிறது.
(திருநெல்வேலி ஜில்லா சுயமரியாதை மகாநாட்டு தீர்மானம்
- குடிஅரசு, 11.12.192)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக