வியாழன், 3 ஆகஸ்ட், 2017

பெரியார் விடுதலை



1938 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறைச் சென்ற தந்தை பெரியார் விடுதலை செய்யப்பட்ட நாள் இந்நாள் (22.05.1939).

சமஸ்கிருதத்தை படிப்படியாகப் புகுத்தவே, இந்தியைப் புகுத்துகிறேன் என்று சொன்னவர் ஆச்சாரியார் (ராஜாஜி). அதனை எதிர்த்துத் தந்தை பெரியார் தலைமையில் தமிழ்நாடு போர்க்கோலம் பூண்டது.

சென்னை ஜார்ஜ்டவுன் நீதிமன்றத்தின் 4ஆவது நீதிபதி மாதவராவ் முன்னிலையில் தந்தை பெரியார் நிறுத்தப்பட்டார். சர். ஏ.டி. பன்னீர்செல்வம் பார்-அட்-லா, குமாரராஜா முத்தையா செட்டியார் ஆகியோர் எவ்வளவோ கேட்டுக் கொண்டும் எதிர் வழக்காட மறுத்தார் தந்தை பெரியார். மாறாக ஒரு அறிக்கை கொடுத்ததோடு நிறுத்திக் கொண்டார்.

நீதிபதியைப் பார்த்து பெரியார் பேசுகின்றார்:

இந்தக் கோர்ட் காங்கிரஸ் மந்திரிகள் நிர்வாகத்திற்கு உட்பட்டது. நீதிபதியாகிய தாங்களும் பார்ப்பன வகுப்பைச் சேர்ந்தவர்கள்; இதுதவிர, இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியை ஒழிக்க வேண்டும் என்பதில் காங்கிரஸ் மந்திரிகள் அதி தீவிர உணர்ச்சி கொண்டிருக்கிறார்கள். அது விஷயத்தில் நியாயம், அநியாயம் பார்க்க வேண்டியதில்லையென்றும், கையில் கிடைத்த ஆயுதத்தை எடுத்து உபயோகித்து ஒழித்தாக வேண்டுமென்றும், இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியைத் திடீரென்று வந்து புகுந்த திருடர்களுக்கு ஒப்பிட்டும் கனம் முதல் மந்திரியார் கடற்கரைக் கூட்டத்தில் பேசியிருக்கிறார். இந்தி எதிர்ப்பு விஷயமாய் மந்திரிகள் எடுத்துக் கொள்ளும் நடவடிக்கைகள் அடக்குமுறையே என்பது என் அபிப்பிராயம். அடக்குமுறைக் காலத்தில் இம்மாதிரி கோர்ட்டுகளில் நியாயம் எதிர்ப்பார்ப்பது பைத்தியக்காரத்தனம். ஆகவே கனம் கோர்ட்டார் அவர்கள் தாங்கள் திருப்தி அடையும் வண்ணம், அல்லது மந்திரிகள் திருப்தி அடையும் வண்ணம் எவ்வளவு அதிக தண்டனை கொடுக்க முடியுமோ, அவைகளையும், பழி வாங்கும் உணர்ச்சி திருப்தி அடையும் வரைக்கும் எவ்வளவு தாழ்ந்த வகுப்புக் கொடுக்க உண்டோ அதையும் கொடுத்து இவ்வழக்கு விசாரணை நாடகத்தை முடித்து விடும்படி வணக்கமாகக் கேட்டுக் கொள்கிறேன் எவ்வளவு நியாயமான லட்சியத்தை அடைய வேண்டுமானாலும் அதற்காகக் கஷ்ட நஷ்டங்களடைதல் என்னும் விலை கொடுக்க வேண்டுமாதலால் அவ்வாறு வேண்டிக் கொள்கிறேன் - என்று யாரும் இதுவரை கேட்டிராத வாக்கு மூலத்தை நீதிமன்றத்தில் ஒப்பாரும், மிக்காரும் இல்லாத தலைவர் தந்தை பெரியார், பார்ப்பன நீதிபதி முன்னால் கூறினார்.

கடும் வெப்பம் மிகுந்த பகுதியான பெல்லாரி சிறையில் தந்தை பெரியார் அடைக்கப்பட்டார்.

செய்த குற்றங்கள் இரண்டு என்றும், ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு ஆண்டு கடுங்காவல், ஒவ்வொரு ஆயிரம் ரூபாய் அபராதம், செலுத்தாவிடில் மீண்டும் அவ்வாறு மாதம் தண்டனை; இரண்டு தண்டனைகளையும் தனித்தனி காலத்தில் அடைய வேண்டும் என்று தீர்ப்பு. ஆனாலும் மக்களின் எழுச்சி கண்டு 167 நாள்களுக்குப்பின் தந்தை பெரியார் விடுதலை செய்யப்படுகிறார். இதே நாளில் (22.5.1939). சிறையில் இருந்து வெளிவந்த தந்தை பெரியார் மீண்டும் சிறை செல்வதற்காகவே நான் விடுதலை செய்யப்பட்டிருக்கிறேன் - என்றாரே பார்க்கலாம்.

இப்படி ஒரு தலைவரை என்று கண்டது வரலாறு?



22.5.2011

நூல் :  விடுதலை ஒற்றைப் பத்தி - 4
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...