ஆனந்த விகடன் ஜூனியர் விகடன், தினமணி, தினமலர், துக்ளக் போன்ற பார்ப்பன ஏடுகள் மிக வெளிப்படையாகக் கச்சை கட்டிக்கொண்டு தி.மு.க. எதிர்ப்பில் முனைந்து நிற்கின்றன. ஜெயலலிதாவுக்கு ஜே போடுவதில் கொஞ்சம் கூடத் தயக்கம் காட்டுவதில்லை.
கல்கி போன்ற பார்ப்பன இதழ்களோ நரியை நனையாமல் குளிப்பாட்டும் தந்திரத்தைக் கையாளுகின்றன.
ஆனாலும் கல்கியை முழுமையாகப் படிக்கும் எவரும் அய்யங்கார் அம்மையாரை அரியணையில் அமர்த்தம் செய்ய ஆர்வக் கொந்தளிப்புடன் இருப்பதைப் புரிந்துகொள்ள முடியும்.
எடுத்துக்காட்டாக இவ்வார கல்கி (17.4.2011) யின் தலையங்கத்தில் ஒரு தகவலும் - கருத்தும் தத்தித் தத்தித் தாவுகின்றன.
ஊழலற்ற புதிய ஆட்சியை வழங்குவேன் என்று அ.தி.மு.க. கூட்டணியோ, ஜெயலலிதாவோ இதுவரை உறுதி தரவில்லை என்று எழுதி விட்டு, அடுத்த வரியில் எழுதுகிறது - ஒரே நம்பிக்கை. அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள இடதுசாரிகள் மக்கள் விரோதப் போக்குத் தென்பட்டால் அதைச் சுட்டிக்காட்டும் தார்மிகக் குரல் அவர்களுடையது. தி.மு.க. அணியில் இத்தகைய ஒரு கடிவாளம் இல்லாததனால், அந்தக் கூட்டணி வென்றால் எதேச்சதிகாரப் போக்கை மட்டுப்படுத்த முடியாது போகலாம்; லஞ்ச ஊழலைக் கட்டுப்படுத்த இயலாது போகலாம் என்று தலையங்கம் தீட்டுகிறது கல்கி.
இதைவிட நகைச்சுவைத் துக்கடாவை எங்கு தேடினாலும் கிடைக்காது.
ஜெயலலிதா என்பவர் ஆட்சிப் பொறுப்புக்கு ஏற்கெனவே வந்தகாலத்தில் - இடதுசாரிகள் ஆளும் கூட்டணியில் இருந்த சமயத்தில் லஞ்ச லாவண்யத்தில் ஈடுபடவில்லையா? கூட்டணியில் இருந்த இடது சாரிகளின் எந்தக் குரலை அவர் எடுத்துக் கொண்டிருக்கிறார்?
ஆட்சிக்கு வந்த ஒருசில மாதங்களிலேயே கூட்டணி கசந்து விட்டதே - கிட்டே நெருங்க முடிய வில்லையே! ஜெயலலிதாவின் இயல்பையும், அருங்குணத்தையும், சுபாவத்தையும் உணர்ந்த எவராலும் கல்கி கூறியதை ஏற்றுக் கொள்ள முடியுமா?
கல்கி வகையறாக்களுக்கு மிகவும் நெருக்கமான வாஜ்பேயி ஜெயலலிதாவுக்குக் கொடுத்த சர்டிபிகேட் என்ன என்று தெரியாதா?
பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்திருந்த ஜெயலலிதா, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சிப் பொறுப்பில் இருந்த தி.மு.க.வை கொல்லைப்புற வழியில் கவிழ்த்தே தீர வேண்டும் என்று கொடுத்த தொல்லையை வாஜ்பேயி வெளிப்படையாகக் கூறவில்லையா? (குமுதம் 20.9.1999 பேட்டி)
வெளிப்படையாக ஜெயலலிதாவை ஆதரியுங்கள் என்று சொல்லுவதற்குக் கல்கிக்குக் கூச்சமோ!
ஆசைதான் வெட்கம் அறியாததாயிற்றே!
10.4.2011
நூல் : விடுதலை ஒற்றைப் பத்தி - 4
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக