ஞாயிறு, 16 ஜூலை, 2017

காரட் தேசியமோ!


இந்தியாவின் பாதுகாப்புத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, மேற்கு வங்க முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார்யா, மக்களவைத் தலைவர் சோம்நாத் சட்டர்ஜி, குருதாஸ் தாஸ்குப்தா (சி.பி.அய்.) போன்ற பெரிய பெரிய பதவிகளில் உள்ளவர்கள் கட்சி வேறுபாடு பாராமல் ஒரு விடயத்தில் கைகோர்த்து தொண்டையைக் கனைத்துக் கொண்டு ஓங்கிக் குரல் கொடுத்துள்ளனர்.

எதற்காக? நாட்டின் அதி முக்கியத்துவமான பொதுப் பிரச்சினைக்காகவா?
அல்ல  அல்ல!

வேறு எதற்காகவாம்?

இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையில் நடந்துகொண்டிருக்கும் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த சவுரவ் கங்குலி இந்திய அணியில் சேர்க்கப்படவில்லையாம்; அதற்காகத்தான் இந்த மகா தலைவர்கள் ஒன்றிணைந்து குரல் கொடுத்துள்ளனர்.
ஒரு விளையாட்டில் யார் யாரை சேர்த்துக் கொள்வது என்பதை முடிவு செய்வதற்காகத் தனிக்குழு இருக்கிறது.

அது பல வகையிலும் கணித்து வீரர்களைத் தேர்வு செய்கிறது. இதில் போய் மாநில உணர்வைக் காட்டுவது எந்த வகையில் நியாயம்?

தொடர்ந்து கங்குலி ரன்களை எடுக்காமல் மைதானத்துக்குப் போவதும், வருவதுமாக இருந்து வருகிறார். அவர் திறனில் பெரும் வீழ்ச்சி காணப்படுகிறது என்பதை மறுக்க முடியுமா?

நாட்டுக்கே வழிகாட்ட வேண்டிய தேசியத் தலைவர்கள் வங்காளிகள் என்கிற உணர்ச்சியோடு மட்டும் இதைப் பார்க்கிறார்கள் என்பதைக் கவனிக்கவேண்டும். தேசியம் சந்தர்ப்பத்திற்கேற்ப சதுராடுமோ!
மற்ற மற்றவற்றிற்கெல்லாம் தகுதி திறமை பேசுவோர்கள் திறமையை மட்டும் பார்க்கவேண்டிய விளையாட்டுப் போட்டியில் திறமைக்கு முக்கியத்துவம் கொடுப்பதைக் குப்பைக் குழியில் தூக்கி எறிந்து விட்டு, மேற்கு வங்காளம் என்கிற மண் பற்றோடும், இனப்பற்றோடும் நடந்து கொள்வது வேடிக்கையிலும் வேடிக்கை.

இதுகுறித்து மக்களவையிலேயே விவாதம் நடத்த அனுமதிக்கப் போகிறாராம் மக்களவைத் தலைவரும், மேற்கு வங்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவருமான சோம்நாத் சட்டர்ஜி.

தமிழ், தமிழன், தமிழன் பண்பாடு என்று பேசினாலே அது தேச விரோதம், தேசிய உணர்வற்ற தன்மை என்று குற்றப் பத்திரிகை படிப்பவர்கள் இதற்கு என்ன சொல்லப் போகிறார்களாம்?

17.12.2005 (விடுதலை ஒற்றைப்பத்தி - 2)

நூல் : விடுதலை ஒற்றைப்பத்தி - 2,

ஆசிரியர் : கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...