ஞாயிறு, 16 ஜூலை, 2017

ஈரோடு மாநாடு


இதே நாளில் 1930 ஆம் ஆண்டில்தான் ஈரோட்டில் இரண்டாவது சுயமரியாதை மாநாடு நடைபெற்றது. மாநாட்டுக்கு எம்.ஆர்.ஜெயகர் தலைமை வகித்தார்.

எவரும் கற்பனையில்கூட சிந்தித்துப் பார்க்க முடியாத புரட்சிகரமான தீர்மானங்களை சுயமரியாதை மாநாடுகள் 80 ஆண்டுகளுக்குமுன் நிறைவேற்றின என்றால் அதன் சீர்மையின் எல்லையை எடுத்துரைக்க எந்த மொழியிலும் கூட சொற்கள் இருக்கமுடியாது.

1930 ஆம் ஆண்டு ஈரோடு மாநாட்டில் (இளைஞர் மாநாடு) ஒரு தீர்மானம்.

எந்தப் பொதுக்கூட்டங்களிலும் ஆரம்பத்திலாவது, முடிவிலாவது ராஜ வணக்கம், கடவுள் வணக்கம், தலைவர்கள் வணக்கம் ஆகியவைகளைச் செய்யும் காரியத்தை விட்டுவிட வேண்டுமென இம்மாநாடு தீர்மானிக்கிறது.

வெள்ளைக்காரர் ஆட்சிக் காலம் அது. ராஜ விசுவாச தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட அந்தக் கால கட்டத்தில் இப்படி ஒரு இரும்புத் தீர்மானம் நிறைவேற்ற எஃகுள்ளம் கண்டிப்பாக இருந்திருக்க வேண்டும்.

பொது மாநாட்டில் ஒரு தீர்மானம் 2().

வணங்குவோருக்கும், வணங்கப்படுவதற்கும் மத்தியில் தரகரையோ, பூசாரியையோ ஏற்படுத்துவது சுயமரியாதைக்கு விரோதமென்றும்தெய்வ வணக்கத்திற்கும் பணச் செலவு அனாவசியமென்றும் இம்மாநாடு கருதுகிறது. பூசாரிகளுக்குத் தற்காலம் விடப்பட்டிருக்கும் மானியங்களை ரத்து செய்ய வேண்டுமென்றும் இம்மாநாடு தீர்மானிக்கிறது என்பதுதான் அத்தீர்மானம்

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் என்ற உரிமைக்காகப் போராடிக் கொண்டு இருக்கிறோம்; அடுத்த கட்டம் கோயிலில் சாமி கும்பிடப் பூசாரிகள், அர்ச்சகர்கள் என்கின்ற தரகர்கள் ஏன் என்ற வினா எழத்தானே செய்யும்?

இந்தத் தரகர் முறை என்பது வியாபார சம்பந்தப்பட்டதுதானே?

கடவுளுக்கு இன்னின்ன கொடுக்கவேண்டும்; கடவுள் இன்னின்னது கொடுப்பார் அதுவும் இந்த அர்ச்சகர் மூலம் கொடுப்பார் என்பது அசல் வியாபாரம் அல்லாமல் வேறு என்ன?

80 ஆண்டுகளுக்கு முன் அடேயப்பா, எவ்வளவு பெரிய மகத்தான சிந்தனை. அம்மாநாட்டில் மேலும் தந்தை பெரியார் பேசுகிறார்:

கழுதையில், நாயில், குரங்கில், எருமையில், பறக்கழுதை, பறநாய், பறக்குரங்கு, பற எருமை என்றும், பார்ப்பாரக் கழுதை, பார்ப்பாரக் குரங்கு, பாப்பார எருமை என்றும் இருக்கிறதா? மனிதனிடத்தில் மட்டும் இவ்வாறு இருப்பது ஏன்? என்ற வினாவைத் தொடுத்தார். 80 ஆண்டுகளுக்குமுன் பகுத்தறிவுப் பகலவன் எழுப்பிய இந்த வினாவுக்கு கடந்த காலத்திலும் விடை உண்டா? இனியும் யாராலும்தான் கூற முடியுமா?

10.5. 2010 விடுதலை ஒற்றைப்பத்தி - 3

நூல் : ஒற்றைப்பத்தி - 3

ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...