திங்கள், 17 ஜூலை, 2017

அமாவாசை


மகாளய அமாவாசை யையொட்டி இன்று முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்து வழிபாடு நடத்துகிறார்கள்.

புரட்டாசி மாதம் பவுர்ணமி முதல் அமாவாசை வரும் 15 நாள்களும் மகாளய பட்ச காலமாம்.

இந்த நாள்களில் அந்தந்ததிதிக்கு உரிய, தங்களின் முன்னோர்களுக்குத்திதி கொடுக்கும் வழக்கம் இந்துக்களுக்கு உண்டாம்.

அதிலும் மகாளய பட்சத்தின் இறுதி நாளான மகாளய அமாவாசை தினம் இன்றாம் - முன்னோர்கள் வழிபாட்டிற்கு உகந்தநாள் இந்நாள் என்று சாங்கோ பாங்கமாக தினமலர் ஏடு விவரிக்கிறது.

அது சரி, அமாவாசை, அமாவாசை என்று கதைக் கிறார்களே, அதன் கதைதான் என்ன?

புராணக் களஞ்சியமான அபிதான சிந்தாமணி என்ன கூறுகிறது?

அச்சோதை என்பவர் ஒரு புண்ணிய நதியாம். மரீசி மக்களாகிய பிதுர்க்களுக்கு குமரி. இவள் தம் பிதுரரால் நிருமிக்கப்பட்ட அச்சோதையென்னும் நதிக்கரையில் ஆயிரம் வருடம் தவஞ் செய்ய, பிதுர்க்கள் பிரத்திய க்ஷணமாயினர். அவர்களுள் ஒருவனாகிய மாவசு என்பவனை நாயகனாக எண்ண, அதனால் அவள் விபச்சாரியாய்ச் சுவர்க் கத்திலிருந்து தள்ளப்பட்டு பூமியில் விழாது, அந்தரத்து நின்று தவஞ் செய்தனள். அவள் வசமாகாத மாவசு, இச்செய்தி நடந்த தினத்தை அமாவாசையாக்கினான். அவள் மீண்டும் அவர்களை வேண்ட, நீ தேவர் கர்மத்தைப் புசித்து (28) வது துவாபரயுகத்தில் ஒரு மீன் வயிற்றில்  சத்தியவதியெனப் பிறந்து, பராசரனைக் கூடி, வியாசனைப் பெற்றுப் பிறகு சந்தனுவின் தேவியாய் இரண்டு புத்திரரைப் பெற்று, அப்பால் அச்சோதையெனும் புண்ணிய நதியாகவென அருளிப் போயினர். இத்தினத்தில் அப்பிதுர்க்களை நினைத்துக் கர்மாதிகள் செய்யின் அவை பிதுர்ப் பிரீதி யைத் தரும் (மச்ச புராணம்) என்று விவரிக்கிறது அபிதான சிந்தாமணி. ஒருமுறைக்கு இருமுறை படித்தாலும் மண்டைக் குடைச்சலைத் தான் ஏற்படுத்தும்.

இந்து மத வகையறாக்களை எங்குத் தோண்டினாலும் அங்கெல்லாம் விபச்சாரம் என்னும் பாம்பு தலையெடுக்காமல் இருக்காது. மூடத்தனம், ஆபாசம், விபச்சாரம் என்னும் இவற்றை விட்டால், இந்து மதத்தில் எந்தச் சரக்கும் கிடையவே கிடையாது. கசுமாலம் இவற்றையெல்லாம் படித்துத் தொலைய வேண்டியிருக்கிறதே, என்ன செய்ய!

செத்துப் போனவர்களுக்கு இந்த நாளில் புரோகிதப் பார்ப்பானை அழைத்துத் தர்ப்பணம் செய்தால், பொருள்களை வாரிக் கொடுத்தால், அவை செத்துப் போன நம் முன்னோர்களுக்குப் போய்ச் சேருமாம் - கதை அளக்கிறார்கள்நடிகவேள் எம்.ஆர். ராதா சொல்வார் - புரோகிதன் வயிறு பரலோகத் துக்குத் தபால் பெட்டியோ என்று அவருக்கே உரித்தான பாணியில் குரல் கொடுப்பார். நாடகக் கொட்டகையே அதிரும்.
அய்யரே, எங்கள் அப்பாவுக்கு கருவாடு, மீன் இல்லை யென்றால் ஓர் உருண்டை சோறுகூட உள்ளே போகாது. சமையல் ரெடி - இங்கேயே என் எதிரிலேயே உட்கார்ந்து சாப்பிடணும் என்பார் நடிகவேள் - எடுப்பார் அய்யர் ஓட்டம்.
இதையே இன்னொரு வகையில் கபிலர் பாடியுள்ளார்.
பார்ப்பன மாந்தர்காள்
பகர்வது கேண்மின்
இறந்தவராய் - உமை
இல்லிடை இருத்தி
பாவனை மந்திரம்
பலபட உரைத்தே
உமக்கவர் புத்திரர்
ஊட்டின போது
அரும்பசியாற் குலைந்து
ஆங்கவர் மீண்டு
கையேந்தி நிற்பது
கண்டதார் புகல்வீர்!
அருந்திய உண்டியால்
ஆர்பசி கழிந்தது என்றார்
கபிலர் - சிந்திப்பீர்!

7.10. 2010 விடுதலை ஒற்றைப்பத்தி – 3

நூல் : ஒற்றைப்பத்தி - 3


ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...