ஞாயிறு, 16 ஜூலை, 2017

தாலிப் பாக்கியம்


தாலி பெண்களுக்கு வேலி என்று எதுகை மோனைக்கு ஏற்ப சொல்லுவார்கள்; கணவன் என்ன கொடுமை செய்தாலும் பெண் பொறுத்துக் கொள்வதற்குச் சொல்லும் காரணம்என்ன செய்வது, என் கழுத்தில் தாலி கட்டி விட்டாரே - மூணு முடிச்சுப் போட்டு விட்டாரே! என்று தன் கழுத்தில் தொங்கும் தாலியைக் கண்ணில் ஒத்திக் கொண்டு, என்ன நடந்தாலும், ஏது நடந்தாலும் எனக்குத் தாலிப் பாக்கியம்தான் முக்கியம்அதாவது கணவன் உயிரோடு இருப்பதுதான் முக்கியம் என்கிற மனப்பான்மையில் ஓர் இந்து பெண் வளர்கிறார்.

பெண்களின் இந்த உருக்குப் போன்ற நம்பிக்கைதான் ஆண்களின் அடாவடித்தனத்துக்கும், அத்துமீறிய செயல்களுக்கும் காவலாளியாக இருக்கிறது.

கனமான அடியை கண வனிடமிருந்து வாங்கிக் கொள்ளும் ஒரு பெண் தன் தாலி மட்டும் அறுந்து போய்விடாமல் கெட்டியாகப் பிடித்துக் கொள்வார். கணவன் அடிப்பதற்கு முதுகைக் குனிந்து கொடுப்பார்.
இந்தத் தாலி உணர்வுகளை (sentiment) வைத்து அப்பப்ப, நாட்டில் எத்தனைச் சிறுகதைகள், எத்தனை நாவல்கள்  எத்தனை நாடகங்கள்எத்தனை எத்தனைத் திரைப்படங்கள்! இன்னும் சொல்லப்போனால் நம் நாட்டின் உயர்ந்த பண்பாட்டுக்கு இந்த அடிமைத்தளையைத்தான் பெரிதாக ஊதிக்காட்டுவார்கள். கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருடன் என்பதுதான் இந்த நாட்டின் கலாச்சாரமாம்! அதே நேரத்தில் ஆடவனின் ஒழுக்கம் என்ன, அதற்கு ஏதாவது வரைமுறை உண்டா?

கேட்டால் சாண் பிள்ளையானாலும் ஆண் பிள்ளை என்று தயாராக எதுகை மோனையுடன் வைத்திருக்கும் பொன்மொழி.

ஒரு தகவல் வந்திருக்கிறது நாமக்கல்லில் இருந்து; மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சின்ன முதலைப்பட்டியைச் சேர்ந்த பெண்  கலைச்செல்வி; அந்தப் பெண்ணுக்கும் ராஜாவுக்கும் கல்யாணம் சடங்கு ஆச்சாரங்களோடு! ஆனால், வாழ்வில் மகிழ்ச்சியில்லை. ராஜா ஒரு சந்தேகப் பேர்வழி; அந்தப் பெண் எந்த ஆடவருடன் பேசினாலும் சந்தேகம்! சந்தேகம்!! சந்தே கம்தான்!

ஒரு நாள் இரவு ராஜா என்ன செய்தான்? கொலை செய்தான். கொலை எப்படித் தெரியுமா? தாலிக் கயிற்றைக் கொண்டே கழுத்தை நெரித்துக் கொன்று விட்டான்; அந்தோ பரிதாபம்! அந்தத் தாலிப் பாக்கியம் அந்த அப்பாவிப் பெண்ணைக் காப்பாற்றவில்லையே என்பதுதான் நமது இரக்கம் கலந்த உணர்வு!

17.6.2004 (விடுதலை ஒற்றைப்பத்தி - 2) 


நூல் : விடுதலை ஒற்றைப்பத்தி - 2

ஆசிரியர் : கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...