(அருந்தொண்டாற்றிய அந்தணர்கள் எனும் நூலுக்கு
மறுப்பாக வெளியிடப்பட்ட அறிக்கை இது)
தொல்காப்பியர்
என்பது அவருடைய இயற்பெயர் இல்லை, பழைய காப்பியக்
குடியில் உள்ளோன் என்று தொல்காப்பிய பாயிர உரையில் நச்சினார்க்கினியர் பொருள்
தருகிறார். நச்சினார்க்கினியர் காலம் 14 ஆம் நூற்றாண்டு. பண்டைத் தமிழகத்தில் காப்பியக்குடி என்று ஒரு குடிவகை
இருந்தது. இது பார்ப்பனரது பழைய குடிவகை என்றும், சென்னைப் பல்கலைக் கழகத்தினர், தமிழ் லெக்சிகன் (பாகம்- 2) காப்பியக்குடி என்பதற்கு பார்ப்பாரது பழைய
குடிவகை என்று பொருள் குறிப்பிடுகின்றது என்றும், உரையாசிரியர்களில் ஒருவரான தெய்வச்சிலையாரும்,
இந்நூல் செய்தான் வைதிக
முனிவன் என்கிறார் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
தொல்காப்பியம்
தோன்றியதற்கும் நச்சினார்கினியார் உரை எழுதியதற்கும் இடையில் 2000 ஆண்டுகள். நச்சினார்க்கினியார் உரை எழுதுவதில்
வல்லவராயினும் அவர் காலத்தில் செல்வாக்கு பெற்ற வைதீக கருத்துக்களுக்கு
ஆட்படாதவரல்ல அவர். அவரோ, தெய்வச் சிலையாரோ,
பிராமணர்களே வேதத்திற்கு
உரியவர், எனவே அறிவு
அவர்கட்கே சொந்தம். அதனால் அறிவாளிகளான எவரும் பிராமணராகத்தான் இருப்பர்.
இல்லாவிடினும் அப்படிக் சொல்வதுதான் நூலுக்கு பெருமை சேர்க்கும் என்னும்
எண்ணப்போக்கில் வாழ்ந்தவர்கள். எனவே
அப்படி ஒரு கருத்து இடம்பெற்றது எனலாம்.
திருக்குறளாம்
முப்பாலை வழங்கிய அய்யன் திருவள்ளுவரைக் குறித்தே, ஒரு கதை கட்டப்பட்டு, ஆதி என்னும் பெண்மணிக்கும் பகவன் என்னும்
பிராமணனுக்கும் பிறந்தவர் என்று புனைந்துரைத்தது மக்களால் ஒரு காலத்தில்
நம்பப்படவில்லையா? வைதீகத்தை,
வருண தருமத்தை, வேள்வியை ஏற்க மறுத்தவரானாலும் அவர் உலகம்
மதிக்கும் அறிஞரானதால், அவர் ஒரு
பிராமணருக்குத்தான் பிறந்திருக்கவேண்டும் என்று சொல்லும் துணிச்சல் சிலருக்கு
ஏற்படவில்லையா? திருவள்ளுவருக்கும்
700 ஆண்டுகள் முன்னர்,
வடமொழியில் பாணினி
இலக்கணம் வடிவு கொள்வதற்கு 300 ஆண்டுகள்
முன்னர் வாழ்ந்த தொல்காப்பியர் பிராமணர் என்று சொல்வது எப்படி உண்மை ஆக முடியும்?
பல்கலைப் புலவர்
கா.சுப்பிரமணியப் பிள்ளை அவர்கள் தொல்காப்பியம் எழுத்ததிகாரம் நச்சினார்க்கினியர்
உரை நூலுக்கு எழுதிய முன்னுரையில் கூறுவது இது.
“ஜமதக்னியின்
புதல்வராக தொல்காப்பியரைக் (கற்பிக்கப்பட்டவாறு) கருதினால், அவர்களில் இடைச்சங்க காலம் என்றெண்ண இடமுண்டு.
ஆனால் பரசுராமரைப் பற்றிக் கூறும் நூல்களுள் தொல்காப்பியரை அவரின் உடன் பிறப்பாகக்
கூறக் கண்டிலம். சில தமிழ்ப் புலவர்கள் கூறுகின்றவாறு, பலராலும் விரும்பப்படும் மேம்பாட்டினை உடைய,
பண்டைக் காலத்து தமிழ்ப்
பழங்குடிகளாகிய குறுக்கையர், ஏயர்கோன்,
காப்பியன், சேக்கிழான் எனப் பெயரியவகைகளுள், இவர் பழமை மிக்க காப்பியக் குடியிற் பிறந்தவர்
எனக் கருதலாம். அங்ஙனம், தமிழ் முனிவராகத்
தொல்காப்பியரைக் கருதுமிடத்து, இந்நூல்
ஆதியூழியின் முடிவிலே (இடைச் சங்க காலம்) செய்யப்பட்டிருக்கக் கூடும். இந்நூலுள்
சில பகுதிகள் பிற்காலத்துச் சேர்க்கப்பட்டனவாகக் கருத இடமுண்டு. அவைகளிற் பல,
நாட்டில் ஆரியக் கலப்பு
மிகுந்த பின்னரே (இடைச்செருகலாக) சேர்க்கப்பட்டன என்று கொள்ள வேண்டும் என்று
தெரிவிக்கின்றார்.
குறிப்பாக
தமிழகத்தில் ஆரியம் அடி எடுத்து வைத்தது கி.மு.500 என்றும்; அதன் தாக்குரவு ஏற்பட்டது சங்க காலம் என்றும்;
செல்வாக்கு வளர்ந்தது
களப்பிரர் காலத்தை தொடர்ந்த நால்வர் காலம் என்றும் கூறப்படும். தொல்காப்பியம்
தோன்றிய காலத்தில் இன்று பிராமணர் என்று கருதப்படும் ஒரு ஜாதியினர் தமிழகத்தில்
இருந்திருக்க வாய்ப்பில்லை. இருப்பினும் ஒரு பழங்குடி என்று கருதக்கூடிய
காப்பியக்குடி ஆதல் அரிது. அவ்வாறு இருப்பினும் ஒரு தென்மொழியான தமிழுக்கு
இலக்கணம் காண்பது, அதிலும்
எழுத்துக்கும் சொல்லுக்கும் மட்டுமேயன்றி, தமிழர் நாகரிகப் பண்பாட்டின் சிறப்புகளாக அமையும் பொருளுக்கும் இலக்கணம்
வரைவது வேற்றுமொழியைத் தாய்மொழியாகக் கொண்ட ஒருவருக்கு எளிதல்ல. ஆயினும் அவர்
பிராமணர் என்று கருத, கற்பிக்க இடமானது
தொல்காப்பியம் பொருளதிகாரத்தில், மரபியலில் அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்னும்
நாற்பால் தொழில் பிரிவினரை நால் வருண ஜாதிப்பிரிவு போன்று காட்டும் சூத்திரங்கள்
இடைச்செருகலாக இடம் பெற்றுள்ளமை காரணமாகலாம். மேலும் புறத்திணையில் (16) அறு வகைப்பட்ட பார்ப்பன பக்கமும் என்று வருவது
போன்று அந்தநாள் பார்ப்பன சமூகம் குறிக்கப்படுவதாலும் ஆகலாம்.
இங்குக் குறிப்பிடும்
பார்ப்பனத் தலைவன் தூது அனுப்பும் பாங்கர் போன்ற நிலையினராதலின், ஜாதியினால் மதிக்கப்பட்ட உயர்வகுப்புப்
பிராமணராகக் கருத இடமில்லை. இப்படிப்பட்ட சில பொருந்தாத குறிப்புகள் இடம்பெற்றது
காரணமாகத் தொல்காப்பியரே, பிராமணராகி
விடமாட்டார். ஒரு வேளை அவர் பிராமணரானாலோ, தொல்காப்பியம் அதன் சிறப்புக்குரிய தனித்தன்மை வாய்ந்த இலக்கணமாக
உருப்பெற்றிருக்க இயலாது.
\எவ்வாறாயினும்
தொல்காப்பியர் பிராமணர் என்று வாதாடுவோர் அவர் இலக்கணம் கண்ட தமிழே, திருக்கோயில் வழிபாட்டு மொழியாக வேண்டும்,
குடமுழுக்கு நடத்துவதற்கு
உரிய மொழியாக நடைமுறைப்படுத்த வேண்டும், திருமணங்களும், குடும்பச்
சடங்குகளும் நடத்துவதற்குரியதாக வேண்டும், குறிப்பாக பிராமணரான தொல்காப்பியர் வழிவந்ததாக கூறிக்கொள்ளும் பிராமணரெல்லாம்
அவர்தம் குடும்பங்களில் வடமொழிக்குப் பதில் தமிழிலேயே சடங்குகள் யாவும் செய்திட
வேண்டும். அந்த மொழியை நீசமொழி என்றோ சூத்திர பாஷை என்றோ எவரும் இழிவுபடுத்தலாகாது
என்று அவர்களது சம்மேளனத்தில் தீர்மானம் நிறைவேற்றிச் செயல்படுத்த முன்வருவார்களா?
(முரசொலி 19.11.2002 பக்கம் 4)
நூல் : பார்ப்பன புரட்டுக்கு பதிலடி
ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்
நூல் : பார்ப்பன புரட்டுக்கு பதிலடி
ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக