ஞாயிறு, 16 ஜூலை, 2017

மதம் பிடிக்குமா?


யானைக்கு மதம் (வெறி) பிடிக்கும். அதே நேரத்தில் யானைக்கு எந்த மதமும் (சமயமும்) பிடிக்காது. அதற்கு எல்லா மதமும் சம்மதம்தான்.

பிரச்சினையே இதில்தான் ஆரம்பமாகியுள்ளது. திருச்செந்தூர் முருகன் கோயிலில் புருசோத்தமன் என்ற ஆண் யானையும், சாந்தி என்ற பெண் யானையும் இருந்தன. இரண்டும் மண்டையைப் போட்டுவிட்ட பிறகு புதிய யானையை வாங்கவில்லை கோயில் நிருவாகம்.

கோயில் திருவிழாவின்போது குறிப்பாக தங்கத் தேர்வலம் வரும்போது யானை முன்புறம் சென்றாகவேண்டும் என்பது அய்தீகம். யானை இல்லாமல் திருவிழா இல்லையாம். அந்த அளவுக்குத் திருச்செந்தூர் முருகன் கோயில் திருவிழா ஊர்வலத்தில் யானை செல்லுவது முக்கியமாகும்.

இந்த ஆண்டும் திருவிழா நடந்தது. வாடகைக்கு யானை ஒன்றைப் பிடித்துக்கொண்டு வந்தார்கள்.

திருவிழாவும் முடிந்தது; பிரச்சினையும் வெடித்தது.

யானையை வாடகைக்குப் பிடித்ததுதான் பிடித்தார்கள்  ஒரு இந்துக் கோயிலிலிருந்து வாடகைக்குக் கொண்டுவரக் கூடாதா? போயும் போயும் முஸ்லிம் ஒருவர் வளர்த்து வாடகைக்கு விடும் யானையையா திருச்செந்தூர் முருகன் கோயில் திருவிழாவில் பயன்படுத்தவேண்டும்? இதுதான் உள்ளூர் இந்து முன்னணியினரின் கேள்வி; அவர்கள் முறுக்கிக் கொண்டு கிளம்பியிருக்கிறார்கள்.

மனுசனுக்குள்தான் அந்த மதம், இந்த மதம், அந்த ஜாதி, இந்த ஜாதி என்று அடித்துக் கொண்டு கிடக்கிறார்கள்.

யானைக்கு என்ன தெரியும்? யானையில் முஸ்லிம் யானை, கிறிஸ்தவ யானை, இந்து யானை என்று பேதம் உண்டா?

அப்படியிருக்கும்போது இந்து முன்னணியினர் இப்படித் தகராறு செய்கிறார்களே  வெட்கக்கேடுதான்! உண்மையைச் சொல்லப்போனால், இந்து முன்னணியினருக்கு மதம் பிடிக்கும். யானைக்கோ மதம் பிடிக்காது!

04.10.2005 (விடுதலை ஒற்றைப்பத்தி - 2)

நூல் : விடுதலை ஒற்றைப்பத்தி - 2,

ஆசிரியர் : கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...