`சன்
தொலைக்காட்சியில் சாலமன் பாப்பையா நாள்தோறும் காலையில் வருகிறார். அவருக்குத் தோன்றிய பல கருத்துகளை தன் போக்கில் உதிர்க்கிறார்.
ஓர் அறிவியல்பூர்வமான ஊடகத்தைப் பயன்படுத்தும்போது அறிவியலுக்கு எதிரான கருத்துகளைக் கூறலாமா என்பது தான் நமது கேள்வி.
ஒரு நாள் எமதர்மனைப்பற்றி ஆய்வு செய்கிறார். அப்படி ஒருவன் இருக்கிறானா என்று சிலர் கேள்வி கேட்கக்கூடும் என்கிறார்.
அப்படி ஒருவன் இருக்கிறான் என்று நம்புவதால் என்ன கெடுதல் என்கிற போக்கில் வார்த்தைகளை வாரி இறைத்தார். நம் கண்களுக்குத் தெரியாததனாலே வானத்திலே இருக்கிற பல நட்சத்திரங்கள் இல்லை என்று ஆகிவிடுமா என்கிற கேள்வியை முன் வைக்கிறார்.
அறிவியல் வளர்ச்சியில் புதிய புதிய கிரகங்கள், நட்சத்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுத்தான் வருகின்றன.
அறிவியல்கூட ஒரே நேரத்தில் எல்லாக் கிரகங்களையும் கண்டுபிடித்துவிடவில்லை.
நெப்டியூன் கலிலியோவால் 28.12.1612இல் கண்டுபிடித்து அறிவிக்கப்பட்டது.
ஃப்ளூட்டோ 18.2.1930இல் கினைட்டாம்பாக் என்பவரால் கண்டறியப்பட்டது.
இப்பொழுது இந்த ஆண்டு (2005) ஜூலை மாதத்தில் புதிய கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஹவாயில் உள்ள ஜெமினி விண்வெளி ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்தக் கிரகம் 3000 கி.மீ.,
விட்டம் உள்ளது. இதற்குப் பெயர் சூட்டு விழா இன்னும் நடைபெறவில்லை. தற்காலிகப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. 2003 UB 313 என்று பெயர் சூட்டியுள்ளனர்.
இதுவரை நவக்கிரகம் என்று சோதிடர்கள் சொல்லிக் கொண்டிருந்தனர். இப்பொழுது பத்தாவது கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு என்ன சோதிட சரக்கை இதுவரை வைத்துக்கொண்டிருந்தனர்? இந்தக் கிரக நேரத்தில் பிள்ளைகள் பிறக்காமலா இருந்தன?
கண்டுபிடிக்கப்படாதவை படிப்படியாக விஞ்ஞான வளர்ச்சியால் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. கண்டுபிடிக்காதவரை அது கடவுள் என்றால், கண்டுபிடித்தபின் அது என்னாகும்?
`மெத்தப் படித்த பேராசிரியருக்கு இதுகூடவா தெரியாது? தெரியாத காரணத்தால் இல்லை என்று ஆகிவிடுமா என்கிற கேள்வியில் அப்பாவித்தனம்தான் நெளிகிறது. ஒரு காலத்தில் தெரியாதவை இன்னொரு காலத்தில் தெரிந்தவை ஆகி விடுகின்றனவே!
அறிவியல் கருவியான ஒரு தொலைக்காட்சி அறிவியலுக்கு விரோதமானவற்றை வாரிக் கொட்டுவதற்கு பயன்படலாமா?
5.9.2005 (விடுதலை ஒற்றைப்பத்தி - 2)
நூல் : விடுதலை ஒற்றைப்பத்தி - 2,
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக