ஞாயிறு, 16 ஜூலை, 2017

பூக்கள்!


இதே நாளில் கடந்த ஆண்டில் (ஜூலை 16, 2004) மனித நேயம் உள்ளவர்களின் குருதியை உறைய வைத்த நிகழ்ச்சி கும்ப கோணத்தில் நடைபெற்றது.

மகாமகம் நடந்த ஊர், `கிருஷ்ணா என்ற பெயரில் பள்ளி 94 குழந்தைகள் தீயின் தீய நாக்குக்குள் சிக்கிச் சாம்பலாயின!

இன்று நினைத்தாலும் நெஞ்சம் பதை பதைக்கிறது.

ஓராண்டுக்குப் பின்னர்தான் விசாரணை அறிக்கை மெல்ல மெல்ல ஊர்ந்து அரசின் கைக்குக் கிடைத்திருக்கிறது.

அது எதிர்காலத்தில் இத்தகைய குற்றங்கள் நடவாது தடுக்கவும், பாதிக்கப் பட்டவர்களின் குடும்பங்களுக்கு `திகட்டும் அளவுக்கு நிவாரணங்களை அள்ளித் தரவும் பயன்படுமேயானால் அதனை வரவேற்போம்!

பிள்ளைகளை விட்டுவிட்டு ஆடிப் பூஜைக்காக ஆண்டவன் தரிசனத்துக்காகக் கோயிலுக்குச் சென்ற ஆசிரியைச் சகோதரிகளும் மனம் திருந்துவார்களாக!

அவலமான ஒரு சூழ்நிலையிலும் ஆண்டவன் நம்பிக்கைமீது ஒரு சிறுதுளி அளவுக்காவது சேதாரம் வந்துவிடக் கூடாது என்ற `மாபெரும் கவலையில், மனம் புண்ணாகிக் கிடக்கும் பெற்றோர்களின் துன்பத்தைப் பக்தி மடை மாற்றத்துக்குப் பயன்படுத்தும் வகையில் மோட்ச தீபம் ஏற்றுங்கள் என்று சொன்னவர்களையும் நினைத்துப் பார்ப்போம்!

தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளின் பாதுகாப்புகள் உறுதி செய்யப்பட்டு விட்டனவா என்று தெரிந்து கொள்ளவும் பேரவா!

மற்றும் ஒன்று  தொலைக்காட்சியில் பெற்றோர்களின் அவலக் குரல் கள் ஒலித்துக்கொண்டு இருக்கின்றன. அந்தத் தீ விபத்தில் பாதிக்கப்பட்டு இன்னும் குணமாகாது இருக்கும் பிள்ளைகளுக்கு அரசு மருத்துவமனைகளில் போதுமான  தேவையான தொடர் மருத்துவ உதவிகள் இல்லை என்கிற கண்ணீர்க் குரலில் உண்மையிருக்குமானால், இதைவிட மனித நேயமற்ற கொடுமை ஒன்று இருக்க முடியாது. திருத்திக் கொள்வார்களாக!

உதவி செய்வதாக அப்பொழுது சொல்லிவிட்டுச் சென்றவர்கள் சென்றவர்கள் தான் எந்த உதவியும் பிறகு கிடைக்கவில்லை  எங்களின் எதிர்காலம் கேள்விக்குறி என்று கதறும் குடும்பங்களைக் கண்ணீர் வெள்ளத்திலிருந்து அவர்களைக் கரையேற்றுங்கள்.

94 மழலைப் பூக்கள் கருகினவே என்று கண்ணீர் செந்நீர் விட்டது உண்மை என்றால், அதற்கான பரிகாரங்களைச் செயலில் காட்டுவதுதான் மனிதத் தன்மைக்கு அழகு!

16.7.2005 (விடுதலை ஒற்றைப்பத்தி - 2) 

நூல் : விடுதலை ஒற்றைப்பத்தி - 2,
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...