திங்கள், 17 ஜூலை, 2017

ஆச்சி!


திரைப்பட உலகில் ஆச்சி என்றால் அது, மனோரமா வைத்தான் பளிச்சென்று குறிக்கும். செட்டிநாட்டுச் சீமையைச் சேர்ந்தவராக இருப்பதால் இந்த அழைப்புக்குக் கூடுதல் காரணமாகும்.
1300 திரைப்படங்களுக்கு மேல் நடித்து கின்னஸ் சாதனை புரிந்த சுத்தத் தமிழச்சி அவர். புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் விழாவில் மக்கள் கலையரசி என்ற பட்டம் கொடுத்துப் பெருமைப்படுத்தியது பெரியார் திடல்.
பெரியார் திரைப்படத்தில், தந்தை பெரியார் அவர்களின் அம்மாவாக கனகச்சிதமாக நடித்து, பெரியார் கொள்கையாளர்கள், பற்றாளர்கள் மத்தியில் இடம்பிடித்தவர் இவர்.

அவர் உடல்நலமற்று இருக்கிறார் என்கிற சேதி பரவலாக உள்ளது. அவர் முழுக்குணம் அடையவேண்டும் என்பது தமிழ் மக்களின் விருப்பமாகும்.

திருப்பதி கோயிலுக்கு அவர் சில மாதங்களுக்குமுன் சென்று வந்ததுபற்றி பல்வகையான பேச்சுகள் - ஏடுகளிலும், ரசிகர்களிடத்திலும்!

வயதான காலத்தில், அதுவும் பெண்களுக்கு மூட்டு வலிவருவது என்பது சர்வசாதாரணம். அதற்காக அறுவை சிகிச்சையும் செய்துகொண்டிருக்கிறார் ஆச்சி. அதெல்லாம் சரிதான், அந்தக்கால் வலியோடு திருப்பதி சென்றுகால் கடுக்க நின்று மேலும் துன்பத்தை எதற்காக வருந்தி அழைக்கவேண்டும் என்றுதான் புரியவில்லை.
தீராத வினையெல்லாம் தீர்த்து வைப்பான் கோவிந்தம் என்கிறார்கள் - ஆனால், திருப்பதி சென்று ஏழுமலையானைத் தரிசித்துத் திரும்பும்போது ஆச்சிக்கு விபத்து என்றால், ஏழுமலையான் சக்திபற்றி சிந்திக்க வேண்டாமா? அனுபவம்தான் தலைசிறந்த பேராசான். அந்தப் பேராசான் வட்டியும், முதலுமாகப் பாடம் சொல்லிக் கொடுத்துள்ளதே - இதற்குப்பிறகும் வெங்கடாசல()பதியை நம்புபவர்களை என்னவென்று சொல்ல?

12.9. 2010 நாளிட்ட ராணி இதழுக்குப் பேட்டி கொடுத்த மக்கள் கலையரசி மனோரமா அவர்கள் ஒரு முக்கிய தகவலைத் தெரிவித்துள்ளார். முக்கியமாக பக்தர்கள் கவனிப்பார்களாக!

என் தாயாரின் வேண்டு தலை நிறைவேற்ற திருப்பதி போனேன். அங்கே தலை முடியை காணிக்கை செலுத்த ஆறாயிரம் ரூபாய் கேட்டனர்.

இதற்கா இவ்வளவு ரூபாய்? என்று கேட்டேன். முக்கியப் பிரமுகர்களுக்கு இந்தத் தொகையைத்தான் வசூலிக்கிறோம் என்றார்கள். அதனால் தர்மத்துக்கு முடி எடுப்பவர்களிடம் சென்று நான் தலைமுடியைக் காணிக்கை செலுத்தினேன் என்று கூறியுள்ளார்.

முடியைச் செலுத்த ரூபாய் ஆறாயிரமாம்! திருப்பதியின் கஜானா நிரம்பி வழிகிறது வழிகிறது என்றால், ஏன் வழியாது? இப்படி மொட்டை அடிக்கக்கூட ஆறாயிரம் ரூபாய் என்றால், ஊர் மக்களை மொட்டை அடித்துக் குவிக்கும் கொள்ளைப் பணம்தான் இது என்பது விளங்கவில்லையா?

இந்தப் பக்தர்களும் ரொம்ப கில்லாடிகள்தான். மீண்டும் முளைக்கக் கூடிய ஒரு சமாச் சாரத்தைத்தான் காணிக்கையாகக் கொடுக்கிறார்களே தவிர, மூக்கை வெட்டிக்கொள்கிறேன்; குறைந்தபட்சம் சுண்டு விரலை வெட்டிக் காணிக்கையாகக் கொடுக்கிறேன் என்று  வேண்டிக்கொள்வதில்லையே! ஏழு மலையான்தான் ஊருக்கு நாமம் போடுகிறான் என்றால், அந்த ஏழுமலையானுக்கே நம் பக்தகோடிகள் குழைத்துப் பட்டை நாமத்தைச் சாத்துகிறார்கள் என்பது படு தமாஷ்!

9.9. 2010 விடுதலை ஒற்றைப்பத்தி - 3

நூல் : ஒற்றைப்பத்தி - 3


ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...