திங்கள், 18 டிசம்பர், 2017

அறிக்கை தொடர்கிறது

அறிக்கை தொடர்கிறது
விடுதலையில் 19.6.1949ஆம் தேதியில் நான் எழுதிய தலையங்க அறிக்கையை அனுசரித்து அடுத்த தொடர்ச்சி அறிக்கை.
(இதை மக்கள் ஊன்றிப் படிக்க வேண்டும் என்ற வேண்டு கோளுடன் 28.6.1949 ‘விடுதலையில் பெரியார் எழுதுகிறார்.)
தோழர்களே!
கட்டாய இந்தி எதிர்ப்பு நடவடிக்கையில் நான் தீவிரமாய் ஈடுபடப் போவதால் ஏற்படக் கூடிய விளைவு.
உடுமலைப்பேட்டையில் நான் 144 தடையுத்தரவை மீறியதற்காக என்று சர்க்கார் நடத்தப் போவதாகத் தெரியவரும் காரியத்தின் விளைவு.
சென்னையில் 2 மாதத்துக்கு முன் நான் ஒரு பொதுக் கூட்டத்தில், பேசிய பேச்சின் பேரில் சர்க்கார் ஏதோ நடவடிக்கை எடுக்க முயற்சிப்பதாய்த் தெரிய வருவதால் அதனால் ஏற்படும் விளைவு.
ஆகிய மூன்று விளைவுகளுக்கும் நான் ஆளாகத் தயாராய் இருக்க வேண்டியவனாக இருக்கிறேன். ஆதலால், அதற்குள் நான் இதற்கு முந்திய அறிக்கையில் தெரிவித்தபடி இயக்க நடப்புக்கு, இயக்க பொருள்களுக்கு நான் ஒரு ஏற்பாடு செய்ய வேண்டியவனாக இருக்கிறேன்.
என் மீது ஏற்படும் வழக்குகளுக்கு எதிர்வாதம் செய்வதில் நான் நம்பிக்கை இல்லாதவனாக இருப்பதால், சர்க்கார் கேஸ் தொடர்ந்தால் நான் தண்டனை அடைய வேண்டியது என்பது தவிர, வேறு முடிவு எதிர்பார்ப்பதற்கு இல்லை. மற்றும் எனக்கு என்னைத் தலைவனென்று சொல்லிக் கொண்டும், என்னைப் பின்பற்றுவதாகச் சொல்லிக் கொண்டும், என்னைச் சுற்றி இருக்கும் தோழர்கள் சிலரிடம் நான் எவ்வளவு சகிப்புத் தன்மை, அவர்களது தவறை மறக்கும் தன்மை, அனுசரிப்புத் தன்மை முதலியவைகளைக் காட்டினாலும், அவைகளை அவர்கள் எனது பலவீனம், ஏமாந்த தனம் என்று கருதிக் கொண்டு, இயக்கத்தினுடையவும், என் முயற்சியினுடையவும், பின் விளைவைப் பற்றி நான் பயப்படும் வண்ணமாய்ப் பெரிதும் அவநம்பிக்கைக் கொள்ளும் வண்ணமுமாக அவர்கள் நடந்து வருவதாக உணர்கிறேன்.
மற்றும் நான் நாணயஸ்தர்கள் என்றும், இயக்கத்தினிடமும் என்னிடமும் உண்மையான பற்று உள்ளவர்கள் என்றும், நம்பின தோழர்கள் பலர் ஆயிரக்கணக்கில் ரூபாய்களை மோசம் செய்து விட்டதைக் கண்டும், கண்டுபிடித்தும் வருகிறேன். சிலர் இன்னமும் என்னை மோசம் செய்து வருவதாக அய்யம் கொண்டும், உறுதி கொண்டும் வருகிறேன்.
இந்த நிலையில் என்னைப் பற்றியும், இயக்கத்தைப் பற்றியும், இயக்க நடப்பைப் பற்றியும், எனக்குப் பின்னும் ஒரு அளவுக் காவது இயக்கம் நடைபெற வேண்டும் என்பது பற்றியும், ஏதாவது ஒரு வழி செய்ய வேண்டியதைப் பற்றியும் மிகக் கவலையுடனும், பற்றுடனும் சிந்தித்து நடக்க வேண்டியவனாக இருக்கிறேன். இந்த சிந்தனை கடந்த 4, 5 மாதங்களாகவே என்னை வாட்டி வருவதுடன், என் உடல் நிலைக்கும் காரணமாக இருந்து வருகிறது.
இதற்கான என் அனுபவத்தைக் கொண்டு எனக்குத் தோன்றியதை நான் செய்து முடிக்க ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறேன். சற்றேறக் குறைய ஒரு முடிவுக்கும் வந்துவிட்டேன். அக்காரியங்கள் எனது தோழர்களுக்கும் என்னிடம் அன்பும், எனது நலத்தில் கவலையும் உள்ளவர் களுக்கும் சற்று புரட்சியாகவும் திடுக்கிடக் கூடியதாகவும், இயக்கமே அழிந்து விடுமோ என்று பயப்படக் கூடியதாகவும், எனக்கும் ஒரு கெட்ட பேரும், இழிவும் ஏற்படக் கூடிய பெரிய தவறாகவும் கூட காணப்படுவதாகத் தெரிகிறது. பொது மக்களுக்கும் அப்படியே காணப்படலாம்.
எனக்கு வயது 71-க்கு மேலாகிறது. நான் பொதுவாழ்வில் 40, 50 வருஷகால அனுபவமுடையவன். பொது ஜனங்களையும், சிறப்பாக பாமர மக்களையும் ஒரு அளவுக்கு உணர்ந்தவன். அவர்களது மனப்பான்மையையும்
(Mass Psychology) தெரிந்தவன். நான் நடப்பு முறையில் சுலபமாக யாருக்கும் இணங்கி விடக் கூடிய அளவு வழவழப்பானவன் என்றாலும் கொள்கை, லட்சிய முறையில் உறுதியானவன், என்னிடம் உள்ள இயற்கைக் குணம் என் நண்பர்களுக்கும், கூட்டு வேலைக்காரர் களுக்கும் எவ்வளவு பொருத்தமற்றதாக இருந்தாலும் குற்றமானதாகக் காணப்பட்டாலும் இந்த 30 ஆண்டில் என் கூட்டு வேலைக்காரர்கள் பலர் விலகினாலும், அவர்கள் அதிருப்தியையும், எதிர்ப்பையும் கடந்து அந்த என் இயற்கைக் குணத்தாலேயே மற்றவர் என்ன நினைப்பார்களோ என்பதைப் பற்றி கவலைப்படாமல் நடந்து வந்ததாலேயே, யார் இயக்கத்தை விட்டுப் போனாலும் சரி, எனக்கு எதிரியானாலும் சரி என்று உறுதியாய் நடந்ததாலேயே, பொது ஜனங்களுடைய நம்பிக்கைக்கு சிறிதாவது ஆளானவனாக இருந்து இயக்கத்தை நடத்தி வந்திருக்கிறேன். எனது காரியம், கொள்கை, திட்டம் எதுவானாலும் அவை பற்றி என் அனுபவத்தில், துவக்கத்தில் நான் வெளியிடும் போது பொதுவாகவே மக்களுக்கு எவ்வளவு கஷ்டமாக, கேடானதாகக் காணப்பட்டாலும், அதை விடாப்பிடியாய் நடத்திக் கொண்டு வந்து, ஆட்சேபித்த மக்களை பெரிதும் ஆமோதிக்கச் செய்தே வந்திருக்கிறேனே தவிர, தவறு செய்ததாகக் கருதி விட்டு விடவோ, திருத்திக் கொள்ளவோ, துக்கப்படவோ எனக்கு வாய்ப்பே ஏற்பட்ட தில்லை. அனேக தடவை எனது மானாவமானத்தைப் பற்றிக் கூடக் கவலைப்படாமலும் நடந்து வந்திருக்கிறேன்.
பொதுவாகச் சொல்ல வேண்டுமானால் எனது பொதுநல வாழ்வு என்பது பொதுமக்களுக்காக என்று கருதி வாழ்ந்து வந்திருந்தாலும்கூட, அவைகளை என் சொந்த வாழ்வுக்காகச் செய்யப்படும் என் சொந்தக் காரியம், என் சொந்த சொத்து என்பதாகக் கருதியே சுயேச்சையாய், சொந்த உரிமையாய் நடந்தும், நடத்தியும் வந்திருக்கிறேன்.
ஆகவே, அப்படிப்பட்ட உரிமையையும், சொந்தப் பொறுப்பையும் ஆதாரமாய்க் கொண்டே எனது லட்சியத்தின் நன்மை, இயக்கத்தின் நன்மை என்பதைக் கருதி மேல்காட்டிய அவசர நிலையில் இயக்கத்திற்கு ஆக சில ஏற்பாடுகள் செய்ய முன் வந்து விட்டேன். அதைச் செய்ய வேண்டியது எனது அறிவான, யோக்கியமான கடமை என்று உண்மையாகக் கருதி விட்டேன். இதைப் பற்றி முழு விவரமும் தெரியாதவர்களும் நடுநிலையில் அரைகுறையாய் அறிய நேர்ந்தவர்களும், என் செயலை தவறாகக் கருதலாம்; ஆத்திரப்படலாம்; எதிரிகள் இதை தங்களுக்கு அனுகூலமாகப் பயன்படுத்திக் கொண்டு பெரியதொரு கேடு ஏற்பட்டதாக துடிதுடிக்கலாம். என் பொறுப்பு எனக்குப் பெரிது. அது எனக்குத் தெரியும். பொது மக்களுக்கு ஆக என்று நான் எடுத்துக் கொண்ட காரியம். அவர்கள் என்னை நம்பி நடந்து கொண்ட தன்மை ஆகியவை களும் என் ஆயுள் வரையும், கூடுமான அளவு ஆயுளுக்குப் பின்னும் ஒழுங்கானபடி நடக்கும்படியாகப் பார்த்து என் புத்திக்கு எட்டினவரை அறிவுடைமையோடு நடந்து கொள்ள வேண்டியது எனது கடமையாகும்.
என் வார்த்தையை, நடத்தையை நம்பாமல், ஒப்புக் கொள்ளாமல் எனது காரியத்தைக் குறை எண்ணுபவர்களுக்கு சமாதானம் சொல்லவோ அவர்களுக்குத் திருப்தி ஏற்படும்படி நடக்கவோ இந்த அவசர சமயத்தில் நான் கவலை எடுத்துக் கொள்ளுவதும், கருதுவதும் வீண் வேலை என்று கருதித் தீர வேண்டியவனாக இருப்பதால் அந்த வேலையை இப்போது நான் மேற்கொள்ளவில்லை.
எனவே, சுமார் 4, 5 மாதங்களாகவே பொதுக்கூட்டங்களில் எனது பேச்சிலும், எழுத்திலும் தெரிவித்து வந்திருக்கிறபடியும், கோவை மாநாட்டில் எனக்கு வாரிசு ஏற்படுத்துவது பற்றித் தான் கவர்னர் ஜெனரலிடம் பேசினேன் என்று வெளியிட்டபடியும், அதில் மக்களுக்கு உறுதி கூறினபடியும் சமீபத்தில் 19ஆம் தேதிவிளக்கம்என்னும் தலைப்பில்விடுதலையில் குறிப்புக் காட்டி வந்திருக்கிறபடியும் முதலில் எனக்கும், எனது பொருளுக்கும் சட்டப்படிக்கான வாரிசாக ஒருவரை ஏற்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமும், அவசரமு மாகையால் நான் 5, 6 வருஷ காலமாக பழகி நம்பிக்கை கொண்டதும் என் நலத்திலும், இயக்க நலத்திலும் உண்மையான பற்றும், கவலையும் கொண்டு நடந்து வந்திருக்கிறதுமான மணியம்மையை எப்படியாவது வாரிசுரிமையாக ஆக்கிக் கொண்டு அந்த உரிமையையும், தனிப்பட்ட தன்மையையும் சேர்த்து மற்றும் சுமார் 4, 5 பேர்களையும் சேர்த்து இயக்க நடப்புக்கும், பொருள் பாதுகாப்புக்குமாக ஒரு டிரஸ்ட்டு பத்திரம் எழுத ஏற்பாடு செய்திருக்கிறேன். அப்பத்திரமும் எழுதப்பட்டு வருகிறது. இதில் சட்டப்படி செல்லுபடி ஆவதற்காக என்று நமது இஷ்டத்துக்கு விரோதமாக சில சொற்கள் பயன்படுத்த நேரிட்டால், அதனால் கொள்கையே போய்விட்டதென்றோ, போய்விடுமோ என்றோ பயப்படுவது உறுதியற்ற தன்மையேயாகும்.
குறிப்பு: இதை ஏன் இப்போது தெரிவிக்கிறேன் என்றால், இந்த ஏற்பாடு இயக்கத் தோழர்கள் என்பவர்கள் சிலருக்குப் பிடிக்கவில்லையென்று எனக்குத் தெரிய வருவதாலும், எந்தக் காரியமும் முடிந்த பின் தான் உருவாகக் கூடுமானதாலும், ஏதாவது காரணத்தால் இது நடைபெறாமல் போகுமானால் வேறுவிதமாய் எனக்கு ஏதாவது முடிவு ஏற்படுமானால் (தடை, முடிவு எந்த நிமிஷமும் எதிர்பார்க்கக் கூடியது தானே) பொதுமக்களுக்கு என் உள்ளம் தெரிவதற்காக வேண்டியே இப்போது தெரிவிக்கிறேன். மக்கள் சுபாவம் எனக்குத் தெரியும்.
மக்களின் பொதுநல உணர்ச்சி என்பது எப்படிப்பட்டது என்பதும், அவர்களின் சராசரி நாணயம், தன்னல மறுப்பு எவ்வளவு என்பதும், எவ்வளவு பேர் பொதுநலத்துக்காக மாத்திரம் வாழ்பவர்கள், எவ்வளவு தூரம் நடப்பவர்கள் என்பதும் எனக்குத் தெரியும் என்பதை எனது நண்பர்கள் உணர வேண்டுகிறேன்.
(‘விடுதலை’ 28.6.1949.)
---------------------

.வெ.ரா. குறிப்பு
நான் இன்று சென்னைக்கு வந்தேன். சுமார் 10 நாள் நான் சென்னையில் இல்லாதிருந்த காரணத்தால் நான் எனக்கு ஒரு வாரிசு ஏற்படுத்திக் கொள்ளுவது என்ற ஒரு முயற்சியை ஒரு சாக்காகக் கொண்டு இச்சென்னையில் இயக்கத் தோழர்கள் பெருத்த கிளர்ச்சி செய்து இருப்பதாக அறிந்தேன். இயக்கத்தில் பொதுவாக இயக்கத் தோழர்கள் என்பவர்கள் சிலரிடத்தில் எனக்கு சில நாளாகவே அதிருப்தி உண்டு. சிலரிடம் சந்தேகமும் உண்டு. சிலருக்கு இதனால் நட்டமும் உண்டு. சிலரை நான் வெறுத்தும், கண்டித்தும், ஒதுக்கியும் வந்திருக்கிறேன்.
இப்படிப்பட்டவர்களில் சிலர் இந்த சமயத்தைப் பயன்படுத்திக் கொண்டு தங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்ததாய் எண்ணி மற்ற இயக்கத் தோழர்கள் சிலரையும் வசப்படுத்திக் கொண்டு பெரிய திட்டம் போட்டு தமிழ்நாடு முழுவதும் எதிர்ப்பு வேலை செய்யப் போவதாகவும், எதிரிகளின் பத்திரிகைகளின் ஆதரவு பெற்று இருப்பதாகவும் உணர்ந்தேன்.
ஜாமீன் தொல்லை, உடுமலை முதலிய கேசுகள், சர்க்கார் அடக்குமுறை,  இந்தித் தொல்லை ஆகியவைகள் கொண்ட இந்த நெருக்கடி உள்ள எனது நிலைமை அவர்களுக்குத் தக்க வாய்ப்பு என்று கருதிக் கொண்டு இதில் இறங்கி இருக்கிறார்கள். நான் எதையும் அதனதன் இயற்கை முடிவுக்கே விட்டு விட்டேன்.
எப்படி இருந்தாலும் இயக்கத் தோழர்களும், பொதுமக்களும் சிறிது உஷாராய் இருக்க வேண்டும் என்பதற்கு ஆக இதைக் குறிப்பிடுகிறேன்.
மக்கள் சீக்கிரத்தில் இதன் உண்மையை, கிளர்ச்சிக்காரர் களின் தன்மையை, அதன் இரகசியத்தை அறியக்கூடும்.
- .வெ.ரா.
(1.7.1949. ‘விடுதலை’)

விளக்கம் கேட்ட தோழர்களுக்கு...
7.7.1949 ‘விடுதலைஇதழில் விளக்கம் கேட்ட தோழர்களுக்கு பெரியார் விளக்கம் தருகிறார்.
என் 19.6.1949, 28.6.1949 தேதி விளக்கம் என்ற அறிக்கை விஷயமாய் சிலர் தவறாக செய்து வரும் பிரசாரத்தைப் பற்றி பல தோழர்கள் எனக்குக் கடிதம் எழுதி அதை சரியானபடி தெளிவுபடுத்துங்கள் என்று எழுதி இருக்கிறார்கள்.

என் 19-ந் தேதி அறிக்கையில்:
இயக்க விஷயத்தில் நான் இதுவரை அலைந்தது போல் அலைய உடல் நலம் இடம் கொடுக்கவில்லை. என்னைப் போல் பொறுப்பு எடுத்துக் கொள்ளத் தக்க ஆள் யார் இருக்கிறார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளவர் கிடைக்கவில்லை. ஆதலால் எனக்கு ஒரு வாரிசு ஏற்படுத்தி அவர்  மூலம் ஏற்பாடு செய்து விட்டுப் போக வேண்டும் என்று அதிக கவலையாக இருக்கிறேன் என்பது பற்றி தோழர் சி.ஆர். (இராஜாஜி) அவர்களிடம் பேசினேன். இது தவிர சி.ஆர். பேச்சில் வேறு இரகசியம் இல்லை என்பதாக தோழர் சி.ஆர். இடம் பேசிய பேச்சைத் தான் நான் கோவையில் வெளிப்படுத்தியதை அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறேன். இதுவும் அந்தப் பேச்சை வெளியிட வேண்டுமென்று பலர் கேட்டதால் வெளி யிட்டதைக் குறிப்பிட நேர்ந்தது.
ஆனால் அதே அறிக்கையின் கீழ் பாகத்திலேயேநம்பிக்கையான ஒருவர் கிடைக்கவில்லை என்றால் யாரும் கோபித்துக் கொள்ளக் கூடாதுஎன்று எழுதிவிட்டு,
இயக்கத்துக்குத் தொண்டாற்றவும், பொறுப்பு ஏற்கவும், முழு நேரத் தோழர்கள், தங்களை முழுதும் ஒப்படைப்பவர்கள்
என்பது தான் அர்த்தம் என்று விளங்கவும், “அப்படிப் பட்டவர்கள் யார் இருக்கிறார்கள்?” என்றும் அந்த அறிக்கையிலேயே கேட்டு விளக்கி இருக்கிறேன்.
மற்றும் ஒரு ஏற்பாடு செய்யப் போகிறேன்  என்பது பற்றியும் அது என்ன ஏற்பாடு என்பதை 28.6.1949 தேதி அறிக்கையில் விளக்கி இருக்கிறேன்.
அதாவது,
என்னைப் பற்றி, இயக்கத்தைப் பற்றி, இயக்க நடப்புப் பற்றி, எனக்குப் பின்னால் இயக்கம் நடைபெற வேண்டும் என்பது பற்றியும் என்று விளக்கி இருக்கிறேன்.
மேலும் அதே 28-ந் தேதி அறிக்கையில்,
19-ந் தேதி அறிக்கையில் நான் குறிப்புக் காட்டி இருக்கிறபடி (ஏற்பாடு என்பதற்குப் பொருள் நன்றாய் விளங்கும்படியாகவே)
எனக்கும், எனது பொருளுக்கும் சட்டப்படிக்கான ஒரு வாரிசை ஏற்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம்என்று எழுதிவிட்டு அதன் கீழேயே அந்த வாரிசுக்கும், இயக்கத்துக்கும் என்ன சம்பந்தம் ஏற்படும் என்பதைப் பற்றியும் தெளிவுபடுத்தி இருக்கிறேன்.
அந்த வாரிசு உரிமையையும், தனிப்பட்ட உரிமையையும் மற்றும் 5 பேர்களையும் சேர்த்து இயக்க நடப்புக்கும், பொருள் பாதுகாப்புக்கும் ஒரு டிரஸ்ட்டு பத்திரம் எழுத ஏற்பாடு செய்திருக்கிறேன்.”
இப்படி எழுதி இருப்பதில் நான் மற்றவர்களை அலட்சியப் படுத்தியதாகவும், இயக்கத் தலைமைப் பதவியை மணியம் மைக்கு பட்டம் சூட்டப் போவதாகவும், பொருள் கொள்ளு வதற்கு இடம் எங்கே இருக்கிறது?
என் பொருள், என்னை நம்பியே பிறர் கொடுத்த பொருள் ஆகியவைகளை (இயக்க நிதி வேறாக இருக்கிறது) இயக்க சம்பந்தப்படுத்தி, ஒரு ஏற்பாடு செய்வதற்கு நான் ஒரு ஏற்பாடு செய்கிறேன் என்று தான் கருதி எழுதி இருக்கிறேன் என்பதை தோழர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
இயக்கம் இன்று ஒரு அமைப்பாகவே இருக்கிறது. இயக்கத் துக்குத் தலைவர், நிர்வாகக் கமிட்டித் தவைர், கிளைக் கழகங்கள் முதலியவைகள் இருக்கின்றன. இவைகளை யார் மாற்றக் கூடும்? இதில் தனிப்பட்டவர்களுக்கு என்ன உரிமை ஏற்பட்டு விடும்? எந்த இயக்கத்திலும், எந்த ஸ்தாபனத்திலும் தனிப்பட்ட இரண்டொருவருக்கு சற்று அதிகமான செல்வாக்கு அல்லது லீடர் தன்மை வெளிப்படையாகவோ, மரியாதை மூலமாகவோ இருந்து வரும். இது இயற்கை.
ஆனால், இனி மேல் அப்படி இருக்க முடியாது. ஜனங்களுக்கு சுதந்திர உணர்ச்சி அதிகமாகி விட்டதால் வருங்கால மக்கள் ஒரு தனி மனிதனை தனி மரியாதை செய்ய வேண்டிய தலைவனாக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். பொருளைப் பொருத்த வரை சட்டப்படிக்கான பாதுகாப்பு இருந்தால்தான், அது பாதுகாக்கப்படலாம். பொருளே வேண்டாமென்றால் இனி வரப்போகிற காலத்தில் எந்த இயக்கமும் கலவரத்தில், குழப்பத்தில் தான் முடியும். பொருள் இனி சுலபமாக கிடைக்காது. வேண்டாம் என்றால் எனக்கு ஆட்சேபணை இல்லை.
காங்கிரசுக்கு பலம் இனிமேல் கட்டுப்பாட்டால் அல்ல. தலைவன் தன்மையாலும் அல்ல. அதற்கு 100 கோடி ரூபாய் சேர்த்து அதற்கு நிர்வாகிகளாக ஒரு சிலர் (தாங்களே) ஆகி அதை கைவசத்தில் வைத்து இருப்பதுதான். மற்றவைகளை இப்போது விவரிப்பது பயனுடையதாக ஆகாது.
ஆதலால், ‘வாரிசுஎன்று நான் குறித்தது எனது உள்பட பொருளுக்குத் தான்.
டிரஸ்ட்டு என்றது 5, 6 பேர்கள் கொண்ட டிரஸ்ட்டு ஆகும். அதில் ஒருவர் என் வாரிசு என்று தான் குறிப்பிட்டேன்; மற்றபடி இவை இயக்கத் தலைமைக்கு அல்ல.
நம்பிக்கையான ஆள் என்றது முழு நேர உழைப்பும், ஒரே நிலையான உறுதியும், பொறுப்பும், ஓய்வு ஒழிவு எதிர்பாராமல் இதே வேலையாய், கவலையாய் தொண்டாற்றும் தன்மையும், தளரா உள்ளமும் உள்ளவைகளை காண முடியவில்லை என்றது தானே ஒழிய, பணம் காசையோ பொருத்ததல்ல நான் சொன்னது.
மக்களை ஏதாவதொரு ஆத்திரக் கருத்தைக் காட்டி கிளப்பி விட்டு விடலாம். ஆனால், அது இயக்க லட்சியத்துக்கும், நடப்புக்கும் பயன்பட வேண்டாமா? சிறு பிள்ளைகள் பாவம், பதட்டமாக இருந்தாலும், பெரியவர்களாக நீண்டநாளாக கூட ஒத்து உழைத்து, இருக்கிறவர்கள் மிக மிக ஜாக்கிரதையாக, பொறுப்பாக சிந்தித்துப் பார்த்து முடிவுக்கு வர வேண்டும்.
நாளைக்கு இயக்கத்தை யார் வேண்டுமானாலும் கைப்பற்றி விடலாம். அது ஒருவர் கையிலேயே இருக்க வேண்டுமானால், அதாவது ஏற்ற ஒரு லட்சியத்திலேயே இருக்க வேண்டுமானால் நிதியும், அதைவிட முக்கியமான திடமாக நடத்துகிறவர்களும் வேண்டும். அல்லது இயக்கப் பொருள் வேறு கொள்கைக் காரர்கள் கைக்குப் போகாமல் பாதுகாப்பாவதும் வேண்டும். எதற்கும் மெஜாரிட்டியே போதாது. ஆத்திரமே போதாது. மக்களை ஆத்திரத்திற்கும், ஆவேசத்திற்கும் கிளப்பி விடும் மந்திரங்களே போதாது.
ஆதலால் பொறுப்புள்ள அறிஞர்கள், இளைஞர்கள் இதைக் கவனித்து நடந்து கொள்ள வேண்டுகிறேன்.
மற்றபடி பிரஸ்தாப திருமணம் என்பது சட்டப்படிக்கான பெயரே ஒழிய, காரியப்படி எனக்கு வாரிசு தான்.
மணியம்மை அறியாத சிறிய பெண் அல்ல. 31-வது வயதும் பூப்படைந்து 15, 16 ஆண்டாக திருமணத்தை வெறுத்து இயக்கத் தொண்டில் ஈடுபட்டு வருகிற பெண்ணும் ஆகும். அதற்கு அதன் 14-வது வயதில் திருமணமாகி இருந்தால், இன்று பேரக் குழந்தைகளை பெற்று இருக்கலாம்.
மணியம்மையின் தந்தையாரே அது திருமணம் செய்து கொள்ள இஷ்டப்படாததை ஏற்று,  தங்கள் வீட்டிலேயே பூப்பெய்திய பின் 10, 11 ஆண்டு காலம் திருமணம் இல்லாமல் வைத்து இருந்திருக்கிறார். மணியம்மை வாரிசு என்பது, டிரஸ்ட்டு சம்பந்த உரிமை என்பதும், மணியம்மைக்கு சுதந்திர பாத்தியமுடையதல்ல. பரம்பரை பாத்தியமுடையதுமல்ல.
ஆனதால் இந்தத் திருமணம் பொருத்தத்தை அல்லது மணியம்மையை ஏமாற்றும் திருமணமும் அல்ல. ஏன்? பொருந்தாத திருமணமும் அல்ல. மணியம்மை உள்பட யாருக்கும் எந்தவிதமான நிர்பந்தமோ, அவருக்கு இஷ்ட மில்லாத துன்பங்களை சகித்துக் கொண்டிருக்க வேண்டிய, அதாவது வாழ்நாள் அடிமைத் தன்மைக்கு ஆளானதோ ஆன திருமணம் அல்ல.
விளக்கம் கேட்ட தோழர்களுக்கு இந்த விளக்கம் இப்போதைக்குப் போதும் என்று கருதுகிறேன்.”
.வெ.ரா.
(‘விடுதலை’ 7.7.1949).

9.7.1949 ‘விடுதலைஇதழில் வெளியான கட்டுரை:

இன்னமுமா விளக்கம் தேவை?

திராவிடர் கழகத் தலைவர்திருமணம்விஷமப் பிரசாரத் துக்குப் பயன்படுத்தப்பட்டு எதிரிகள் ஊர் ஊராய் சென்று எதிர்ப்பை உண்டாக்கி, அதைப் பிரமாதப்படுத்திய பின்பு என்ன காரணத்தாலோ இப்போது இவ்வளவு சீக்கிரத்தில் கழகத் தோழர்கள், பலர் ஒன்றும் புரியாமல் திண்டாடுவதாகத் தெரிகிறது. இன்று வந்த கடிதங்களும், நபர்களும் மிகவும் சுரம் குறைந்த தன்மையில் துக்கக் குறிகளோடு காணப்படுவ தல்லாமல்இந்த நிலையில் நாங்கள் என்ன செய்ய வேண்டும்?’ என்று கேட்க வேண்டிய கவலைக்கு வந்து இருக்கிறார்கள்.
எல்லாம் அறிக்கை, குறிப்பு, விளக்கம் என்னும் பேரால் தெரியப்படுத்தி ஆகிவிட்டதேஎன்று சொன்னால், அதற்குஉங்கள் சங்கதியைத் தெரிவித்து விட்டீர்கள். நாங்கள் என்ன செய்ய வேண்டும்; எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றி தெரிவிக்கவே இல்லையேஎன்று கேட்கிறார்கள்.
25 வருஷக் காலமாக சுயமரியாதைப் பிரசாரம், பகுத்தறிவுப் பிரசாரம், பொதுவுடைமை சமதர்மப் பிரசாரம், உண்மை நாடுவோர் பிரசாரம், ஜஸ்டிஸ் கட்சி பிரசாரம், திராவிடர் கழகப் பிரசாரம் செய்து வந்தும், “திராவிட கழகத்தார் முன்னால் எப்படிப்பட்ட கட்சிக்காரரும் பேச முடியாது. அவர்களைப் போல் பேச்சில், பகுத்தறிவில் கெட்டிக்காரர்கள் யாரும் இல்லைஎன்கின்ற பெயர் பெற்று இருந்தும், இன்று சிறிது கூட பகுத்தறிவைச் செலுத்தி சிந்தித்துப் பார்க்க கவலை கொள்ளாமல் பகுத்தறிவு செலவுக்கு சிக்கனம் காட்டி விட்டு ஏதோஒரு சமயம் கிடைத்தது; நமது ஆத்திரத்தை தீர்த்துக் கொள்ளுவதற்குஎன்கின்ற முறையில் ஒரு கும்பல் கும்மாளம் அடிப்பதற்கு அடிமையாகி விட்டு இன்று வந்து நாங்கள் என்ன செய்வது? என்று கேட்டால் என்ன சொல்ல முடியும்?
செய்து வந்த வேலை பயன்படவில்லை. இந்தக் கூட்டத்தை வைத்துக் கொண்டு ஸ்தாபன ரீதியாய் இனி ஒரு காரியமும் செய்ய முடியாதுஎன்கின்ற நிலைக்கு வர வேண்டி இருக்கலாமே தவிர, இதில் மக்களுக்குச் சொல்ல வேண்டியது என்ன இருக்கிறது?
இந்தப்படி எத்தனை தரம் விஷமத்தனமானதும், கண்மூடித் தனமானதுமான எதிர்ப்புகளுக்கு சமாளிப்பு கொடுத்து வருவது? இது முதல் தடவை அல்லவே.
வெள்ளையனிடம் சுயராஜ்யம் பெற்ற மக்கள் நிலையைப் போல் தான் நம் கழக மக்கள் நிலையும் ஏற்பட வேண்டிய தத்துவத்தில் இருந்து வருகிறது. ஆதலால் சில நாட்களுக்காவது கழகம் தன்னரசாகவோ, ‘பூரண சுயேச்சை உடையதாகவோ இருக்கலாமேஎன்பதைத் தவிர, ‘நாங்கள் என்ன செய்வது?’ என்று கேட்பவர்களுக்கு பதில் சொல்ல வேறு வகை காணவில்லை.
இந்தக் கொதிப்பில் சென்னை நகரம், கோவை நகரம் இரண்டைத் தவிர வேறு இடங்கள் எதுவும்  தலைவிரி கோலமாய் நடந்து கொண்டதாகத் தெரியவில்லை. மற்ற இடங்களிலும் ஏதோ சில என்பதாக இருந்தாலும், அவை பெரிதும் மற்றவர்கள் செய்த நிர்ப்பந்தத்தைக் கொண்டும், பொய்யும் புளுகும் கலந்த விஷமப் பிரசாரத்துக்கு ஆளாகியும், தூண்டுதல் மீதும், சொந்த வெறுப்புக்குப் பரிகாரம் தேடிக் கொள்ள இதை ஒரு சந்தர்ப்பமாகக் கொண்டும் ஆத்திரப்பட்ட தாகக் காணப்படுகிறது.
இருந்தாலும் எதிரிகளின் சதி அதுவும் முன்னதாகவே தெரிந்து, இரண்டு ஆண்டாக ஒவ்வொரு கூட்டத்திலும் எடுத்துக் காட்டி வந்த சதி ஒரு புரட்சி நடத்துவதில் சதியார்கள் வெற்றி பெற்று விட்டதாக மனப்பால் குடிக்கலாம். பலன் விஷயத்தில் இப்போதைக்கு அவரவர்களே சிந்தித்துக் கொள்ள வேண்டியது தான்.
இதுவரை சுமார் 150 கடிதங்கள் வந்திருக்கின்றன. அவைகளில் சில, பல பேர்  கையொப்பங்கள் உள்பட வந்திருக் கின்றன. சில எழுதினவர்கள் - ஊர்  பேர் இல்லாத மொட்டைக் கடிதங்களாக வந்திருக்கின்றன. 150 கடிதங்களில் ஒரு 15, 20 மட்டும் ஆதரித்த கடிதங்களும், கடைசிவரை கூட இருப்பதாக உறுதி கூறும் கடிதங்களும், ஆதாரம், மேற்கோள், ஆர்க்கு மெண்ட் கொண்ட கடிதங்களுமாக இருக்கின்றன. சில பிரசுரத்துக்கு வந்திருக்கின்றன; சில கடிதங்கள் கண்டபடி திட்டி, வைதும் எழுதப்பட்டிருக்கின்றன. இவை ஓய்வில் நேரப் போக்குக்கு வெளிப்படுத்தப்படலாம். இப்போது பிரசுரிப்பதற் கில்லை.
மற்றொரு விசேஷம் என்னவென்றால் சென்னையில் வீட்டுப் பக்கமும், ஆபீசுப் பக்கமும் 5, 6 நாள் ஒருவருமே நடக்காமல் இருந்த நிலை மாறி, இரண்டு நாளாய் அடிக்கடி உள்ளூர் மக்களும், வெளியூர் மக்களும் வந்து விசாரித்தும், “நாங்கள் இதில் மனப்பூர்வமாய் கலந்து கொள்ளவில்லை. கட்டாயப் படுத்தினார்கள், கையெழுத்துப் போடாவிட்டால் சமாளிக்க முடியாத நிலையாய் விட்டது, தட்டிப் பேசினால் எல்லோரும் பாய்ந்து அடக்கினார்கள்என்றும், மற்றும் சிலஇரகசியங் களும்சொல்லி ஆறுதல் தெரிவிக்க முயன்றதாகும்.
எப்படியிருந்தாலும் இன்றைய நிலை இனி காரியங்களை இயற்கைக்கு விட்டு விட்டு நிம்மதியாய் இருக்க வேண்டியதைத் தவிர இன்னது செய்யுங்கள் என்று சொல்ல வேண்டிய அவசியம் தோன்றவில்லை.
தைரியமும், துணிச்சலும், தெளிவும் இருக்கிறவர்கள் தங்களுக்கு சரி என்று பட்டதற்கு நன்றாய் போராடலாம். அவை இல்லாதவர்கள் சும்மாவிருக்கலாம். இருபுறமும் கருத்தை மாற்றிக் கொள்ள வெட்கப்பட வேண்டியதில்லை.
விடுதலை’ 9.7.1949.


என் விளக்கம்

தி.பொ.வேதாசலம் எழுதுவது
கழகத் தோழர்களே! சென்ற மூன்று வாரமாக நம் பெரியார் திருமணம் பதிவு செய்து கொள்ளுவது விஷயமாக நாம் பல வகையிலும் நினைத்து வருந்தி வருகின்றோம்.
இம்மாத இறுதிக்குள் நம் அருமைத் தலைவர் சிறைக்குள் தள்ளப்படுவார். மீண்டும் உயிரோடு வெளி வருவாரோ என்பதில் அவருக்கே நம்பிக்கையில்லை. இதை நினைக்கும் போது நம் நெஞ்சம் கலங்குகின்றது.
இந்நிலையில் நம்மில் பலர் அவரைக் குறை சொல்லி கடுஞ்சொற்கள் உபயோகிக்கின்றோம். ஏன்? திரு. மணியம்மையுடன் திருமணம் பதிவு செய்து கொள்ளப் போவதால்,

ஒரு மனிதன் எதற்காக மணம் செய்கிறான்?
1.         தனக்கு வாழ்க்கைத் துணைவி தேடிக் கொள்ளவும், உணவு சமைக்கவும், மற்ற உதவிகள் புரியவும்.
2.         பிள்ளைப் பேறு கருதி.
3.         தன் காம இச்சைக்கு உதவியாக்க.
மேலே சொன்ன மூன்று காரணங்களும் பெரியார் செய்து கொள்ளும் திருமணத்திற்கு கொஞ்சமும் பொருந்தாது. மணியம்மை சென்ற 6 ஆண்டுகளாக உணவு சமைத்தும், மற்ற பணிகள் ஆற்றியும் வருகிறார்கள்.  

பிள்ளைப் பேறு கருதியிருக்க முடியாது. காம இச்சைக்கு மணப் பதிவு முக்கியமல்ல. ஆகவே, இப்பதிவுத் திருமணம் தான் அனுபவிக்கும் சொத்துக்கள் தனக்குப் பின் மற்றவர் கைக்குச் செல்லாது கழகப் பணிக்கே திருப்ப வேண்டுமென்ற ஆவல்தான். ஆனால், இதற்காக தள்ளாத வயதில் ஒருவர் பெயரளவிற்குத் திருமணம் செய்வது பொருந்துமா என்பதுதான் கேள்வி. இது அவரவர் மன நிலையைப் பொறுத்ததுபெரியார் ஒரு
Platonic marriage முடிவே  அவருக்குக் கவலை. ஆகவே இம்முடிவு கொள்கின்றார். தோழர்கள் ஆழ்ந்து கவனிக்கவும். மேல்நாடுகளில் திரேக சம்பந்தமில்லாது செய்வது உண்டு. இதற்கு ஞடயவடிni அயசசயைபந என்று பெயர்.
தி.பொ.வேதாசலம்
குறிப்பு: பெரியார் திருமணம் பற்றி ஆதரித்தும், கண்டித்தும் வந்த கடிதங்களில் எதையுமே வெளியிட வேண்டாம் என்று பெரியார் அவர்கள் உத்தரவிட்டதின் பேரில், எதையும் இதுவரை வெளியிடவில்லை. இதுபோல் பல ஆதரவுக் கடிதங்கள் வந்துள்ளவாயினும் அவைகளை வெளியிடாமல், இதை மட்டும் வெளியிடுவதன் காரணம், இதை எழுதியிருப்பவர் திராவிடர் கழக மத்திய நிர்வாகக் கமிட்டியின் தலைவர் என்பதுடன், அவர் தம் விளக்கத்துடன் நமக்கு எழுதியிருக்கும் கீழ்க்கண்ட கடிதமுமாகும்.
ஆசிரியர். ‘விடுதலை

அன்புள்ள அய்யா,
என் விளக்கம்என்பதையும், நிர்வாகக் கூட்டம் பற்றிய அறிவிப்பையும் தயவு செய்து தங்கள் தினசரியில் வெளியிடவும்.
.... நாளையப் பத்திரிகையிலேயே வெளி வர வேண்டும் என்பது என் அவா....

பெரியார் - மணியம்மை திருமணம் - ஒரு வரலாற்று உண்மை விளக்கம், 
டி.பி.வேதாசலம் 8.7.1949. (9.7.1949. ‘விடுதலை’)




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக