திங்கள், 18 டிசம்பர், 2017

பெரியார் - மணியம்மை திருமணம் - ஒரு வரலாற்று உண்மை விளக்கம்


பெரியார் - மணியம்மை திருமணம்
- ஒரு வரலாற்று உண்மை விளக்கம்
கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்
தந்தை பெரியார் அவர்கள் அன்னை மணியம்மையார் அவர்களை, ஏன் முதிய வயதில்திருமணம்செய்து கொண்டார்? அதனால் தானே திராவிடர் கழகம் பிளவுபட்டு, இரண்டாகியது? திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சி உருவாவதற்கு அதுதானே காரணமாகச் சொல்லப்படுகிறது? அதுபற்றி இளைஞர்களாகிய எங்களுக்கு முழு உண்மைகள் தெரியவில்லை. காரணம் எங்களில் பலர் அப்போது பிறக்கவே இல்லை! அதுபற்றி தெளிவாக விளக்குங்கள் என்று திராவிடர் கழகம் இளைஞர்களுக்கென நடத்தும் கொள்கைப் பயிற்சிப் பட்டறைகளில் கேள்விகளைக் கேட்பதும் அதற்குச் சுருக்கமான விளக்கத்தை அளிப்பதும் உண்டு.
தனி வாழ்க்கை என்ற ஒன்றே இல்லாத, ஒப்பாரும் மிக்காரும் இல்லாத, தனித் தலைவர் தந்தை பெரியார்!
 மனித குலத்தின் துன்பங்களும், ஏற்றத் தாழ்வுகளும், சம ஈவு அற்ற தன்மைகளும், அறியாமையும் அவரை ஒரு தொண்டு செய்த பழமாக்கியது; பகுத்தறிவுப் பகலவனாக ஒளி வீசச் செய்தது.
அப்படிப்பட்ட தந்தை பெரியார் அவர்கள் சமூக நீதிக்காக, ஜாதி ஒழிப்புக்காக, தீண்டாமை அழிப்புக்காக, மூட நம்பிக்கை ஒழிப்புக்காக பொதுவாழ்க்கையில் இறங்கிய நாள் முதல் அவருக்குத் தனி வாழ்க்கை ஏதுமில்லை! அன்னை நாகம்மையார் அவரது தொண்டறத்துத் துணைவியாகவே அதிக காலம் வாழ்ந்தார். இல்லறத்து இன்பங்களை மறுக்க அவரால் பழக்கப்படுத்தப் பட்டார்; 1920 முதல் 1933 வரை அவர் பெரியாரின் கொள்கைத் துணைவியார் ஆகவே வாழ்ந்து மறைந்தார். அந்த மறைவினைதனது இல்லத்துப் பற்றுக் கோடும் மறைந் தது; இனி முழு நேரத் தங்குதடையற்ற, இயக்கப் பணிதான்என்று கூறி, ஆறாத் துயரத்தை ஆற்றிக் கொண்டார் அய்யா அவர்கள்!
1933-க்குப் பின், அவரது பொது வாழ்க்கையில் அவர் சந்தித்த மகளிர் ஏராளம்; அவரது குடும்பத்து உறவினர்களும் அவரை மற்றொரு திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியதும் அதிகம். அதை ஏற்காத பெரியார் அவர்கள், 1943 முதலே, தானாக வந்து, இயக்கத் தொண்டில் வந்து இணைந்து, தந்தை பெரியாருக்குத் தொண்டூழியம் செய்து, செவிலித் தாயாக, இயக்கப் புத்தக மூட்டைகளைச் சுமந்த விற்பனையாளராக தனது செயலாளர் போல் பணியாற்றி, பத்தியம் அறிந்து நடந்து நலம் காத்த நற்பணியாளராக இருந்த கே..மணியம்மையை அவர் ஏன் தனது 72-ஆம் வயதில் பலத்த எதிர்ப்பு, ஏளனம், கிண்டல், கேலி, வசவுகள், பழிதூற்றல் இவைகளைப் பொருட்படுத்தாமல்திருமணம்என்ற ஒன்றைச் செய்து கொள்ள வேண்டும்? அவரிடம் லவுகீக இன்பம் பெறுவதற்கா? இல்லை, அந்த அம்மை தான் சொத்து, சுகம் இவைகளைப் பற்றுவதற்காக பெரியாரை ஏமாற்றிவசியப்படுத்திஇப்படி ஒரு திருமணம் என்பது நடந்ததா?
உண்மைகள் பற்பல நேரங்களில் களபலி ஆகிவிடுகின்றன. சுயநலம், பதவி வேட்கை, அரசியல் ஆசாபாசம், இவைகள் சபலங்களாகி, சல்லடம் கட்டி நின்றன தந்தை பெரியாருக்கு எதிராக. தந்தை பெரியார் அவர்கள் அவரது நெருங்கிய நண்பர் திரு.சி.ராஜகோபாலாச் சாரியாரை, திருவண்ணாமலையில் 14.5.1949 அன்று கவர்னர் ஜெனரலுக்கு உரிய தனி ரயிலில் சந்தித்து ஆலோசனை கேட்டது எல்லாம் உண்மைக்கு மாறான செய்திகளைப் பரப்பிட உதவின.
புது யுகத்தின் தொலைநோக்காளர் பெரியார் அன்று எழுதிய விளக்கங்கள், அதன் பின் 57 ஆண்டுகள் உருண் டோடிவிட்ட நிலையில், இன்று அவர் அமைத்தகற் கோட்டைஎப்படிப் பாதுகாப்புடன், தக்கவரை, தக்க நேரத்தில் அடையாளம் கண்டு தக்கது செய்ததினால் உண்டானது என்பதை உணர முடிகிறதல்லவா?
அந்த நேரத்தில் அன்னை மணியம்மையார் பெற்ற வசவுகள், உலகின் எந்தப் பெண்மணியும் பெற்றிராதவை!
அய்யாவை 95 ஆண்டு காலம் வாழ வைத்து, அவர் தந்த இயக்கத்தையும்,  அதற்கு மேல் 5 ஆண்டு காலம் பாதுகாத்து, அய்யா அவருக்கு அளித்த சொத்து, அவரது தனிச் சொத்து  எல்லாவற்றையும் அவரும் பொது அறக்கட்டளையாகவே ஆக்கிய தொண்டறத்தின் உருவமானார். எப்படி தனது வாழ்க்கை இன்பத்தை தொண்டு என்ற பலி பீடத்தில் வைத்து, மலையினும் மானப் பெரிதானார் அம்மா!
திருமணம் பற்றி தந்தை பெரியார் தம் சிந்தனையைத் தூண்டும் அறிக்கைகள், தோழர் கைவல்ய சாமியார் சுய மரியாதை கொள்கை விளக்கக் கருவூலம், ‘நகர தூதன்ஆசிரியர் எழுத்து வல்லவர் மணவை திருமலைசாமி ஆகியோர்தம் எழுத்து விளக்கங்களை சுருக்கித் தருகின்றேன்.
தந்தை பெரியாரின் திருமணம் எங்களுக்கு ஒரு வாய்ப்பாக அமைந்தது; நாங்கள் அரசியலுக்குப் போக வேண்டுமென்று விரும்பினோம். அதற்காக இது பயன்பட்டது என்று தி.மு..வின் பொதுச் செயலாளர் பேராசிரியர் .அன்பழகன் அவர்கள், சுயமரியாதை இயக்கப் பொன்விழாவில் 1975 இறுதியில் தஞ்சையில், அன்னை மணியம்மையார் அவர்களது முன்னிலை யிலேயே வெளிப்படையாக, பல லட்சக்கணக்கானவர் களிடையே உண்மையை உரைத்தார்; உடைத்தார்.
தனக்குப் பின்னால் 50 ஆண்டுகளுக்குப் பின் என்ன நடக்கும் என்று கருதிச் செயல்படுபவனே சரியான தலைவன் என்று வி..காண்டேகர் ஒரு புதினத்தில் அருமையாகக் கூறினார்.
தந்தை பெரியார் தம் திட்டமிட்ட செயல்பாடுதான் ஓர் சமுதாயப் புரட்சி இயக்கம் இந்தியாவுக்கும், உலகத்திற்கும் பதவிக்குச் செல்லாமல் மக்கள் தொடர்பும் உள்ள, மாபெரும் செல்வாக்கும் உள்ள இயக்கமாக மலருவதற்கு வாய்ப்பாக்கி யுள்ளது.
1943 இல் அம்மா எழுதியது
64 ஆண்டுகளுக்கு முன்அம்மாஎழுதியது
(23.10.1943 ‘குடிஅரசுவார ஏட்டில் ஒரு சிறு அறிக்கை, வேலூர் .மணி எழுதுவது என்ற தலைப்பில் எழுதப்பட்டது)
பெரியாருடன் குற்றாலத்திலும், ஈரோட்டிலும் ஒரு மாத காலமிருந்தேன். அவர் உடல் நிலை மிக்க பலவீனமாகவும், நாளுக்கு நாள் மெலிவாகியும் வருகிறது. அவர் அதைப்பற்றிக் கவலைப்படவில்லை. அவருக்குப் பின், இயக்கக் காரியங்களைப் பார்க்க, தகுந்த முழு நேரக்காரரும், முழு கொள்கைக்காரர்களும் கிடைப்பார்களா? என்கிற கவலையிலேயே இருக்கிறார். இயக்கத்துக்காக என்று தன் கைவசமிருக்கும் சொத்துக்களை என்ன செய்வது என்பது அவருக்கு மற்றொரு பெருங் கவலையாய் இருப்பதையும் கண்டேன். அதோடு இயக்கத்துக்கு வேலை செய்ய சில பெண்கள் வேண்டுமென்றும் அதிக ஆசைப்படுகிறார். அப்பெண்களுக்கு ஜீவனத்துக்கு ஏதாவது வழி செய்து விட்டுப் போகவும் இஷ்டப்படுகிறார். இந்தப்படி, பெரியாரை நான் ஒரு மாத காலமாக ஒரு பெருங்கவலை உருவாகக் கண்டேன். அவர் நோய் வளர, அவை எருப்போலவும் தண்ணீர் பாய்வது போலவுமே இருக்கிறது. நான் ஒரு பெண், என்ன செய்ய முடியும்?
இன்னும் சில பெண்கள் முன்வர வேண்டும். அவர்கள் பாமர மக்களால் கருதப்படும், “மானம், ஈனம்ஊரார் பழிப்பு யாவற்றையும் துறந்த நல்ல கல்லுப் போன்ற உறுதியான மனதுடைய நாணயவாதிகளாகவும், வேறு தொல்லை இல்லாதவர்களாகவும் இருக்க வேண்டும். அவர்களது முதல் வேலை, பெரியாரைப் பேணுதலும், பெரியார் செல்லுமிடங் களுக்கெல்லாம் சென்று இயக்க மக்களை அறிமுகம் செய்துகொள்ள வேண்டியதும், இயக்கப் புத்தகங்களைப் படிக்கவும், எழுதவும், நன்றாய்ப் பேசவும் தெரிந்து கொள்ள வேண்டும். வீடுகள் தோறும் இயக்கப் புத்தகங்களும், ‘குடிஅரசும் இருக்கும் படியும் செய்து அவற்றை நடத்தும் சக்தி பெற வேண்டும். இந்நிலையில் சுயமரியாதை இயக்கம் இருக்கிறது. பெண் மக்களே யோசியுங்கள்என்று அம்மா மணியம்மையார் எழுதியுள்ளார்.
தன்னைப் பற்றி விளக்கம் தந்த தந்தை பெரியார் அவர்கள் (1972-ல்) எழுதும் போது, “.வெ.ராமசாமி என்கின்ற நான் திராவிட சமுதாயத்தைத் திருத்தி, உலகில் உள்ள மற்ற சமு தாயத்தினரைப் போல மானமும், அறிவும் உள்ள சமுதாயமாக ஆக்கும் தொண்டை மேற்போட்டுக் கொண்டு அதே பணியில் இருப்பவன்.
அந்தத் தொண்டு செய்ய எனக்குயோக்கியதைஇருக் கிறதோ, இல்லையோ, இந்த நாட்டில் அந்தப் பணி செய்ய யாரும் வராததினால், நான் அதை மேற்போட்டுக் கொண்டு தொண்டாற்றி வருகிறேன்....” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலே காட்டிய 1943-இல்குடிஅரசுஏட்டில் அன்னை மணியம்மையார் விடுத்த அறிக்கையை முன்னிறுத்திச் சிந்தித் துப் பார்த்தால்,
பெரியாரைப் பாதுகாக்கும் பணி, இயக்க நூல்களைப் பரப்பும் பணி, இயக்க ஏடுகளை நடத்தும் பணி இவை எல்லாப் பணிகளையும் ஏற்க வேறு எந்தப் பெண்ணும் மானம் பாராது தொண்டாற்ற முன்வராத நிலையில், தனக்கு யோக்கியதை இருக்கிறதோ இல்லையோ அந்தப் பணி செய்ய வேறு யாரும் முன் வராததால் நானே அத்தொண்டினை ஏற்று ஆற்றி வந்தேன். பெரியாரை மேலும் 30 ஆண்டு காலம் பாதுகாத்தேன்; அவர் தம் இயக்கப் பணிகளையும் அவருக்குப் பின் மேலும் 5 ஆண்டு தலைமைத் தாங்கி ஒழுங்குபடுத்தினேன் என்பது அவரது எழுதாத கல்லறை வாசகங்கள் (நுயீவையயீh) ஆக நிற்கவில்லையா நண்பர்களே?

விளக்கம்
தந்தை பெரியார் அறிக்கை:
இத்தலையங்கத்துக்குவிளக்கம்என்ற தலைப்பு ஏன் கொடுக்கப்படுகிறது என்றால், இந்த நெருக்கடியான சமயத்தில், நம் தோழர்கள் சிலர் பொது மக்களிடம் தவறான பிரசாரம் செய்து வருகிறார்கள் என்பது தெளிவாகத் தெரிய வருகிறது. இதனால் கழகத்துக்கு ஆவது, இயக்க வேலைகளுக்கு ஆவது ஒன்றும் குறைவு ஏற்பட்டு விடாது என்பதாக எனக்கு நல்ல தைரியம் இருந்த போதிலும், விளக்குவதில் எனக்கு ஒன்றும் கஷ்டமில்லை. ஆதலால், என் காதுக்கு வந்த விஷயங்களுக்கு விளக்கம் எழுதி விடலாம் என்று கருதுகிறேன்.
அதாவது,
1.         கவர்னர் ஜெனரல் ராஜகோபாலாச்சாரியார் அவர்களை நான் சந்தித்தஇரகசியம்’ (14.5.1949)
2.         அழகிரிசாமி இறந்துபோனது குறித்து கழகம் உதவி செய்யவில்லை என்பது.
3.         குறள் மாநாட்டில் பணக்காரர்கள் கலந்து கொண்டதுடன், பணக்காரர்களுக்குள் நான் ஒரு பணக்காரனாக ஆகி விட்டேன் என்பது.
4.         தஞ்சை ஜில்லா மாவூரில் அதாவது, சர்.ஆர்.எஸ்.சர்மா அவர்கள் எஸ்டேட்டில் மாணவர் பிரசாரப் பள்ளி வைத்து நடத்தினது என்பது.
இவைகளின் மூலம் இயக்கத்தின் கொள்கைகள் பலவீனப் பட்டு விட்டதென்பதும், நான் தவறாக நடக்கிறேன் என்பதும் ஆன எண்ணம் மக்களுக்குப் படும்படி சிலரால் பிரசாரம் செய்யப்படுகிறது.
இந்தப் பிரசாரத்தில் சரியாகவோ, தவறாகவோ பல இளைஞர்கள் கலந்திருக்கிறார்கள் என்பதும் தெரிய வருகிறது.
சி.ஆர். அவர்களிடம் நான் பேசியது (இரகசியம்) பற்றி கோவை மாநாட்டிலேயே (மே, 1949) பிரஸ்தாபிக்கப்பட்டது யாவருக்கும் தெரியும்.
அது மிகுதியும் என் சொந்த விஷயம் என்று முதலிலேயே தெரிவித்து விட்டேன். கோவையில் அதை நான் தெரிவித்த தோடு ஒரு விஷயம் அதிகமாகவும் சொல்லி விட்டேன். அதாவது இயக்க விஷயத்தில் எனக்கு இதுவரை அலைந்தது போக, அலைய உடல் நலம் இடம் கொடுக்கவில்லையென்றும், என்னைப் போல் பொறுப்பு எடுத்துக் கொள்ளத்தக்க ஆள் யார் இருக்கிறார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளவர்கள் கிடைக்கவில்லை என்றும், ஆதலால் எனக்கு வாரிசாக ஒருவரை ஏற்படுத்த, அவர் மூலம் ஏற்பாடு செய்து விட்டுப் போக வேண்டுமென்று அதிக கவலை கொண்டு இருக்கிறேன் என்றும், இதுபற்றி சி.ஆர். அவர்களிடம் பேசினேன் என்பதாகவும் சொல்லி இருக்கிறேன்.
இது தவிர, உண்மையில் சி.ஆர். பேச்சில் வேறு இரகசியம் இல்லை.
இந்தப்படி நான் சொன்னதான குறை கூறித் திரிகிறவர் களுக்கு மேலும் குறை கூற சற்று அதிக வசதி ஏற்பட்டு விட்டதாகவும் தெரிகிறது.
என்னவென்றால், “இயக்கத் தோழர்களில் .வெ.ரா.வுக்கு ஒருவரிடம் கூட நம்பிக்கை இல்லை என்று சொல்லுவது, இயக்கத் தோழர்களை அவமானப்படுத்தியதாக ஆகிற தென்றும், அப்படி சொன்ன பிறகு .வெ.ரா.விடம் மற்றவர்கள் எப்படி நம்பிக்கை வைக்க முடியும்என்றும், இப்படியாக பலவிதமாகச் சொல்லப்படுவதாகத் தெரிகிறேன். இதைப் பற்றி நான் அதிகம் விவரிக்க ஆசைப்படவில்லை.
இன்றைய அரசியல் நிலையில் அரசியலாருக்கு நம் இயக்கம் அழிக்கப்பட வேண்டும் என்கின்ற அவசியத்தில் இருக்கிறது. இதற்கு நம்மில் ஒரு ஆளாவது தன்னுடைய அழிவை லட்சியம் செய்யாமல் பலி ஆக வேண்டியது அவசியமான காரியமாகும். ஏனெனில் அந்தப் பலிக்காக இயக்கத்தை என்றும் அழிக்காமல் காப்பதாகும். அழிந்துபட்டதாகக் கண்ணுக்குத் தெரிந்தாலும், அதன் சமாதியில் இருந்தே அழிக்க அழிக்க முளைப்பதாகும். அந்த பலிக்கு முதலாவது தகுதி நான் என்றுதான் உண்மையாகக் கருதி இருக்கிறேன். இது அகம்பாவமான கருத்தாக சிலருக்குத் தோன்றலாம். தோன்றினால் குற்றமில்லை. உண்மை அதுதான். உண்மையை வெளிப்படுத்த அதற்கு விலை கொடுப்பது போல் இந்த அகம்பாவக் குற்றத்துக்கு நான் ஆளாக்கப்படும் விலையைக் கொடுத்து, அதைச் சகித்துக் கொள்ளுகிறேன். நான் பலி ஆவது என்பதை இன்று நேற்றல்ல, சில ஆண்டுகளாகவே முடிவு செய்து கொண்டிருக்கிறேன். என்றாலும் இந்தி எதிர்ப்பு துவக்கப்படும் பொழுதே உறுதியாக முடிவு செய்து கொண்டு தான் துவக்கினேன். இதை இந்த ஒரு ஆண்டில் 3, 4 தடவை குறிப்பிட்டுமிருக்கிறேன்.
அதாவது,
என்னைப் பற்றி ஒரு ஏற்பாடு செய்து கொண்டு இருக்கிறேன். அது முடிந்தவுடன் தீவிரமாக இறங்கி நடத்தப் போகிறேன்
என்று பேசியும், எழுதியும் இருக்கிறேன். சிறையில் இருந்து வந்த உடன் (சென்னை) பிராட்வே மைதானக் கூட்டத்தில் சொன்னேன். அந்த ஏற்பாட்டை இனி நாள் கடத்த ஆசைப்பட வில்லை. உடன் செய்து விட்டு பலிபீடத்துக்கு வரப்போகிறேன்.
நம்பிக்கையான ஒருவர் எனக்குக் கிடைக்கவில்லை என்றால், அதற்கு யாரும் கோபித்துக் கொள்ளக் கூடாது. கோபிக்கிறவர் களோ, குறை கூறுபவர்களோ அப்படிப்பட்ட ஒருவரைச் சொன்னால் நான் ஏற்கத் தயாராய் இருக்கிறேன். நம் இயக்கத்துக்குத் தொண்டாற்ற, பொறுப்பேற்க முழு நேரத் தோழர்கள், தங்களை முழுதும் ஒப்படைப்பவர்கள் யார் இருக்கிறார்கள்? யார் இருந்தார்கள்?
ஆதரவாளர்கள் அனேகர் இருக்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், திராவிட மக்கள் பெரிதும் மதித்து நம்பி பின்பற்றக்கூடிய அளவுக்கு நிலைமை கொண்டவர்களும், தன்னைப் பற்றிக் கூட கவலை இல்லாதவர்களும், இயக்கத் தொண்டே தனது முழு நேர மூச்சாகக் கொண்டவர்களுமாய் இருந்தால் அல்லவா அது பயன்படும்? ஆனதால், அப்படிப் பட்டவர்கள்தான் என் கருத்துக்கு எட்டவில்லை என்றேன். அதனால்தான் நானே பலியாக வேண்டி இருக்கிறது. இதைப் பொதுமக்கள் சீக்கிரம் காணத்தான் போகிறார்கள்.
தோழர் அழகிரிசாமிக்குக் கழகம் ஒன்றும் செய்யவில்லை என்பது விஷமப் பிரசாரமே ஒழிய, மற்றபடி அவர் உயிரு டனிருக்கும் போதும், காயலாவின் போதும், காலமான பிறகும் கழகச் சார்பாக கழகத்தினர் என்பதற்கு ஆக கழக அன்பர்கள்  கூடியதைச் செய்கிறார்கள். இது அழகிரிசாமி குடும்பம் அறியும்.
மாவூர் சர்.ஆர்.எஸ். சர்மா அவர்கள் எஸ்டேட் இடத்தில் மாணவர் பிரசாரப் பள்ளி ஒரு வாரம் நடத்தினதுப் பற்றி குறை. “சர்மா அவர்கள் பார்ப்பனர் ஆனதால் அங்கு செல்லலாமா?” என்பது குறை கூறுவதற்குக் காரணம்.
நான் அங்கு, அல்லது எந்தப் பார்ப்பனர் இடம் செல்வதையும் குறையாய்க் கருதுவதில்லை. பொதுவாகவே எந்தப் பார்ப் பனரிடமும் நான் விரோதமாய் நடந்து கொண்டதில்லை. விரோதமாய்க் கருதினதுமில்லை. பல கூட்டங்களில் பார்ப்பனர் களுக்கு நான் வேண்டுகோள் விடுத்து இருக்கிறேன்.
என்னைத் தவறாகக் கருதாதீர்கள். நான் உங்களுக்குச் சொந்த முறையில் எதிரி அல்ல; திராவிடர் கழகமும் உங்களுக்கு எதிரானது அல்ல. உங்களுக்கும், எங்களுக்கும் ஒட்ட முடியாமல், ஒன்றுபடச் செய்ய முடியாமல் இருக்கும் தடை களை ஒழிப்பதுதான் எங்கள் வேலையே ஒழிய, மற்றபடி உங்களை ஒழிப்பது என்பது எங்கள் கொள்கை அல்லஎன்று ஆயிரம் தடவை கூறியிருக்கிறேன். இதை அனுசரித்து அனேக பார்ப்பனர்கள் என்னைக் காணவும், என் கருத்தை அறியவும், என் கருத்துக்கு இசையவும் ஆசைப்பட்டிருப்பதை நான் உணர்ந்தேன். இதைச் சுமார் இரண்டு மாதத்திற்கு முன் திருச்சி பத்திரிகை நிருபரிடமும் தெரிவித்திருக்கிறேன். சிறு தவறு தலோடு அந்தச் செய்தி அசோசியேட் பத்திரிகைச் செய்தியாக பல பத்திரிகைகளில் வெளியாகி இருக்கிறது.
நிலைமை நெருக்கடி என்று நான் சொன்னாலும் நமக்கு ஆபத்தோ முழுகிப் போவதோ ஒன்றும் இல்லை. நாம் தேர்தல், பதவி, பண சம்பாதனை குறிக்கோள்காரர்கள் அல்லர். நம் இயக்கத்தில் அதற்கு இடம் இல்லை. நானும் இடம் கொடுக்க மாட்டேன். ஆதலால் நமக்கு ஒன்றும் நட்டமில்லை. நம் சமுதாய சம்பந்தமான காரியங்கள் நல்ல அளவுக்கு வெற்றி அடைந்து வருகின்றன. அதற்கும், நெருக்கடிக்கும் சம்பந்த மில்லை.
இந்த நெருக்கடி தீருவதை எந்த விஷமப் பிரசாரமும் தடைப்படுத்தி விடாது. ஏனெனில், பொதுமக்களுக்கு என்னிடம் யாராலும் அசைக்க முடியாத அன்பு, நம்பிக்கை இருக்கிறது.
திராவிடர்கள் ஒன்று சேரவேண்டும். சுயநலமற்ற தொண்டர் களும், நான் களத்தில் உள்ளவரையில் என்னிடம் உறுதியான நம்பிக்கை கொண்ட கூட்டு வேலைத் தொண்டர்களும் எனக்கு வேண்டும். அவர்கள் ஊரார் என்ன சொல்வார்கள் என்பதைக் கவனியாதவர்களாகவும், தொண்டில் மானாவ மானத்தை லட்சியம் செய்யாதவர்களாகவும் இருக்க வேண்டும்.
என்னைப் பற்றி, என் பெயரைப் பற்றி, என் நடத்தையைப் பற்றி உங்களுக்குக் கவலை வேண்டாம். நீங்கள் எனக்கோ, இயக்கத்துக்கோ உண்மையாய் நடந்து கொண்டீர்களா? என்பதை பார்த்துக் கொள்ளுங்கள். மற்றதை எனக்கே விட்டு விடுங்கள்.
என் வாழ் நாளில் அதாவது, எனது பொது வாழ்வில் எனக்குக் கிடைத்த வெற்றி எல்லாம் என் எதிரிகளாலும், எனக்குக் கேடு நினைத்தவர்களாலும், என்னை ஏமாற்றியதாக, ஏமாற்றுவதாகக் கருதிக் கொண்டு நடந்தவர்களாலும், நடக்கிறவர்களாலுமேதான் பெரிதும் கிடைத்திருக்கிறது என்பது எனது தெளிவு. ஆதலால் எதிர்ப்புக்கு, சதிக்கு நான் கவலைப்படுவதில்லை.
.வெ.ரா.
(‘விடுதலை’ 19.6.1949)



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக