ஞாயிறு, 17 டிசம்பர், 2017

நமது பண்பாடு சமற்கிருத மயமாக்கப்பட்டமை - தி. வை. சொக்கப்பா



ஓர் இனத்தின் உயிர்மை அதன் பண்பாட்டினால் புலனாகிறது. அதன் உண்மையான வெளிப்பாட்டினை இலக்கியத்தால் அறிய முடிகிறது. இலக்கியம் மொழியாலாகிறது. மொழியால் இலக்கியமும், இலக்கிய வாயிலாகப் பண்பாடும், பண்பாட்டினால் இனமும் வாழ்கிறது, வளருகிறது, ‘வேற்றுமொழிக் கலப்பால், மற்ற மொழியை அழிக்கவேண்டும் என்று திட்டமிட்ட ஆதிக்கத்தால், அம்மொழி சிதைந்து தேய்ந்து, அதனால் அவ்விலக்கியம் மறைந்து, மறைக்கப்பட்டு, இலக்கியத்தின் வெளிப்பாடாகிய பண்பாடு குலைந்து, பண்பாட்டினை வளர்த்த இனம் மங்கிப் போகிறது. மூவாயிரமாண்டுகளுக்கு முன் இத்தகைய நிலை தமிழினத்திற்கும் பண்பாட்டிற்கும் உருவாகி ஏற்படுத்திய விளைவுகளைப் பார்ப்போம்.

கி.மு. ஆயிரத்து அய்நூறு ஆண்டளவில் காந்தார நாட்டிலிருந்து கைபர் கணவாய் வழியாக வந்து நம் நாட்டில் புகுந்த ஆரிய இனம் இங்கு வாழ்ந்த திராவிட இனத்தோடு போராடி அவர்களின் சிறந்த நாகரிக (சிந்துவெளி நாகரிக) வாழ்வை அழித்து பல பகுதிகளில் குடியேறிற்று. பேரினமாயிருந்த திராவிடர்களைக் கொன்று வெற்றி காண்பது எளிதானதல்லவெனக் கண்டு அவர்களோடு உறவாடி அடிமைப்படுத்தி ஆளமுற்பட்டது.

ஆரியரும் எழுத்துக் கலையும்

வேதங்களை இயற்றியவர்களுக்கு எழுத்துக் கலை தெரிந்திருந்தது என்பதற்கான சான்றோ ஆதாரமோ இல்லை என்று ‘நாகரிக வரலாற்றின் ஆசிரியர் வில் டு ராண்டும், ஆரியர்கள் நாகரிக உலகோடு தொடர்பு கொள்வதற்கு முன்பாக எழுத்துக் கலை அறியாதவர்கள் என ‘உலக வரலாற்று ஆசிரியர் எச்.ஜி. வெல்சும் எழுதியுள்ளார்கள். பல்வேறு நாடுகளில் பரவிய ஆரியர்கள் அவர்கள் குடியேறிய நாடுகளில் வாழ்ந்த நாகரிக மக்களின் எழுத்துக்களையே பயன்படுத்தித் தங்கள் நெடுங்கணக்கை அமைத்துக் கொண்டார்கள் என அறியக் கிடக்கிறது. ‘அநாசாஸ் எனத் தங்களால் எள்ளி நகையாடப்பட்ட திராவிடர்களின் எழுத்துக்களையும் குறியீடுகளையும் பயன்படுத்தியே தங்கள் எழுத்துக்களை அமைத்துக் கொண்டார்கள் என்று ஹீராஸ் பாதிரியார் கூறுகிறார். ஆரியர்களின் வேதங்கள் சுருதியாக எழுதாக்கிளவியாக இருந்து தலைமுறை தலைமுறையாக செவி வழியாகவே நெடுங்காலம் நிலவி வந்ததற்கு அவர்கள் எழுதும் முறையை அறியாமையே காரணம் ஆகும். ஆரியருடைய முதனூலாகிய ரிக்கு வேதத்தில் பல தமிழ்ச் சொற்கள்-அணு, இராத்திரி, கணம், பழம், பூசனை போன்றவை-ஆளப்பட்டுள்ளன என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.

உணவு உற்பத்திக்காக ஏர்கொண்டு மண்ணைக் கிளறி உழவுத் தொழிலை மேற்கொள்வது பாவம் என மனுநீதி மூலம் ஆரியர்கள் ஒரு சித்தாந்தத்தை உருவாக்கிக் கொண்டு அடிமைப்படுத்தப்பட்ட திராவிடர்களை அத்தொழிலில் ஈடுபடுத்தி ஏற்றம் கொண்டனர்; ஆக்கம் பெற்றனர். வேதமொழியும் வடநாட்டில் நிலவிய பிராகிருதமும் கலந்து உருவான சமற்கிருதக் கலவை மொழியைத் திராவிடர்கள் கற்க வேண்டியதாயிற்று. ‘இந்திய நாகரிகத்தில் திராவிடப் பண்பு என்ற தம் நூலில் கில்பர்ட் சிலேட்டர் இதனையே ‘திராவிடர் மொழியில் ஆரிய மயமாக்கப்பட்டனர் எனக் குறிப்பிடுகிறார்.

அகத்தியரும் தமிழும்

ஆரியர் மொழி நிலை இவ்வாறிருக்க, ஆரிய முனிவராகிய அகத்தியர் பொதியமலையில் தங்கித் தமிழுக்கு முதனூலும் இலக்கணமும் வகுத்தார் என்ற கதையைப் புனைந்து, தமிழர்களை இன்றளவில் நம்ப வைத்துள்ளனர். அகத்தியர் வருகை தென்னகத்தில் ஆரியர் வருகைக் குறிப்பேயாகும். பல்வேறு காலங்களில்-நீண்ட இடைக்காலத்திற் கிடையில் - அவ்வையார் வாழ்ந்து பாடியதாக இலக்கியத்தில் காட்டப்படுவதுபோல், அகத்தியரும் பல்வேறு காலங்களில் பல்வேறு நாடுகளில் செயற்கரிய செய்ததாக இலக்கியத்தில் இடம் பெற்றிருக்கிறார். ஒருவரே ஒரு மொழியையும் அப்போதே அதன் இலக்கணத்தையும் படைக்கக்கூடும் என்ற கூற்றினை ஆராயவும் தயங்கும் அறிஞர்கள் முச்சங்க வரலாறு-அவைகளின் காலக்குறிப்பு, புலவர்களின் எண்ணிக்கை போன்றவற்றை நோக்குமிடத்து-அறிவுக்குப் பொருந்தாது, உண்மைக்குப் புறம்பானது என்று மாற்றார் அறையும்போது அலமந்து போகிறார்கள்.

தமிழ் இலக்கியத்தின் தொன்மைச் சிறப்பையும் அதன் விரிவையும் கண்டு பொறாது தமிழ் எழுத்து பிற்காலத்தில் அசோகரது பிராமி எழுத்தினின்றும் கிரந்த எழுத்தினின்றும் தோன்றியதென்றும் சாதித்தனர்.

தமிழ் நெடுங்கணக்கு பழைமையானது

சிந்துவெளி எழுத்துக்களிலிருந்து பிராமி எழுத்துக்கள் தோன்றியிருக்க வேண்டும் என்பது பேராசிரியர் லாங்டன், டாக்டர் ஹண்டர், சர். அலெக்சாண்டர் ஆகியோரின் முடிபாகும். தமிழ்நாட்டுக் குகை எழுத்துக்களுக்கும் பிராமி எழுத்துகட்கும் நெருங்கிய தொடர்பைக் காணலாம். இன்றைக்கு நமக்குக் கிடைத்துள்ள மிகப்பழைய தமிழ் நூலாகிய தொல்காப்பியத்தின் காலம் கி.மு. அய்ந்நூற்றுக்கு முந்தியது எனத் திட்டவட்டமாய் நிறுவி கி.மு. எழுநூறு என்று சொல்வதற்கான சான்றுகளையும் ஆராய்ச்சியாளர்கள் தந்துள்ளார்கள். அத்தகைய அரிய இலக்கியம் தோன்றுவதற்குமுன் எத்தனையெத்தனை நூல்கள் இருந்திருக்க வேண்டும், அவற்றிற்கு எவ்வளவு காலத்திற்கு முன்பாகத் தமிழ் நெடுங்கணக்கு ஏற்பட்டிருக்க வேண்டும் என்று சிந்திக்க மறுக்கலாமா?

தமிழ் இலக்கியம் ஆரிய மயமானது

தமிழர்களின் மறைநூல், மந்திரநூல் போன்ற அரிய நூல்களைச் சமற்கிருதத்தில் மொழிபெயர்த்துக்கொண்டு, மூலநூல்களை அழித்துவிட்டு வடமொழியினின்றே அவ்வரிய கருத்துக்கள் வந்தனபோலக் காட்டினார்கள் பிராமணர்கள் எனத் தாம் எழுதிய ‘தமிழ் வரலாறு என்ற நூலில் (பக். 29-33) பரிதிமாற் கலைஞர் (வி.கோ. சூரியநாராயண சாஸ்திரியார்) எழுதுகிறார். தொன்னூல்களான தென்னூல்களெல்லாம் வடமொழியில் பெயர்க்கப்பட்ட பின் அழிந்தும் அழிக்கப்பட்டும் போயின என்று ‘தமிழர் வரலாறு என்ற தம் நூலில் ஞா.தேவநேயப் பாவாணர் விரிவாக விளக்கியுள்ளார்கள். இவ்வழிப்புப் பணியால் இந்திய நாகரிகம் பெருமளவு ஆரியருடையது எனவும், அதன் சிறு கூறே திராவிடரது என்றும் கருதுமாறு செய்யப்பட்டுவிட்டது. அகத்தியத்தை தமிழ் முதனூல் என்றனர். தொல்காப்பியத்தில் வேண்டாத சமற்கிருதச் சொற்களையும் ஆரியக் கருத்துக்களையும் புகுத்தினார்கள். திருவள்ளுவரைச் சீவல்லபர் என்ற ஆரியராக்கியத்தோடு, திருக்குறளின் அறத்துப்பால் வடமொழி தர்மசாத்திரத்தையும், பொருட்பால் அர்த்தசாத்திரத்தையும், காமத்துப்பால் காமசூத்திரத்தையும் தழுவின எனக் கூறவும் தலைப்பட்டனர். திருக்குறளுக்கு உரைவகுத்த தூய தமிழ்ப்பெயர் தாங்கிய பரிமேலழகர் தம்முடைய உரையில் ஆரியக் கருத்துக்களை வலிந்து புகுத்தித் தமிழர் கருத்துக்களை மறைத்துள்ளார்.

தமிழ் இலக்கிய மறைப்பு இடைக்காலத்திலும் தொடர்ந்தது. பெரிய புராணம் உபமன்யு பக்த விலாசத்தையும் திருவிளையாடல் புராணம் ஆலாசிய மான்மியத்தையும், சிவஞானபோதம் ரௌரவாகமத்தின் இறுதிப் பகுதியையும் முதனூலாய்க் கொண்ட வழிநூல்கள் என்றார்கள். மூவர் தேவாரப் பதிகங்களை தில்லையம்பலத்தில் மறைத்து சிதல் அரிக்கவிட்டார்கள் (திருமுறைகண்ட புராணத்தைக் காண்க) தமிழ்
கருத்துக்களை சமற்கிருதச் சொற்களால் மூடிமறைத்து அவற்றைத் தங்களுடையதாகக் காட்டிக் கொள்ளவும் துணிந்து இறங்கினார்கள். அறம், பொருள், இன்பம், வீடு என்பவை முறையே தர்மார்த்த காமமோட்சம் என்றதன் மொழிபெயர்ப்பு எனவும் முப்பால் என்பது திரிவர்க்கம் என்பதின் சொல்லாக்கமே எனவும் கூறினர். தமிழரின் அய்ந்தெழுத்து பஞ்சாட்சரமாயின. வெகுளி, மயக்கம், காமம் என்ற மும்மாசுகள் ஆணவம், மாயை, காமியம் எனக் குறிப்பிடப்பட்டன. மேலெழுந்த வகையாய்ப் பார்த்தால் சொல் மாற்றச் சூழ்ச்சி தெரியவராது. கருத்துக்கள் சொல்லால் விளக்கம் பெறுகின்றன. சொல்லில்லையேல் கருத்துமில்லையாகிறது. சொல்லால் மறைக்கப்பட்ட கருத்தின் சொந்தக்காரர் சொல்லுக்குரியவராகி விடுகிறார். 

வடமொழி இலக்கணத்தை வலிந்தும் நலிந்தும் தமிழுக்குப் பொருத்தி வீரசோழியம், பிரயோக விவேகம் முதலிய நூல்கள் எழுதப்பட்டன. தொல்காப்பியத்தில் கூறப்பட்டுள்ள இருபத்தாறு செய்யுளுறுப்புகள் ஆறாகக் குறைந்தன. சமற்கிருத ஆதிக்கத்தால் தென்னாடெங்கும் நிலவிய தமிழ்மொழியிலிருந்து கன்னடம், தெலுங்கு, மலையாளம் முளைத்தெழுந்தன. வடமொழிக் கலப்பால் தமிழும் சமற்கிருதமும் சரிக்குச் சரி கலந்த மணிப்பவழ நடை இடைக்காலத்தில் வழங்கிற்று. சமற்கிருத ஊடுருவலால் நூற்றுக்கணக்கான தமிழ்ச் சொற்கள் வழக்கற்றுப் போயின. பா-கவிதையாயிற்று; பாட்டு காதையாயிற்று. கழுவாய் (பிராயச்சித்தம்) சுடலை (மயானம்), திருச்சுற்று (பிராகாரம்), திரையல் (பீடா), பலகணி (சன்னல்), வலக்காரம் (தந்திரம்), முதுசெம் (பிதிரார்ஜிதம்), கூற்றுவன் (யமன்) முதலிய சொற்கள் (கவிப்புக் கோட்டிற்குள் இருக்கும் சமற்கிருதச் சொற்கள் நம்முடையதாகவும்) ஆதரிப்பாரின்றி அநாதையாகி விட்டன. சோறு, மிளகுநீர் போன்ற சில சொற்கள் இழிந்தனவாகக் கருதப்பட்டு உயர் மட்டத்தில் இருப்பவர்களால் ஒதுக்கப்பட்டு விட்டன. (தேவநேயன் அவர்கள் தமிழ் வரலாற்றில் விரிவாய்க் காணலாம்).

கி.பி. இரண்டாம் நூற்றாண்டளவிலேயே தமிழ் பழிக்கப்பட்டது என்பதற்குச் சான்று வேண்டுமெனில் ‘ஆரியநன்று, தமிழ்தீது எனக்குயக் கொண்டான் கூறியதை நக்கீரர் அங்கதம் பாடிக் கண்டித்துள்ளதை நினைவு கூரலாம். சமற்கிருதத்திற்கு முந்திய பழைமை உடைய தமிழைச் சமற்கிருதத்தோடு ஒத்த காலத்தது ஒத்த  பெருமையுடையது என்றாவது காட்டவேண்டுமென்பதற்காக சிவஞான முனிவர் எவ்வளவு முயன்றுள்ளார் என்பதை அவர் பாட்டொன்றால் அறியலாம்.

வடமொழியைப் பாணினிக்கு வகுத்தருளியதற்கு இணையாத்
தொடர்புடைய தென்மொழியை யுலகமெலாந் தொழுதேற்றம்
குடமுனிக்கு வலியுறுத்தார் கொல் லேற்றுப் பாகர்...
இருமொழிக்கும் கண்ணுதலார் முதற்குரவர்

கலை

கலைத் துறையிலும் தங்கள் முன்னமையையும் முதன்மையையும் நிலைநாட்ட இசை, நாடகம், கணியம், மருத்துவம் முதலிய கலை, அறிவியல் இலக்கியமெல்லாம் சமற்கிருத மொழியில் பெயர்த்துக்கொண்டு, தமிழ் முதனூல்களையெல்லாம் அழித்துவிட்டனர். தமிழிசையைக் கருநாடக சங்கீதமென்றும் தமிழ் நடனத்தை பரதநாட்டியம் என்றும் கூறினர். ‘நாடகத் தமிழ் நூலாகிய பரதம் என அடியார்க்கு நல்லார் குறித்துள்ளதைக்காணில் தமிழ் பரத நூல் மூலநூல் என்பது வெள்ளிடைமலை, தமிழ்ப் பண்களை மறைத்து இராகங்களெல்லாம் சமற்கிருதப் பெயர்களால் மக்களிடையில் வழங்குகின்றன. இசையரங்குகளில் தமிழ்ப் பாடல்கள் இடம்பெற ஓர் இயக்கம் தேவைப்பட்டது. சித்தர்களின் மருத்துவத்தையும் மூலிகைகளையும் தமிழகத்திலிருந்து ஓட்டியேவிட்டார்கள்.

சங்ககாலத்தில் தமிழர்கள் நாளுக்குக்கும் (Star) கோளுக்கும் (Planet) வேறுபாடு அறிந்திருந்தார்கள், காலை, நண்பகல், ஏற்பாடு, மாலை, யாமம், வைகறை என ஒரு நாளை ஆறு பகுதிகளாகப் பிரித்திருந்தார்கள்.  சூரிய உதய, மறைவுக் காலங்கள் திங்கள்தோறும் மாறுபடுவதால் ஒரு நண்பகலிலிருந்து அடுத்த நண்பகல் வரை ஒருநாள் எனக் கணக்கிட்டனர். (பழந்தமிழ் நூல்களாகிய நற்றிணையில் ‘அரையிருள் நடுநாள், அகநானூற்றில் ‘பானாட்கங்குலும் பகலும் என்றெல்லாம் பாடப்பட்டுள்ளன). தைத்திங்களிலிருந்து ஆண்டுப் பிறப்பினைக் கொண்டாடினார்கள். (சித்திரையிலிருந்து அன்று) பிரபல - அட்சய என்ற முற்றிலும் சமஸ்கிருதத்திலான அறுபதாண்டு வட்டத்தைப் புகுத்தி ஒரு தொடராண்டுக் கணக்கில்லாமல் செய்துவிட்டனர். திங்களை மாதமெனவும், ஆண்டினை வருஷம் என்றும், காரிக்கிழமையை சனிக்கிழமையென்றும், கிழமையை வாரம் எனவும் பெயரிட்டார்கள்.


குமுகாயம்

தமிழகத்திற்கு வந்த ஆரிய மக்கள் சிறுபான்மையரெனினும் அவர்கள் தமிழர்களின் சமயத்துறையில் தோற்றுவித்த மயக்கமும் மாற்றமும் அவற்றால் ஏற்பட்ட தமிழரின் தாழ்வும் அவர்களின் சாதனையாகும்.

நமக்கு வேதனை தருவதாகும். தமிழ் மன்னர்களின் பேதைமை, மதப்பித்து, கொடைமடம் ஆகியவற்றைப் பயன்படுத்திக் கொண்டு தாங்கள் பூதேவரென்றும், தங்கள் மொழி தேவமொழியெனவும் சொல்லித் தங்கள் வலக்காரத்தாலும், வெண்ணிறத்தாலும் அவர்களை ஏமாற்றிவிட்டார்கள். அவர்களிடம் குருமார் (புரோகிதர்)களாகவும் அமைச்சர்களாகவும் அமர்ந்தனர். தங்களை மதித்த தமிழ் மன்னர்களைச் சத்திரியராக்கி வேள்விகளைச் செய்தால் மழை பெய்யும். அதனால் நாடுசெழிக்கும், குடிகள் நலம் பெறுவர், போரில் அரசருக்கு வெற்றிகிட்டும் என்றெல்லாம் நம்பிக்கையூட்டி மூவேந்தரையும் கொலை வேள்வியை மேற்கொள்ளச் செய்தனர். பல்யாகசாலை முதுகுடுமிப்பெருவழுதி இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, பல்யானை செல்கெழுகுட்டுவன் போன்றோர் வேள்வி வழிபாட்டிற்கு பலியானவர்களில் சிலராவர். இவ்வழிபாட்டைத் திருவள்ளுவர் ‘ஆயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர்செருத்து உண்ணாமை நன்று எனக் கண்டித்தும் பேதைமையில் மூழ்கிவிட்ட வேந்தர்கள் தெளிவுபெறவில்லை. மூவேந்தரைப் பின்பற்றிய மக்களும் மடமையில் ஆழ்ந்தனர். 

இப்போது யாகங்கள் பெருமளவு வழக்கற்றுப் போயினும் தீ வளர்த்து எரியோம்பல் எனும் ஆரிய வழக்கு தமிழனுக்காயிற்று. சத்திரியர் ஆக ஆக்கப்பட்ட மன்னர்கள் வர்மன் என்ற பெயர் ஈற்றினைப் பெருமையாக ஏற்றனர். (மாறவர்மன்) தங்கள் கல்வெட்டுகளை சமற்கிருதத்திலும், பின்னர் சமற்கிருதம் கலந்த தமிழிலும் எழுதச் செய்தார்கள். தமிழ் வணிகர் வைசியராகிப் பூணூல் அணியத் தொடங்கினார்கள். குப்தன் என்ற பெயரீற்றையும் கொண்டனர். வேளாளர்களைச் சூத்திரராக்கி அடிமைப்படுத்தினார்கள்.

பழங்காலத்தில் மக்களைத் தொழில் வகையில் அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்று பிரித்திருந்த பாகுபாட்டை மாற்றி நிறவேறுபாடு, பிறப்பு அடிப்படையில் பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என நால்வர்ணங்களாக்கினார்கள். அப்பிரிவுகளுக்குத் தனித்தனியே தொழிலும், ஆசாரமும் கற்பித்து அவைமுறையே ஒன்றினுக்கு ஒன்று தாழ்ந்தவை எனவுமாக்கி இவ்வேறுபாடு இறைவன் படைப்பென நம்பச் செய்து இச்சாதிக் கோபுரத்தின் உச்சியில் ஏறிக் கொண்டனர் பிராமணர்கள். இந்த குமுகாய அமைப்பில் தமிழர்கள் நிரந்தரமாய்த் தாழ்த்தப்பட்டார்கள். எத்தகைய கல்விச் சிறப்புப் பெற்றிருந்தாலும், குணக்குன்றானாலும், பட்டம் பதவி வகிக்கினும் சூத்திரர், மற்ற மூவர்ணத்தாருக்கு குற்றேவல் செய்யப் பிறந்தவர்களே.

ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று வாழ்ந்து வந்த மக்களைப் பல குலங்களாக்கி, பாழ்செய்யும் உட்பகையைப் புகுத்தி அவர்களைச் சின்னாபின்னப்படுத்தித் தங்கள் மேலாதிக்கத்தை நிலைநாட்டினர். இவ்வாறு ஏமாளி மக்கள் மீது ஏற்றங்கண்ட பிராமணர் கல்வித்துறையை தமக்கே உரியதாக்கிக் கொண்டு ஏனையரோடு கலந்து வாழாது தனித்தெருவில் வாழ்ந்து, இறப்பவருக்குத் தனிச் சுடலையும் ஏற்படுத்திக் கொண்டார்கள். பிராமணரல்லாதாரை அசுரர் எனக் குறிப்பிட்டனர். கொல்லேற டக்கல் முதலிய மறவினை செய்து மணத்தலை அசுர மணமாக்கினர். பாட்டியல் இலக்கணத்தில் பிராமணரைப்பாட வெண்பா, வேளாளரைப் பாட வஞ்சிப்பா எனவும் வகுத்தனர். பாட்டெழுதும் ஓலை நறுக்கின் அளவு பிராமணருக்கு 24 விரல், வேளாளர்க்கு அதில் பாதியென வரையறுத்திருந்தனர். எழுத்துகட்கும் பாக்கட்கும் தெய்வமும் குலமும் வகுக்கப்பட்டன. பிராமணரை வணங்குமாறு காரிகிழார் வேண்டினார். தமிழரின் பொருளைப் பறிக்க பதினாறு தானங்கள் வகுக்கப்பட்டன. 

     ஏற்ற பார்ப்பார்க் கீர்ங்கை நிறையப்
     பூவும் பொன்னும் புனல் படச் சொரிந்து  (புறம்-367)

என்ற அவ்வையார் பாடலைக் காணலாம். திருத்தொண்டர்த்தொகை பாடிய சுந்தரமூர்த்தி நாயனார் ‘தில்லைவாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன் எனப் பாடியுள்ளது மேற்கூறியவற்றை வலியுறுத்துகிறது.

பிறவிக் குலப் பிரிவினைத் திட்டம் இழிவான காரியங்களை ஒரு சாராருக்கு ஒதுக்கி அவற்றைச் செய்ததாலேயே தீண்டாதவர்களாக்கப் பட்டனர். அவர்களை ஊரின் புறத்தே வாழச் செய்ததன் பயனாய்த் தீண்டாமை, அணுகாமை, பாராமை வளர்ந்து மக்களினத்திற்கே மாசு ஏற்பட்டது.

நாவலம் பொழிலாக விளங்கிய நம் நாட்டிற்கு சம்புத்தீவம், பரதகண்டம், பாரத தேசம் என்றெல்லாம் பெயரிட்டனர். சேரநாடு பரசுராம சேத்திரமாயிற்று. குமரிநாடே இல்லை எனக்கூறி அந்நாடே மறைக்கப்பட்டது. அறிவியல் முறைப்பட்ட இந்திய வரலாற்றாசிரியன் கிருட்டிணை, காவேரி, வைகையாற்று வெளிகளிலிருந்து நாட்டு வரலாற்றைத் தொடங்காமல் கங்கைச் சமவெளியில் வேதகால ஆரிய வருகையிலிருந்து தொடங்கியதால் வரலாற்றேடுகள் இன்றளவில் திராவிடருக்கு உரிய இடம் அளிக்காமலேயே அமைந்துள்ளன. இந்திய வரலாற்றாசிரியனுக்குத் தன்னாட்டுப் பாவினின்று அயலார் ஊமையை எளிதில் பிரித்து எடுக்க இயலாதவாறு ஆரியம் மிக நன்றாய் வேரூன்றிவிட்டதெனப் பேராசிரியர் சுந்தரம்பிள்ளை அங்கலாய்க்கிறார்.

சமயம்

இலிங்க வணக்கம் செய்து வந்த திராவிடரை சிசினதேவர் (ஆண்குறியை வழிபடுவோர்) என இழித்தும் பழித்தும் வந்த ஆரியர்கள் தாங்கள் வணங்கி வந்த சிறு தெய்வங்களாகிய இயற்கைக் கடவுள்களை விடுத்து தமிழர் தெய்வங்களை ஏற்று வழிபடத் தொடங்கியதன் வாயிலாக அவர்களிடம் நல்லெண்ணத்தைப் பெற்று சமயத்துறையில் தாங்கள் விரும்பிய மாற்றங்களையெல்லாம் செய்து தங்களாதிக்கத்தை என்றுமே அசைக்க முடியாதவாறு நிலைபெறச் செய்து கொண்டார்கள். 

தமிழர் தெய்வங்களுக்கு வடமொழிப் பெயர்களிட்டு ஆரியத் தெய்வங்களாக்கிக் கொண்டனர். முத்தொழிலுக்கும் (படைத்தல், காத்தல், அழித்தல்) உரிய முழு முதற் கடவுளாகிய சிவனுக்கு கடைத்தொழிலைத் தந்து, பிரமனைப் படைத்து படைப்புத் தெய்வமாக்கி திருமாலுக்குக் காக்கும் தொழிலை ஈந்து பிரமன், திருமால், சிவன் என்ற முத்திருமேனிகளைப் படைத்தார்கள். தமிழர்கள் பிரமனை ஏற்காததால் அத்தெய்வத்திற்குக் கோவிலும் கும்பிடும் இல்லாது போயிற்று திருமாலைக் குறிக்கும் ‘விண்டு எனும் தென் சொல் ‘விஷ்ணு என்ற வடசொல்லாய் மாறிற்று. முல்லை நிலத்து முகில் தெய்வமாகிய மாயோனே திருமாலாகும். சிவன், சங்கரன் என்றும், குறிஞ்சித் தெய்வமாகிய முருகன், பிராமணருக்கு நல்லவன் எனப் பொருள் தரும் சுப்பிரமணியன் என்றும் பெயரிடப்பட்டனர். 

தமிழ்த் தெய்வமாகிய காளியை ஆரியத் தெய்வமாய்க்காட்ட துர்க்கை, மகிடாசுரமர்த்தனி நிகம்பசூதனி எனப் பலப்பட பெயரிட்டு அதற்கேற்ப கதைகளையும் புனைந்தனர். அத்தகைய கதைகளே முப்பத்தாறு புராணங்களாகும். ‘கந்த புராணத்திலில்லாத புளுகு எந்த புராணத்திலும் இல்லை என்ற பழமொழியே புராணங்களின் பொய்மையை விளக்கும். தசாவதாரக் கதைகள் திருமாலுக்குப் பல வடிவங்கள் தந்து பல்லாற்றல்களையும் கற்பித்தன. நஞ்சுண்டகதை, தாரூக வனக்கதைகளால் சிந்துவெளிக் கடவுளாக இருந்த சிவன் வேத ஆரியக் கடவுளானான். ‘கறைமிடற்றோன், ‘மாதொரு பாகன், ‘தாயுமானவன், ‘கயற்கண்ணி, ‘பெருமாள் என்ற தமிழ்த் தொடர்கள் முறையே நீலகண்டன், அர்த்தநாரீசுவரன், மாதுருபூதம், மீனாட்சி, மகாவிஷ்ணு ஆயின. திருத்தலங்களும் சமற்கிருதப் பெயர்கள் பெற்றன. அண்ணாமலை, சிற்றம்பலம், திருவானைக்கா, கழுக்குன்றம், மறைக்காடு, முதுகுன்றம் ஆகியவை முறையே அருணாசலம், சிதம்பரம், சும்புகேசுவரம், பட்சி தீர்த்தம், வேதாரண்யம், விருத்தாசலம் என்று பெயர் மாற்றம் பெற்றன.
புராணக்கதைகளை நாடு முழுவதும் நாள்தோறும் மக்களிடையில் பரப்பி வந்தனர். வருகின்றனர். அக்கதைகளைக் கேட்பதே நல்வினையாய்க் கருதப்பட்டு பாமரரும் படித்தவரும் பகுத்தறிவை இழந்தனர்.

ஆரிய மதக்கொள்கைகளும் தமிழரின் சமயக் கருத்துக்களும் இணைந்த ஒன்றே இந்துமதமாகும். ஆதிசங்கரர் காலம் வரையில் ஆதியில் ஆரியமதம் வேதமதம் என்றும், பிறகு பிராமண மதமென்றும் வழங்கிவந்தன. அதன் பிறகே அது இந்து மதமாயிற்று. சிந்து ஆற்றின் பெயர் பாரசீகமொழியில் இந்துவாகத் திரிந்து அதுவே மக்களுக்கும் மதத்திற்கும் நாட்டுக்குமாயிற்று. தமிழர்கள் இந்துக்கள் ஆகியவுடன் பிறவி அடிப்படையில் வளர்ந்து வந்திருந்த நால்வர்ணக் கொள்கைப்படி பிராமணர்கள் உயர்த்தப்பட்டுத் தமிழர்கள் தாழ்த்தப்பட்டார்கள். அதன் பயனாகப் பிராமணர் கோவில் வழிபாடு செய்யும் தகுதிபெற்றனர். அத்தகுதியைத் தமிழர்கள் இழந்ததோடு கோவிலில் தெய்வங்களை நெருங்கவும் முடியாது போயிற்று. வழிபாட்டு மொழித் தகுதியைச் சமற்கிருதம் பெற்றதனால் தமிழ் தகுதியற்றுவிட்டது. 

இறை வழிபாட்டோடு, மற்ற மதச் சடங்குகளும் திருமணங்களும் பிராமணர்களே நடத்தி வைக்கும் உரிமை பெற்றனர். கோயில் நுழைவே பலருக்கு மறுக்கப்பட்டது. சைவ சமயம் மிகப் பழமையானது என சிந்துவெளி தாயித்துக்களை ஆராய்ந்த சர். ஜான் மார்ஷல் கருதினார். சிந்துவெளி மக்கள் லிங்க-யோனி வணக்கத்தையும் சிவவழிபாட்டையும் பின்பற்றினார்கள். யோகக் குறியாகக் கருதப்பட்ட ‘சுவஸ்திகர்க்குறி சிவதாயித்துக்களில் காணப்படுகிறது. தமிழரின் அய்ந்தெழுத்து ‘சிவபோற்றியே. ‘தென்னாட்டுடைய சிவனே போற்றி என மாணிக்கவாசகர் திருவாசகப் போற்றித் திருவகவலில் வழுத்துகிறார். அவ்வைத்தெழுத்து ‘சிவாய நம என்ற பஞ்சாட்சரமாக்கப்பட்டது கோவில் வழிபாட்டிலிருந்து தமிழரை விலக்க வடமொழி சிவாகமங்களை ஆக்கிக்கொண்டார்கள். தமிழர் சமயக் கருத்துக்களை விவரிக்கும் சைவ சித்தாந்த தத்துவங்களை ‘நானே கடவுள் என்னும் வேதாந்தக் கொள்கைகளால் திரும்பியும் பார்க்காமல் செய்துவிட்டார்கள்.

நாட்டுப்பெயரையும், தெய்வங்களின் பெயர்களையும் நம்முடைய பல்துறை கருத்துக்களையும், நூல்கள், கலைகள் யாவற்றையும் சமற்கிருதச் சொற்களால் மறைத்தும் மாற்றியும் நமது பண்பாட்டை ஆரிய மயமாக்கி தங்களுடையதாக்கிக் கொண்டு, நம்மையும் உலகினையும் நம்பவைத்து விட்டார்கள். இன்றைய சூழ்நிலையில் நாம் எல்லாமிழந்தும், விழிப்பூட்டப் பெற்றும், விழித்தெழ மாட்டாமல் மடமையிலாழ்ந்தும் கிடக்கிறோம்.




(நூல்  - சமற்கிருத ஆதிக்கம்)
பதிப்பாசிரியர் : கி.வீரமணி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக