ஞாயிறு, 17 டிசம்பர், 2017

தமிழ் முப்பால் மரபும், வடமொழி நாற்பால் மரபும் - டாக்டர் தி. முருகரத்தனம்



1.            உறுதிப் பொருள்கள் முதற்பொருள்கள் :

“இந்திரன் முதலிய இறையவர் பதங்களும், அந்தம் இல் இன்பத்து அழிவு இல் வீடும் நெறி அறிந்து எய்துதற்குரிய மாந்தர்க்கு உறுதி என உயர்ந்தோரால் எடுக்கப்பட்ட பொருள் நான்கு, அவை அறம், பொருள், இன்பம், வீடு என்பன”, என முப்பாலுக்கு உரை வகுத்த பரிமேலழகர் தன் உரையினைத் தொடங்குகிறார். அதாவது, உறுதிப் பொருள்கள் என்பன மக்களின் வாழ்க்கைக் குறிக்கோள்; மக்கள் அடையவேண்டியவை; 

மக்கள் மேற்கொள்ள வேண்டியவை; மக்கள் பின்பற்ற வேண்டியவை ஆகும். இவற்றை முதற்பொருள் எனவும், ஊதியம் எனவும், பண்டைக்காலத் தமிழ் அறிஞர்கள் குறிப்பிட்டனர். ‘ஊதியம் என்பதும் அறம் பொருள் இன்பங்களை’ எனப் புறநானூற்றுப் பழைய ஆசிரியர் ஓரிடத்தில் விளக்குகிறார். (காண்க: புறநா. 28). இவற்றை ஆங்கிலத்தில்,  ‘Human Ideals’ or ‘Human Values’ or ‘Human Aims’ or Ends of  Life’.... எனக் குறிப்பிடுவர். மக்கள் வாழ்க்கைக்கு உறுதியாகின்ற காரணத்தினால் அவை உறுதிப்பொருள்கள் என வழங்கப்பட்டன. இவ்வுறுதிப் பொருள்கள் ஏறத்தாழ ஈராயிரம் ஆண்டுகளாக இந்திய மக்களின் சிந்தனையிலும், செயலிலும் இடம்பெற்று இயங்கியும் இயக்கியும் வந்துள்ளன. இவ்விந்திய மக்கள் சமயங்கள், தத்துவங்கள், கலைகள் ஆகியவற்றிலும் இவை பரக்க இடம் பெற்றன. இவை வடமொழியில் புருஷார்த்தங்கள் என வழங்கப்படும். புருடர்களுக்கு அர்த்தமாவது, ‘மக்கட்செல்வம்’ என்பது இதன் பொருளாம்.

2.            தமிழில் முதற்பொருள்கள் :

தமிழ் இலக்கிய இலக்கணத் தொடக்கக் கால முதற்கொண்டு இவை பற்றிய கருத்துக்கள் தமிழரிடையே காணப்படுகின்றன. தொல்காப்பியரின் பொருளதிகாரத்தில்,
“இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு
அன்பொடு புணர்ந்த அய்ந்தினை மருங்கின்”
(தொல். களவு. 1)
எனவும்,

‘அந்நிலை மருங்கின் அறமுதல் ஆகிய
மும்முதற் பொருட்கும் உரிய என்ப’
(தொல். செய்யுள் 411)
எனவும் கூறப்படுகின்றது. தொல்காப்பியம் இவற்றை மும்முதற் பொருள்கள் எனப் பொருள் பொதிந்த தொடரால் குறிப்பிடுகின்றது.

புறநானூறு :
‘சிறப்புடை மரபின் பொருளும் இன்பமும்
அறத்து வழிபடூஉம் தோற்றம் போல’
(புறம். 31)
எனவும்,
‘அறனும் பொருளும் இன்பமும் மூன்றும்
ஆற்றும் பெரும நின் செல்வம்’
(புறம், 28)
எனவும் கூறுகின்றது.

கி.பி. 6ஆம் நூற்றாண்டினதாகக் கருதப்படும் பெருங்கதை,
‘அறம் பொருள் இன்பம் என்ற மூன்றிலும்’
(4:7:140) எனக் குறிப்பிடுகின்றது.

இம்மூன்று உறுதிப்பொருள்களையே வள்ளுவரின் முப்பால் எனும் நூல் விளக்கி வரைகின்றது.

இவற்றைத் தொடர்ந்து சிலப்பதிகாரம், புறப்பொருள் வெண்பாமாலை, பன்னிருபடலம் முதலானவை இம்மும்முதற் பொருள்களைப்பற்றி பேசுகின்றன. இடைக்காலத்துக்கு முந்திய நூல்கள் தேவாரங்கள், திவ்வியப் பிரபந்தங்கள், நன்னூல் முதலான இலக்கியங்கள் ஆகியவையும் இவைபற்றி ஆங்காங்கே குறிப்பிட்டுச் செல்கின்றன.

3.            வடமொழியில் முதற்பொருள்கள் :

இங்ஙனமே ஏறத்தாழ கி.மு. 4ஆம் நூற்றாண்டு முதற்கொண்டே வடமொழிச் சாத்திரங்களும், இலக்கியங்களும் இம்மும்முதற்பொருள்கள் பற்றிக் குறிப்பிட்டுப் பேசுகின்றன. இக்காலத்திற்குரிய கல்ப சூத்திரங்கள், மனு°மிருதி, கௌடலீயம், வாத்சாயனம், மகாபாரதம், இராமாயணம், காளிதாசர் நூல்கள் ஆகியவை இவ்வுறுதிப்பொருள்களைப் பற்றியும் பேசுகின்றன. இவற்றிற்கு முன்னால் தோன்றிய வேதங்களிலும், பிராமணங்களிலும், உபநிடதங்களிலும் இவ்வுறுதிப் பொருள்கள் பற்றிய கருத்துக்கள் இல்லை. கி.பி.யின் தொடக்கத்திலிருந்தே புருஷாத்தங்களைப் பற்றிய கருத்துக்கள் வடமொழியில் பரவலாகப் பேசப்பட்டன.

4.            யாருக்கு உரியன ?

ஆதலால் இவ்வுறுதிப் பொருள்-முதற்பொருள்கள்-பற்றிய கருத்துக்கள் ஏறத்தாழ ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்தியா முழுவதிலும் தோன்றிய பலமொழி இலக்கியங்களில் இடம்பெற்று வந்துள்ளமை தெளிவாகிறது. வடமொழி, தென்மொழி மரபுகளில் தொடக்கக் கால முதலே இக்கருத்துக்கள் இடம் பெற்றதால் இக்கருத்துக்களை வடமொழிக்குரியனவா? (அல்லது) தமிழ்மொழிக்குரியனவா? (அல்லது) ஆரியர்க்குரியனவா? (அல்லது) தமிழர்க்குரியனவா? என வரையறுத்தல் கடினமாக உள்ளது. இக்கருத்துக்கள் இந்திய மக்கள் அனைவருக்கும் பொதுவாக உரிய கருத்துக்கள் எனக் குறிப்பிடலாம் போலும். இக்கருத்துக்களைப் போன்றே ஆன்மாவைப் பற்றிய கருத்துக்களும், பல்பிறப்புக்களைப் பற்றிய கருத்துக்களும், கர்மா பற்றிய கருத்துக்களும் இந்திய மக்கள் அனைவர்க்கும் உரிய கருத்துக்கள் என அறிஞர்கள் கருதுகின்றனர். அவர்கள் இவற்றை
‘National Stock’ எனக் குறிப்பிடுவர். (மாக்சு மூலர், சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் முதலானோர் இவர்கள்.)

5.            மும்முதற்பொருளின் காலம் :

தென்மொழி மரபும், வடமொழி மரபும் தம் தொடக்கக் காலத்தில் முப்பால் பற்றியே பேசுகின்றன. தமிழ் மரபு மும்முதற்பொருள் எனப் பேசுவது முன்னர் சுட்டிக் காட்டப்பட்டது. வடமொழியில் இது ‘திரிவர்க்கம்’ எனப்படுகிறது. தமிழ்மொழியில் இம்முப்பால் மரபினைத் தொல்காப்பியம், சங்கத்தொகை நூல்கள், இரட்டைக் காப்பியங்கள், பெருங்கதை ஆகியவற்றின் காலம் வரையில் காணமுடிகிறது. வடமொழியில் கல்ப சாத்திரங்கள், மகாபாரதம், இராமாயணம், மனு°மிருதி, கௌடல்யம், வாத்சாயனம், காளிதாசர் நூல்கள் ஆகியவற்றில் இம்முப்பால் மரபினையே காண முடிகிறது. ஒவ்வொரு மொழி மரபிலும் இக்காலம், தொடக்க முதல் கி.பி. 5ஆம் நூற்றாண்டு வரை எனக் கொள்ளலாம்.

6.            நாற்பால் மரபு தோன்றல் :

இக்காலத்திற்குப் பின்னர்த் தமிழில் தோன்றிய சமய இலக்கியங்களான தேவாரம், திவ்வியப் பிரபந்தம் முதலானவற்றில் நாற்பால்மரபு பேசப்படுகிறது. கி.பி. 8ஆம் நூற்றாண்டினராகிய திருமங்கையாழ்வார்,
“......... ............. ........... ............ ............. ................. .............. அம்மறைதான்
மன்னும் அறப்பொரு ளின்பம்வீடு என்றுலகில்
நன்னெறி மேம்பட்டன நான் கன்றே”
எனவும், ஏறத்தாழ அவர் காலத்தவராகிய மாணிக்கவாசகர்,
“அருந்தவர்க்கு ஆழின்கீழ் அறம்முதலா நான்கினையும்
இருந்தவருக்கு அருளுவது”
எனவும், கி.பி. 7 - ஆம் நூற்றினராகிய திருஞான சம்பந்தர்,
“அழிந்தசிந்தை அந்தணாளர்க்கு அறம்பொருள் இன்பம்வீடு
மொழிந்த வாயான் முக்கணாதி....”
எனவும் நாற்பால் பற்றிப் பேசுதல் காணலாம்.

அதாவது, இந்தக் காலம்தொட்டு நாற்பால் மரபு. கல்வியின் பயனும் பண்புமாக அமைந்துவிட்டது. 12 - ஆம் நூற்றாண்டில் தோன்றிய தமிழ்த் தண்டி ஆசிரியர், ‘நாற்பொருள் பயக்கும் நடைநெறித்து ஆகி’ எனவும், நன்னூல் ஆசிரியர் ‘அறம் பொருள் இன்பம் வீடு அடைதல் நூற்பயன்’ எனவும் குறிப்பிடும் நிலை தோன்றியது.

ஆதலால், தென்மொழி வடமொழி அடங்கிய இந்திய மரபில் முப்பால்மரபு 5, 6ஆம் நூற்றாண்டுவரையிலான காலத்திலும், அதன்பின் நாற்பால் மரபும், வழக்கிற்கு வந்தன எனத் தெளிவாகிறது. இவ்வாறு முப்பால் மரபு, நாற்பால் மரபாக மாறியது என அறியலாம். இலக்கிய வரலாற்றில் ஏற்பட்ட ஒரு மரபு மாற்றமாக மட்டுமே இது தோன்றவில்லை. இந்திய மக்களின் சிந்தனைப் போக்கில் ஏற்பட்ட ஒரு பெரு மாற்றத்தின் விளைவே இது எனக் கொள்ளவேண்டும். அந்த மாற்றம் ஓர் அடிப்படையான மாற்றமாகும். இந்திய மக்கள் சிந்தனைப் போக்கினையும், வாழ்க்கைப் போக்கினையும் அதுமாற்றி அமைத்த மாற்றமாகவும் கருதலாம். இதனைச் சிறிது விளக்கமாகக் காணலாம்.

7.            நாற்பாலின் நோக்கம் :

அறம், பொருள், இன்பம் என முப்பால் மரபு வழங்கிய தொடக்கக் காலத்தில் முப்பொருள்களும் ஒரே சீரான சிறப்புப் பெற்றன; ஒரே சீரான அழுத்தம் பெற்றன. அதாவது வாழ்க்கைக்கு அறம் தேவை; அது போலவே பொருளும் தேவை; அதுபோலவே இன்பமும் தேவை. மூன்றுமே சீராகத் தேவைப்படும் என்பது அக்காலத்தின் கொள்கை. மக்கள் அறத்தின் வழி நடந்து பொருளை ஈட்டி இன்பம் துய்த்தலை வாழ்க்கையாகக் கொண்டனர் என இதனால் அறியலாம்.(1)

ஆனால், முப்பால் மரபோடு வீட்டுப்பால் சேர்க்கப்பட்டபோது நான்காவது பாலாகிய வீட்டுப்பாலே சிறந்தது எனவும், மற்றவை அத்துணைச் சிறப்பு இல்லாதவை எனவும், வீட்டுப்பாலே குறிக்கோள் எனவும், மற்றவை மூன்றும் கருவிகள் எனவும் விளக்கங்கள் தரப்பட்டன. இதன்பொருள் என்னவென்றால் இவ்வுலக வாழ்க்கைக்கு உரிய அறம், பொருள், இன்பம் புறக்கணிக்கப்பட்ட மறுமைவாழ்வுக்குரிய வீடு போற்றப்பட்டது என்பதாகும். அதாவது சமூகக் கருத்தாக இருந்த முப்பால், சமயக் கருத்தாகக் கொள்ளத்தக்க நாற்பாலாக உற்ற மாற்றமே இது என்பதாகும். இந்த மாற்றமே மக்கள் வாழ்க்கையிலும் சிந்தனையிலும் ஏற்பட்ட மாற்றமாகும். உலக விருப்பக் கொள்கையிலிருந்து உலக மறுப்புக் கொள்கைக்கு இந்திய மக்கள் வந்ததாகக் கொள்ள வேண்டும்.

இந்த மாற்றம் ஏற்பட்ட காலம். இந்து சமயம் தன் சாத்திரங்களாலும், காவியங்களாலும், தத்துவங்களாலும், வருணாசிரம தர்மம் எனும் சமூக அமைப்பாலும், உருவமும் உறுதியும் பெற்ற காலம் ஆகும். அதாவது ஆரியப் பண்பாடு இந்திய நாட்டுப் பண்பாட்டின் பல

கூறுகளையும் தன்மயமாக்கித் தன் மேன்மைக்கும் நலத்திற்கும் பயன்படுத்திக் கொண்ட காலமாகும்.

இக்காலத்தில் முப்பால் மரபு, பிராமணியமய மாக்கப்பட்ட அதாவது ஆரியமயமாக்கப்பட்ட வாழ்க்கைத் தத்துவமாக தரப்பட்டது. முப்பால் மரபில் இந்த உலக வாழ்க்கை வற்புறுத்திப் பேசப்பட்டது; சமய வாழ்க்கை சிறப்பாக இடம் பெறவில்லை. இந்நிலையில் இந்திய வரலாற்றுப் பேராசிரியர் பாசாம் போன்றவர்கள், ‘அர்த்தமும், காமமும் உலோகாயதக் கருத்துக்கள் கொண்டுள்ளன’ என எடுத்துக்காட்டுவதை கருத்தில் கொள்ளவேண்டும் (2) உலோகாயதத் தத்துவக் கருத்துக்களும் இவ்வுலக வாழ்வை வற்புறுத்தும் கருத்துக்களும் நீக்கப்பட்டு மறுவுலக வாழ்வை வற்புறுத்தும் சமயக் கருத்துக்கள் புகுத்தப்பட்டு, வகுக்கப்பட்ட மரபே நாற்பால் மரபாகும். பண்டை அறம் பொருள் இன்பங்களுக்கு அடிப்படையான, இவ்வுலகத்துக்கான கருத்துக்கள் ஆரியர் அல்லாத இந்திய மக்களுக்கும் குறிப்பாகத் திராவிட மக்களுக்கும் உரியவையாக இருந்திருக்கலாம். இந்திய நாட்டின் வாழ்க்கைக்குரிய எத்தனையோ தத்துவக் கருத்துக்களும், சமூகக் கருத்துக்களும், இலக்கிய மரபுகளும், கதைகளும் ஆரியமயமாக்கப்பட்டமை போன்றே இம்முப்பால் மரபும் ஆரிய மயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையினையே வடமொழியில் நாம் காணுகின்றோம். தமிழகத்திலும் இது பரப்பப்பட்டது.

நாற்பால் மரபின் அடிப்படையான கருத்து. நான்காவதான வீட்டுப்பாலே சிறந்ததாகும் என்பது, மற்ற மூன்று பால்களும் புறக்கணிக்கத்தக்கன என்பதும் ஆகும்.

“ஈதல்அறம்; தீவினைவிட்டு ஈட்டல் பொருள்;
காதலிருவர் கருத்தொருமித்து ஆதரவு இட்டதே இன்பம்;
பரனை நினைத்து இம்மூன்றும் விட்டதே வீடு”
என்னும் அவ்வை பாட்டு இதனை எடுத்துக்காட்டும்.

ஆரிய மரபு இப்பெருமாற்றத்தினை-இவ்வடிப்படை மாற்றத்தினை, மெல்ல மெல்லச் செய்ததாகத் தெரிகிறது. முப்பால் மரபினை அது முற்றிலும் கைவிடவும் முடியவில்லை. காரணம் அதன் பெருமை போற்றத்தக்கது. அதன் தேவை தவிர்க்க முடியாதது. ஆயினும் இம்முப்பால் மரபினை முழுவதுமாக ஏற்றுக்கொள்ளவும் இயலவில்லை! ஆகவே அது அதனை மாற்றி அமைத்தது; நான்காவது பாலே சிறந்தது எனக் காட்டும் அப்பணியினை நிறைவேற்றியது. முப்பாலினையே போற்றி முப்பால் எனவே பெயரிட்டு வள்ளுவர் செய்த திருக்குறளின் உரையாசிரியர் பரிமேலழகர் முப்பால்களையும் தாழ்த்தி இருப்பதைக் காணலாம். ‘அம்முனிவரால் உணர்த்தப்பட்ட அம்மூன்றினுள் ஏனைப்பொருளும் இன்பமும் போலாது அறன், இம்மை மறுமை வீடு என மூன்றையும் பயத்தலான் அவற்றின் வலியுடைத்து’, ‘இல்லறத்தின் வழிப்படுவனவாய பொருள் இன்பங்களுள் இருமையும் பயப்பதாகிய பொருள் கூறுவான் எடுத்துக்கொண்டார்’, ‘அப்பொருளைத் துணைக் காரணமாக உடைத்தாய் இம்மையே பயப்பதாய இன்பம் கூறுவான் எடுத்துக்கொண்டார்’ என்னும் பரிமேலழகரின் உரைக்கருத்துக்கள் ஆரிய மரபின் இயல்பினை எடுத்துப் பேசுகின்றன.

அய்யம்

முப்பால் மரபினை நாற்பால் மரபாகத் தன்மயமாக்கினும் ஆரிய மரபு எப்போதும் அய்யக கண்கொண்டே முப்பாலை நோக்கி வந்திருக்கின்றது. நான்கு பால்களிலும் எது சிறந்தது என்னும் வாதங்களில் அது புலனாகிறது.
“மகாபாரதத்தின் சாந்தி பருவத்தில் இது பற்றிப் பேசப்படும் ஓரிடம் குறிப்பிடத்தக்கது. பாரதப் போர் முடிவுற்றுப் பாண்டவர்கள் வெற்றி நிலை நாட்டியபோது எங்கும் பேரழிவு இருப்பது தெரிந்தது. அசுவத்தாமன் பாண்டவர்களுடைய நண்பர்களை முறையில்லாத வகையில் கொன்று குவித்திருந்தான். இப்பேரழிவினைக் கண்டு பாண்டவர்கள் அய்வரும் கசிந்து கண்ணீர் மல்கினர். இந்த உலகில் எதுதான் மேற்கொள்ள வேண்டிய குறிக்கோள் என்பது பற்றி அவர்கள் விதுரருடன் கூடி ஆராய்ந்தனர். அறமா, பொருளா, இன்பமா எது? விதுரர் அறமே சிறந்தது என அதற்குரிய காரணங்களைத் தந்து பேசினார். அர்ச்சுனன் பொருளேப் போற்றத்தக்க பொருள் எனப் பெரிதாக எடுத்துப் பேசினான். பீமன் இன்பமே சிறந்தது என விரித்துப் பேசினான். நகுலனும் சகாதேவனும் முப்பால்களுமே அளவுடன் மேற்கொள்ளத் தக்கவை எனப் பேசினர். தர்மர் மனநிறைவு பெறவில்லை. இங்கே அறம் பொருள் இன்பம் என்னும் முப்பால் பற்றி மட்டுமே விரிவாகப் பேசப்பட்டிருக்கின்றது. நான்காம் பாலைப் பற்றி பேச்சு இல்லை”. (தி.மு. குறள்நெறி)

இக்கருத்துக்கள் முப்பால்பற்றி ஆரிய மரபு அய்யம் கொண்டிருந்தது என்பதையும், அதனை ஏற்றுக்கொள்ளத் தயங்கியது என்பதனையும் தெளிவாகக் காட்டுகின்றன. ஆதலால் அதனுடன் நான்காம் பாலைச் சேர்த்து அதற்கு முதன்மை இடம் தந்து முப்பாலை அது இழிவுபடுத்தியது. அதாவது, இம்முப்பொருள்களையும் கருவிகளாக்கி வீட்டுப்பாலைக் குறிக்கோளாக வைத்தது. இதுவே வடமொழியாக்கத்தின் இறுதிப் பணியாயிற்று. மகாபாரதம் இன்றுள்ள நிலையில் பிராமணியத்தால் தன் தேவைக்கேற்ப மாற்றி எழுதப்பட்டது என அறிஞர்கள் சுட்டுவதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்.(3)

திருவள்ளுவரது நூலில் நாம் முப்பாலே காண்கின்றோம். அவர் முப்பாலில் எப்பால் சிறந்தது என எப்போதும் ஆராய்ச்சி மேற்கொள்ளவில்லை. அவர் எதனையும் கருவியாக்கவில்லை. எதனையும் முடிவாக்கவில்லை. இந்த உலக வாழ்க்கைக்கு எல்லாமே தேவை என்பது அவர் கருத்து போலும். அவர் மரபே தமிழ் மரபு எனக் கொள்ளலாம். உலகச் சிந்தனையாளர் ஆல்பர்ட் ஷ்வைட்சர் இவ்வாறே கருதுகிறார்.(4)

இம்முப்பால் மரபு தமிழ் மரபு என்றே நாம் கொள்ளலாம். காரணம் இந்தியா முழுவதிலும் எல்லாக் காலங்களிலும் தோன்றிய நூல்களில் அறம் பொருள் இன்பம் எனும் மூன்றனையும் எடுத்து ஒரே ஆசிரியரால், ஒரே நூலால் செய்யப்பட்டது இத்தமிழ்த் திருக்குறளே. வடமொழியில் முப்பால் மரபு தொடக்கக் காலத்தில் (கி.மு. 400 முதல் கி.பி. 400 வரை) ஆங்காங்கே சுட்டப்பட்டிருந்தாலும் தர்ம சாத்திரங்களும், அர்த்த சாத்திரங்களும், காமசாத்திரங்களும் தனித்தனியாகத் தோன்றி வளர்ந்து இருந்தாலும் அவை அனைத்தையும் ஒன்றாகக் கண்டு விளக்கிய நூல் ஒன்றாயினும் அங்குத் தோன்றவில்லை. திருக்குறள் ஆசிரியர் முப்பாலைப் பற்றி எழுதுகின்றபோது முப்பாலும் வாழ்க்கைக்கு இன்றியமையாதவை எனப் பார்க்கும் ஒரு விரிந்த பார்வை அவரிடத்து அமைந்திருப்பதை நாம் காணலாம்.

வடமொழியில் இம்முழுப் பார்வை, குறைப் பிறவியாகவே அமைந்துள்ளது. அது முழுமை பெறவில்லை. தமிழ் மரபே முழுமைப் பெற்றது. ஆதலால் முப்பால் மரபுக்கு உரியவர்கள் தமிழர்களே எனலாம். தம் முப்பால் மரபினைத் தமிழர்கள் மறந்துவிட்டு, ஆரிய மொழி மயமாக்கப்பட்ட, நாற்பால் மரபினைத் தம் மரபாகப் போற்றி மயங்குகின்றனர். தமிழ் மக்கள் இனியேனும் மயக்கம் தெளிவீராக!
 

(நூல்  - சமற்கிருத ஆதிக்கம்)
பதிப்பாசிரியர் : கி.வீரமணி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக