வியாழன், 3 ஆகஸ்ட், 2017

எண்டோசல்ஃபான்!


எண்டோசல்ஃபான் என்னும் பூச்சிகொல்லி மருந்து உலகம் முழுமையும் பெரியதோர் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் 23 வகையான பயிர்களுக்கு இந்தப் பூச்சிக் கொல்லி மருந்து தெளிக்கப்படுகிறது. இந்த மருந்து பயிர்களை நாசம் செய்யும் பூச்சிகளை மட்டும் கொல்லவில்லை. இந்தப் பூச்சிக் கொல்லி மருந்து தெளிக்கப்பட்ட பயிர்களில் விளையும் உணவுப் பொருள்களைச் சாப்பிடுபவர்களையும், மறைமுகமாகக் கொல்லுகிறது என்ற பிரச்சினை தான் பெரும் அதிர்வுக்குக் காரணம்.

உடல் ஊனம், சிறுநீரகப் பாதிப்பு, நரம்பு மண்டலம் பாதிப்பு உள்ளிட்ட பல நோய்களுக்கு இந்தப் பூச்சிக் கொல்லி மருந்து முக்கிய காரணம் என்று கூறுப்படுகிறது.

இது தடை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையும், இந்தியாவில் மட்டுமல்ல; உலகம் பூராவும் பெரும்பாலான நாடுகளில் செங்குத்தாக எழுந்து நிற்கிறது.

இது தொடர்பாக ஸ்டாக்ஹோமில் நடைபெற்ற வேளாண் மாநாட்டில் பெரிய சர்ச்சை எழுந்தது.

மொத்தம் 173 நாடுகளில், 125 நாடுகள் இந்த மனித அழிப்பு மருந்தைத் தடை செய்ய வேண்டும் என்று கைகளை உயர்த்தின. 47 நாடுகள் நடுநிலை வகித்தன. பூச்சிக் கொல்லி மருந்துக்குப் பச்சைக் கொடி காட்டி சிகப்புக் கம்பளம் விரித்து வரவேற்ற ஒரே ஒரு நாடு பாரத புண்ணிய பூமிதான்.

எதற்காக இந்த ஆதரவாம்? இருப்பதிலேயே மிகவும் விலை குறைந்த பூச்சிக் கொல்லி மருந்து இந்த எண்டோசெல்ஃபான் பூச்சிக் கொல்லி மருந்து தானாம். இப்படிச் சமாதானம் சொல்பவர்தான் இந்தியாவின் உணவு அமைச்சர் - சரத்பவார்.

இதற்கு இணையாக வேறொரு மருந்தைக் கண்டு பிடித்த பின்பு இதனைத் தடை செய்யலாம் என்று சொல்பவர் இந்திய நாட்டின் சுற்றுச் சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ்.

மக்களின் உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் விலையைப் பற்றிக் கவலைப்படுபவர்கள் எல்லாம் நமக்கு அமைச்சர்களாகக் கிடைத்திருக்கிறார்கள்.

அதற்கு மேல் கேட்டால் எதை செய்தால் என்ன? எல்லாம் அவாள் அவாள் தலைவிதிப்படிதானே நடக்கப்போகிறது என்று சாக்குருவி வேதாந்தம் வேறு பேச ஆரம்பிப்பார்கள்.

உச்ச நீதிமன்றம் இந்த மருந்தைத் தடை செய்து இடைக்கால ஆணை ஒன்றையும் பிறப்பித்துள்ளது. இது நிரந்தரமாகத் தடை செய்யப்படவேண்டும்.

இந்தப் பிரச்சினையில் தொடக்கம் முதலே குரல் கொடுத்துவரும் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் பாராட்டப்பட வேண்டியவரே!



15.5.2011

நூல் :  விடுதலை ஒற்றைப் பத்தி - 4
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக