வியாழன், 3 ஆகஸ்ட், 2017

த.தே.ஆ.ம.க.



தேர்தல் சந்தடியிலே இ.பி.கோ. 307 குற்றவாளியான காஞ்சி ஜெயேந்திரர் தன்னுடைய பார்ப்பனிய சுருக்குப் பையை அவிழ்க்கும் வேலையில் இறங்கியிருக்கிறார்.


சென்னை வாணிமகால் என்றால் அது அவாள் மகால் தானே. அங்கு ஒரு புதுக்கட்சி பிரசவமாகியிருக்கிறது. ஜெயேந்திர சரஸ்வதி, இல. கணேசன், இராம கோபாலன் இவர்கள் எல்லாம் ஒரு நிகழ்ச்சியிலே சங்கமிக்கிறார்கள் என்றால் அதன் பொருள் புரியாதா, என்ன?


கண்டிப்பாக அவாளுக்குச் சம்பந்தப்பட்ட - அவாளுக்குப் பிரயோசனப்பட்ட சமாச்சாரமாகத்தான் இருக்கும். அந்தப் புதுக்கட்சிக்கு என்ன பெயராம்? த.தே. ஆ.ம.க. என்பது சுருக்கம்; விரிவாக்கம் -தமிழ்ச் தேசிய ஆன்மிக மக்கள் கட்சியாம்; (தே.மு.தி.க.வையும் இதனையும் போட்டுக் குழப்பிக் கொள்ள வேண்டாம். திருப்பதிக்குச் சென்று கட்சிக் கொடியை ஏழுமலையான் காலடியில் சமர்ப்பித்து வந்ததால் ஒரு வகையில் ஆன்மிகத் தொடர்பு அக்கட்சியோடு இனி ஏற்படக்கூடும்).

இந்தக் கட்சி தொடக்க விழாவில் மேனகா காந்தி வந்து கலந்து கொண்டிருக்கிறார். அதற்கொரு காரணம் இருக்கிறது. மேனகா அம்மையாரின் மகன் வருண்காந்தியின் விவாஹ சுபமுகூர்த்தத்தை ஒழுக்கச் சீலரான காஞ்சி ஜெயேந்திரர் நடத்தி வைத்தார் அல்லவா? அந்த வகையில் அகில இந்திய விளம்பரத்துக்காக மேனகாவுக்கு அழைப்பு விடுத்திருக்கலாம் அல்லவா!

நம் நாட்டில் இந்துக் கலாச்சாரம் முடிவுக்கு வந்து விடவில்லை என்பதற்குக் கடந்த 6ஆம் தேதி காசியில் நடந்த வருண்காந்தியின் திருமணம் சான்றாக அமைந்தது என்று கூறி ஜெயேந்திரர் தன் முதுகைத் தானே ஒரு முறை தட்டிக் கொண்டிருக்கிறார். இவர் சொல்லியிருப்பதைப் பார்த்தால் இந்துக் கலாச்சாரம் முடிவுக்கு வரும் அளவுக்கு நிலைமை முற்றிப் போயிருந்த நிலையில், வருண்காந்தியின் திருமணம் வந்து சாகாமல் காப்பாற்றியிருக்கிறது என்று தெரியவருகிறது.

நம் பாரத நாடு பல மன்னர்களால் ஆளப்பட்டது. பல மதத்தவர்கள் அவர்களது பாரம்பரியத்தை விட்டுச் சென்றார்கள். இவர்களை எல்லாம் ஒருங்கிணைத்து இந்தியக் கலாச்சாரத்தைப் பேணிக்காக்கத்தான் இந்தப் புதிய கட்சி என்று ஜெயேந்திரர் அறிமுகப்படுத்தி உச்சிமோந்து வழியனுப்பி இருக்கிறார்.

ஆமாம், இதற்குமுன் இதே சங்கராச்சாரியார் ஜனக் கல்யாண், ஜனசாக்ரான் என்று நல்ல நாள் பார்த்து சுபமுகூர்த்தம் பார்த்து ஆரம்பித்தாரே, அதன் கதி என்னாயிற்றாம்? மறைந்த மூத்த சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஆசீர்வதித்து, மணியனால் ஆரம்பிக்கப்பட்ட மயன் இதழுக்கு ஏற்பட்ட கதிதான் இவற்றுக்கும் ஏற்பட்ட விட்டன போலும்!

இடுக்கோடு இடுக்காக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திருவாளர் இராம. கோபாலவாள் தம் கைச் சரக்கை விற்றுத் தள்ளியிருக்கிறார்.

மனிதநேய மக்கள் கட்சி என்று ஒரு பயங்கரவாத கட்சியிருக்கிறது. அதற்கு ஸீட் ஒதுக்கி ஜெயிக்க ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அப்படி அவர்கள் ஜெயித்தால் சட்டமன்றத்தில் 30, 40 முஸ்லிம்கள் இருப்பார்கள் என்று வாயிலும், வயிற்றிலும் அடித்துக் கொண்டு புலம்பியிருக்கிறார்.

என்ன செய்வது! ஒட்டு மொத்த 234 தொகுதிகளிலும் ஜெயலலிதா, குடுமி இராமநாதன் என்ற இருவரைத் தவிர அவாள் யாரும் இல்லையே! ஆத்திரம் வராதா?


2.4.2011

நூல் :  விடுதலை ஒற்றைப் பத்தி - 4
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக