புதன், 16 ஆகஸ்ட், 2017

ஒரு சூத்திரனுக்கு ஒரு பார்ப்பனத்தி!


 என்னை வகுப்புத்துவேசி´ என்கிறாயே பூசணிக்காய் அளவு எழுத்தில் ""பிராமணன் ஹோட்டல்'' என்று போர்டு போட்டுக் கொள்கிறானே அதை ஏன் அனுமதிக்கிறாய்?  ஜாதி பேதம் பாராட்டுவதில்லை என்று பெருமையடித்துக் கொள்ளும் தேசியத் தோழனே!  உன் சுதந்திர ராஜ்ஜியத்தில், நடைமுறையில் இருந்துவரும் ஹிந்துலாவில் ஜாதிக்கோர் நீதி ஏன் கூறப்பட்டிருக்கிறது?  

ஹிந்துலா சட்டப் புத்தகத்தின் முதல் பக்கத்திலேயே போடப்பட்டிருக்கிறது.  இச்சட்டம் மனுதர்ம சாஸ்திரம் மற்றுமுள்ள ஹிந்துமத சாஸ்திரங்கள் இவற்றை அடிப்படை ஆதாரமாகக் கொண்டு செய்யப்பட்டிருக்கிறது.  இச்சட்டத்தில் ஏதாவது சந்தேகம் வருமானால் நீதிபதிதானாக முடிவுகட்டக் கூடாது.  இச்சாஸ்திரங்களில் வல்லவர்களான சாஸ்திரிகளைக் கொண்டுதான் முடிவு கட்ட வேண்டும் என்று எழுதியிருக்கிறதே.'' ஜாதிபேதம் பாராட்டாத சாஸ்திரிகளை எங்காவது நீங்கள் பார்த்ததுண்டா?  அந்தச் சட்டத்தை இன்னும் புரட்டிப் பார்த்தல் ஒரு சூத்திரனுக்கு ஒரு பார்ப்பனத்தியிடம் பிள்ளை பிறக்குமானால், அப்பிள்ளைக்குச் சூத்திரனுடைய சொத்தில் பங்குரிமை இருக்குமென்றும், அதேபோல் ஒரு பார்ப்பனுக்கு ஒரு சூத்திரச்சியினிடம் ஒரு பிள்ளை பிறக்குமானால், அப்பிள்ளைக்கு பார்ப்பனன் சொத்தில் பங்குரிமை இருக்காதென்றும் கூறப்பட்டிருக்கிறதே.  இது உன் கண்களுக்கு ஏன் படாமற் போகிறது?  இந்த ஒரு குலத்துக்கொரு நீதியை அனுமதிக்கும் சட்டத்தை மாற்ற உனக்கு ஏன் கவலையில்லை?


-  குடிஅரசு, சொற்பொழிவு, 08.05.1948

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக