வியாழன், 3 ஆகஸ்ட், 2017

கைவல்யம்



தன்மான இயக்கத்தின் தன்னிகரில்லா எழுத்தாளர் சாமி கைவல்யம். வேதங்களும், உபநிஷத்துகளும், கைவல்ய சூத்திரங்களும், இதிகாசங்களும், புராணங்களும் இந்த மனிதனின் எழுதுகோலில் படாத பாடு பட்டு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கும்.

இப்படிப்பட்ட ஓர் எழுத்துப் போர் வீரர் தந்தை பெரியார் பெரும் படைக்குக் கிடைத்தது மிகப்பெரிய வாய்ப்பு என்பதில் என்ன சந்தேகம்?

இவரைப்பற்றி தந்தை பெரியார் கூறுகிறார் - கேளுங்கள், கேளுங்கள்!

கைவல்யம் அவர்கள் மீது பெருமதிப்பு ஏற்படுவதற்கு முக்கிய காரணம், இவர் தமக்கென்று இடுப்பு வேட்டியைத் தவிர, சாப்பாட்டைத் தவிர, ஒரு சாதனத்தையும் விரும்பினதுமில்லை, வைத்துக் கொண்டிருந்ததுமில்லை. அதனால்தான் அவரைப்பற்றி யாரும் ஒன்றும் சொல்ல முடியாமற்போயிற்று என்கிறார் தந்தை பெரியார்.

இவரது இயற்பெயர் பொன்னுசாமி. கைவல்யம் என்ற பெயர் எப்படி வந்தது? அதற்கொரு சுவையான காரணம் உண்டு.

கரூரில் உள்ள மவுன சாமியார் மடத்துக்கு இவர் செல்வதுண்டு. அந்த மடத்தில் இருந்த சாமியார்களிடம் வேதாந்த விசாரணைகளில் ஈடுபடுவார். அப்பொழுது கைவல்யம் நூலைப் பற்றியும் அக்குவேறு ஆணிவேறாகப் பிய்த்து எடுத்தார். அப்பொழுது முதல் நம் பொன்னுசாமிக்குக் கைவல்ய சாமியார் என்ற பெயரே வழக்கில் அமைந்துவிட்டது.

கைவல்ய நவநீதம் என்பது அத்வைத மார்க்கத்தைச் சார்ந்தது. தாண்டவராய சுவாமி என்பவரால் 184 பாடல்களால் ஆக்கப்பட்டதாகும். இந்நூல் கூறும் தத்துவ விசாரணையில் கரை கண்டவர் நமது கைவல்யம் என்கிற பொன்னுசாமி ஆவார்.

கோவை மாவட்டத்தில் சங்கராச்சாரியார் செல்லும் பொழுதெல்லாம் இவரும் பின் தொடர்ந்து சென்று, சங்கராச்சாரியாருக்கு எதிர்ப் பிரச்சாரம் செய்வாராம். கதா காலட்சேபம் செய்யும் பாகவதர்களுக்கு எல்லாம் கைவல்யம் பெயரைக் கேட்டாலே கிலிபிடித்து விடுமாம். அவர்கள் கதாகாலட்சேபம் செய்யும் இடத்துக்கு நமது கைவல்யம் சென்றார் என்றால், அவ்வளவுதான் - பாகவதர்களின் சப்தநாடிகளும் ஒடுங்கிவிடும் - தொண்டை வற்றிப் போய்விடும் என்கிறார் பெரியார். வடகலை, தென்கலைகளைச் சேர்ந்தவர்கள்பற்றி கைவல்யம் கூறுவது மிகவும் வேடிக்கையானது.

வடகலை, வைணவர்கள் விஷ்ணுவின் தென்கலை நாமத்தைச் சுரண்டி எடுத்தும் விடுவார்கள். விஷ்ணு கோவிலுக்குப் பக்கத்து அரச மரத்தடி பிள்ளையாருக்கு நாமமும் போட்டு விடுவார்கள். அதைச் சைவர்கள் கண்டு தங்கள் தெய்வத்தின் பிள்ளையாருக்குச் செய்திடும் அநீதிக்கு சண்டைக்கும் வருவார்கள். அடுத்து சமாதானத்தின் பேரில் அந்தப் பிள்ளையாரை ஜாதியிலிருந்து தள்ளிவிட்டும் போய் விடுவார்கள் என்று எழுதுகிறார் கைவல்யம்.

இன்னும் எத்தனை எத்தனையோ உண்டு! அந்தச் சுயமரியாதைக் கருத்துச் சுரங்கத்தின் நினைவு நாள் இந்நாள் (22.4.1953).



22.4.2011

நூல் :  விடுதலை ஒற்றைப் பத்தி - 4
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக