வியாழன், 3 ஆகஸ்ட், 2017

திருப்பதி




திருப்பதி ஏழுமலையான் கோயில் என்பது சட்ட விரோத நடவடிக்கைகளுக்கு அடைக்கலம் கொடுக்கிறது என்பது வெறும் யூகம் அல்ல - நடைமுறை உண்மை.

சோலார்ப்பேட்டை அருகே உள்ள ரெட்டியூரைச் சேர்ந்த சங்கர் மகள் காயத்திரி என்பவருக்கும் (வயது 14). கிருட்டினகிரி மாவட்டம் பனைமரத்துப்பட்டியைச் சேர்ந்த சக்திவேல் (வயது 25) என்பவருக்கும் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டது.

பெண்ணுக்குத் திருமண வயது சட்டப்படி 18 என்பதாகும். இந்தச் சட்ட விரோதத் திருமணத்தை எதிர்த்து மணமகளின் பாட்டி ராதா அம்மையார் திருப்பத்தூர் கோட்டாட்சியரிடம் புகார் மனுகொடுத்த நிலையில், சம்பந்தப்பட்டவர்களை அழைத்துக் காவல்துறை எச்சரிக்கை செய்தது. (இதுவே தவறு - 14 வயது சிறுமிக்குத் திருமணம் என்று பத்திரிகையும் அடித்து விநியோகித்து விட்ட நிலையில் சட்டப்படி நடவடிக்கை எடுக்காதது - ஏன்?)

சரி சரி என்று தலையாட்டி விட்டு அடுத்து என்ன செய்தார்கள் தெரியுமா? காதும் காதும் வைத்ததுபோல திருப்பதிக்குச் சென்று ஏழுமலையான் கோயிலில் கல்யாணத்தைத் திருட்டுத்தனமாக நடத்தி முடித்து விட்டனர்.

இப்பொழுதும்கூட கெட்டுப் போய் விடவில்லை - அதிகாரிகள் சம்பந்தப்பட்டவர்கள்மீது சட்டப்படியான நடவடிக்கையை எடுக்கலாம். சட்ட விரோதமாக திருப்பதியில் சுபயோக சுபமுகூர்த்தத்தை வெங்கடாசல()பதி முன்னிலையில் நடத்தி வைத்த ஏழுமலையான் கோயில் அர்ச்சகர்ப் பார்ப்பானையும் கைது செய்ய வேண்டும்.

ஊழலை ஒழிக்கப் புறப்பட்டுள்ள உத்தமர்களின் கண்களுக்கு இதுபோன்ற சமுதாய ஊழல்கள்பற்றி எல்லாம் தெரியவே தெரியாது.

ஒன்று மட்டும் உறுதியாகத் தெரிகிறது. சட்ட விரோதமான செயலுக்குக் கோயில்கள் சரணாலயமாக இருக்கின்றன என்பது தான் அந்த உறுதியான உண்மையாகும்.

பால்ய கல்யாணம் என்பதுதான் பார்ப்பனர்களின் சம்பிரதாயமும் சாஸ்திரமும் ஆகும். இதுவரை சிதம்பரம் தீட்சதர்ப் பார்ப்பனர்கள் குடும்பங்களில் பால்ய கல்யாணம் நடப்பது சர்வ சாதாரணமாயிற்றே!

எந்தச் சட்டம் அங்குப் பாய்கிறது? ஏற்கெனவே திருப்பதி ஏழுமலையான் கோயில் விடுதிகளில் விபசாரம், கொலைகள் நடப்பது செய்தியாக வெளிவந்ததுண்டு. பெரிய இடமான ஏழுமலையான் கோயில் சமாச்சாரம் ஆயிற்றே - சட்ட அம்பு அங்குப் பாயுமா என்ன?

பக்தர்கள் ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும்; பக்தி என்று கூறி புத்தியைப் பலி கொடுத்தது போதாது என்று சட்ட விரோதமான ஒன்றைச் சாதித்துக் கொள்வதற்கும் கோயில்கள் பயன்படுகின்றன என்பதையும் தெரிந்து கொள்வார்களாக!


24.4.2011

நூல் :  விடுதலை ஒற்றைப் பத்தி - 4
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக