கேரள மாநிலத்திலிருந்து தேனினும் இனிக்கும் ஒரு தகவல்; நம்ப முடியவில்லை; ஆனாலும் உண்மைதான்.
விபத்தில் சிக்குபவர்களை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்பவர்களுக்கு ரூ. 200 பரிசு வழங்கப்படும் என கேரள உள்துறை அமைச்சர் கோடியேறி பாலகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.
சாலை விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வருடத்திற்கு சராசரியாக 4 ஆயிரம் பேர் விபத்துகளில் பலியாகின்றனர். விபத்துகளைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. திருவனந்தபுரம் மற்றும் கோழிக்கோட்டில் விதிமுறைகளை மீறுபவர்களைக் கண்காணிக்க பல இடங்களில் ரகசியக் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் 15 இடங்களில் ரகசிய கேமராக்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
சாலை விபத்துகளில் சிக்குபவர்களை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லாததால் பெருமளவு உயிர்ச் சேதம் ஏற்படுகிறது. விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவினால் காவல்துறை வழக்கு பதிவு செய்யும் என்ற அச்சமே இதற்குக் காரணம். ஆனால் இனிமேல் யாரும் அப்படி பயப்படத் தேவையில்லை. சாலை விபத்தில் சிக்குபவர்களை உடனடியாக தங்கள் காரிலோ அல்லது வேறு வாகனத்திலோ கொண்டு சென்று மருத்துவமனையில் சேர்த்தால் அவர்களுக்கு இனிமேல் ரூ. 200 சன்மானம் வழங்கப்படும். இது ஒரு நல்ல செய்தியல்லவா!
மக்களில் பெரும்பகுதியினருக்கு பிறர்க்கு உதவி செய்யும் சிந்தனை உண்டா? தான் உண்டு, தன் குடும்பம் உண்டு என்ற சின்னதோர் கடுகுள்ளம்தானே பெரும்பாலோருக்கும்?
கடவுளைக் கும்பிடுபவன் கூட நான் நன்றாக இருக்க வேண்டும்; என் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்று தான் வேண்டுகிறானே தவிர, ஊர் நன்றாக இருக்க வேண்டும்; குறைந்தபட்சம், தான் குடியிருக்கும் தெருவாவது நன்றாக இருக்க வேண்டும் என்று வேண்டுகிறானா? இல்லையே! நாம் பயணம் செய்யும்போது விபத்து ஒன்று நடந்து அதில் சிலர் அடிபட்டுக் கிடந்தால் ஓடிச் சென்று உதவ வேண்டும் என்று எண்ணுகிறவர்கள் எத்தனைப் பேர்? மருத்துவமனையில் கொண்டுபோய் சேர்க்க வேண்டும் என்று எண்ணும் மனம் படைத்தவர் எத்தனைப் பேர்?
விபத்துபற்றி காவல்துறைக்குப் புகார் செய்ய வேண்டும் என்ற கடமை உணர்வு கொண்டோரை சாதாரணமாகப் பார்க்க முடிகிறதா? உதவி செய்யச் சென்றால் பிறகு ஏதாவது பிரச்சினை வந்தால் என்ன செய்வது! நீதிமன்றத்துக்குக் கூப்பிடுவார்கள் - சாட்சி சொல்ல வேண்டும் - எதிர் தரப்பினர் மிரட்டுவார்கள் - எதற்கு இந்த வீண்வம்பு என்று ஒதுங்கிக் கொள்ளும் நிலைதான் நாட்டில்.
இந்த நிலையில் உதவி செய்ய வேண்டும் என்ற ஒரு உந்துதலை ஏற்படுத்த கேரள அரசு ஒரு சிறு உதவித் தொகையை அளிக்க முன்வந்துள்ளது. இதில் பணம் என்பது அல்ல முக்கியப் பிரச்சினை. அடுத்தவர்களுக்கு உதவிட வேண்டும் என்ற உணர்வை ஊட்டுவதுதான் இதற்குள் அடங்கி இருக்கும் தத்துவம்.
மனம் என்று இருப்பதற்கு அடையாளம், மனிதற்கு உதவி செய்வதுதான்.
மனிதன் தானாகப் பிறக்கவில்லை. ஆகவே அவன் தனக்காகப் பிறக்கவில்லை. மற்றவர்களுக்கு என்ன செய்தோம் என்று எண்ணிப் பார்க்க வேண்டும். அப்படி எண்ணிப் பார்த்து செயல்புரிவதுதான் மனிதத் தன்மை - தந்தை பெரியார் : 21.7.1962
29.4.2011
நூல் : விடுதலை ஒற்றைப் பத்தி - 4
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக