வியாழன், 3 ஆகஸ்ட், 2017

வெள்ளுடை வேந்தர்



நீதிக்கட்சியின் ஏந்தல் சர். பிட்டி தியாகராயர் அவர்கள் பிறந்த பெருமைக்குரிய நாள் இந்நாள் (27.4.1852)

இவர்தம் பண்பாடு எத்தகையது?

பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு முன்னர் யான் வாலிபனாக இருந்தபோது, நம் நாட்டின் பெருமகனாரான தியாகராயருடன் பாசு திருமண மசோதாவினால் ஏற்படும் நன்மை தீமைகளைப் பற்றிப் பேசினேன். என்னுடைய விவாதத்திற்கான வாதம் ஒவ்வொன்றையும் கூறி வந்தேன். அதற்கான பதில்களும் உடனுக்குடன் அப்பெரியாரிடமிருந்து வந்து கொண்டிருந்தன. மேலும் எனது கருத்தை நிலை நாட்டுவதற்கான வாதங்கள் கிடைக்காமற் போகவே, கோபமும், ஆத்திரமும் மேலிட்டுத் தகாத சொற்களையெல்லாம் பயன்படுத்திட முற்பட்டேன். ஆயினும் அக்குணக்குன்று தன் நிலையை இழக்கவில்லை. என் சிறுமையைப் பார்த்து ஏளனம் செய்தது. என் அறியாமையின் துடிப்பைக் கண்டு வாய்விட்டுச் சிரித்தது. அதன் பிறகு பல நூறு தடவை அப்பெரியாரைச் சந்தித்திருப்பேன். பல விஷயங்கள் குறித்துப் பேசியிருப்பேன். ஆனால், அன்று நடந்த விவாதத் தகராறு பற்றியோ, எனது தவறு குறித்தோ ஒரு சிறு சொல்லும் கூறி என்னைக் கடிந்தவரல்லர். அதைப் பற்றி நினைப்பூட்டி என்னை வருந்தச் செய்தவருமல்லர். இப்படிப்பட்ட பெரும் பண்பாளரை என் வாழ்நாளில் இதுவரை கண்டதே இல்லை. வாழ்க அவர்தம் பண்பு! வாழ்க அவர்தம் பெருந் தன்மை!

திரு.வி.க. அவர்கள் பிட்டி தியாகராயர்பற்றி எழுதிய எழுத்துப் பொன் துகள்கள் இவை. (1.5.1925 அன்று சென்னை நகர சபைக் கூட்டத்தில் தியாகராயர் மறைவு குறித்து இரங்கல் தீர்மானத்தின்மீது பேசிய உரையிலிருந்து)

சர் பிட்டி தியாகராய செட்டியார் உறுதியான கருத்துகளையும், எண்ணங்களையும் கொண்ட ஒரு தனிப் பெரும் மனிதராக விளங்கினார். பிறர் புகழ்ச்சிக்கும், கண்ணோட்டத்துக்கும் பயந்து, தம்முடைய மனக் கருத்துகளையும், எண்ணங்களையும் மறைத்து வைத்து ஒருபோதும் பேசியவரல்லர் தியாகராயர் மறைவையொட்டி இந்து ஏடு தலையங்கத்திலிருந்து (30.4.1925) இது.

இதே இந்து ஏடு 1916 டிசம்பர் 20 அன்று தியாகராயர் வெளியிட்ட பார்ப்பனர் அல்லாதார் கொள்கை அறிக்கைபற்றி என்ன எழுதியது தெரியுமா?

It is with much pain and surprise we persued the document என்று எழுதியதே!

மிகவும் துயரத்துடனும், ஆச்சரியத்துடனும் அந்த ஆவணத்தை ஆராய்ந்தோம் என்று எழுதியது இந்து ஏடு.

அப்படிப்பட்ட இந்துவே கூட அந்தப் பெருமகனாரின் பெரும் பண்பையும், கொள்கை உறுதியையும் போற்றாமல் இருக்க முடியவில்லை.

பார்ப்பனர் அல்லாதார் ஒவ்வொருவரும் நன்றிக்கரம் குவித்துப் போற்றவேண்டிய பொன்னாள் இந்நாள்.

வாழ்க தியாகராயர்!

வளர்க திராவிடர் உணர்வு!



27.4.2011

நூல் :  விடுதலை ஒற்றைப் பத்தி - 4
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக