1931 டிசம்பர் 13ஆம் நாள் தந்தை பெரியார் அம்போசா எனும்
பிரஞ்சுக் கப்பலில் சென்னைத் துறைமுகத்திலிருந்து ஏழை மக்கள் பயணம் செய்யும் 4ஆவது டெக்கில் - பயணம் தொடங்கினார்.
இதேநாளில் (பிப்ரவரி 14) 1932இல் ருசிய
துறைமுகம் சென்றடைந்தார். சோவியத்து அரசு தமது விருந்தினராகத் தந்தை பெரியாரை
ஏற்றுக் கொண்டது. ஜுனா பிலிகினா என்ற ஒரு பெண்மணியை மொழி பெயர்ப்பாளராக அரசே
நியமித்தது. பல இடங்களைச் சுற்றிப் பார்த்தார் பெரியார். மத எதிர்ப்பு
அருங்காட்சியகத்துக்குச் (ஹவே சுநடபைடிரள ஆரளநரஅ) சென்று அதில் தம்மை ஒரு
உறுப்பினராகப் பதிவு செய்து கொண்டார். பதிவேட்டில் தம் கருத்தினைப் பதிவு
செய்தார். லெனின் மியூசியம் மற்றும் விவசாய இலாகா மியூசியங்களுக்குச் சென்று
பார்வையாளர் புத்தகங்களில் தம் கருத்தினை எழுதினார். பொது உண்டியல் சாலையைப்
பார்வையிட்டார். சோவியத் ஒன்றியத்தின் ஜனாதிபதி காலினின் அவர்களைச் சந்தித்து பல
மணி நேரம் உரையாடினார்.
மாஸ்கோ, லெனின் கிராட், முதலிய இடங்களுக்குச் சென்று முக்கிய இடங்களைப் பார்வையிட்டார். மே
தினப் பொதுக் கூட்டம் ஒன்றிலும் தந்தை பெரியார் சொற்பொழிவாற்றினார். இந்தச்
சுற்றுப் பயணத்தில் 14 வயது சிறுவன் ஒருவன் பெரியாரைப்
பார்த்து வினா ஒன்றைக் கேட்டான். உங்கள் நாட்டில் மகராஜ் (பார்ப்பான்) பறையன்
(சூத்திரர்) என்ற பிரிவு இருக்கிறதாமே? என்று கேட்டான்.
தக்க விளக்கத்தை அந்தச் சிறுவனுக்குத் தந்தை பெரியார் அளித்தார்.
ஸ்டாலின் முன்னிலையில் மே தின விழா ஒன்றில் கலந்து கொண்டார்.
இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள நாத்திகத் தலைவர் என்று அவையோருக்கு அய்யா
அறிமுகப்படுத்தப்பட்டார். ஸ்டாலின் அளித்த மரியாதையை ஏற்றார். 29.5.1932 அன்று ஸ்டாலினைச் சந்திக்க ஒப்புதல் பெறப்பட்டு இருந்தது.
பெரியாருடன் சென்றிருந்த எஸ். இராமநாதனின் நடவடிக்கை காரணமாக அதற்கு மேல்
ருசியாவில் தங்குவதற்கான அனுமதி மறுக்கப்பட்டது (தந்தை பெரியார் அவர்களுக்கு உடன்
இருந்து இப்படி உபத்திரவம் செய்தவர்கள் பலர்)
தந்தை பெரியார் அவர்கள் ருசியா செல்லுவதற்கு முன்பாகவே பொதுவுடைமைத்
தத்துவங்களைப் பிரச்சாரம் செய்யத் தொடங்கி விட்டார். மேனாட்டுக்குப் பயணம்
செய்வதற்கு நான்கு மாதங்களுக்கு முன்னதாக (1931 ஆகஸ்ட்) விருதுநகரில் நடைபெற்ற 3ஆவது மாகாண சுயமரியாதை மாநாட்டிலேயே அந்தக் கருத்தினைப்
பிரதிபலித்தார்.
சமதர்மத் தத்துவமும், பொதுவுடைமைக் கொள்கையும் நாட்டில் ஓங்க
வேண்டும் என்பதே நமது இலட்சியமாயிருக்கிறபடியால், விதி, கடவுள் செயல் என்பன போன்ற உணர்ச்சிகள்
மக்கள் மனதிலிருந்து ஒழிக்கப்பட வேண்டும் என்பது தீர்மானமாகவே நிறைவேற்றப்பட்டது.
கார்ல் மார்க்ஸ், ஃபிரடரிக் ஏங்கல்சு ஆகியோரின் புகழ்
பெற்ற அறிக்கையை ருசியா செல்லுவதற்கு இரு மாதங்களுக்கு முன்பாகவே மொழியாக்கம்
செய்து குடிஅரசு (4.10.1931) இதழில் வெளியிட்டார்.
14.2.2011
நூல் : விடுதலை ஒற்றைப் பத்தி - 4
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக