பெண்களைப் பற்றி இலக்கணம் சொல்லும்போது அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்ற நான்கு குணங்களும் இன்றியமையாதவை என்று சொல்கிறார்கள்
- எழுதுகிறார்கள்.
இதில் பயிர்ப்பு எனும் சொல்லுக்கு உண்மையிலேயே பொருள் தெரிந்து
பேசுகிறார்களா என்பது கேள்விக்குறியே.
தந்தை பெரியார் அவர்கள் இதுபற்றி திருமண நிகழ்ச்சிகளில் கடுமையாகச்
சாடியதுண்டு! நேற்று சென்னை பாவாணர் நூலகக் கட்டட அரங்கில் பேராசிரியர் முனைவர்
மு.பி. பாலசுப்பிரமணியன் அவர்களின் மணிவேந்தன் கவிதைகள், தமிழாலயத்தின் தலையங்கங்கள் ஆகிய இரு நூல்களின் வெளியீட்டு விழா வெகு
நேர்த்தியாக நடைபெற்றது. நூல்களை வெளியிட்ட தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி
அவர்கள் மணி வேந்தன் கவிதைகள் நூலில் பெண்கள் பற்றிக் குறிப்பிட்டிருந்த அச்சம்,
மடம், நாணம், பயிர்ப்பு பற்றி முக்கியமாக எடுத்துக் கொண்டு விமர்சனம் செய்தார்.
அச்சம் - என்றால் அச்சப்பட வேண்டியதற்கு அச்சப்பட வேண்டியதுதான். அது
ஆண், பெண் இருபாலருக்கும் பொதுதானே? பெண்ணை மட்டும் ஏன் பிரித்துப் பேச வேண்டும்? என்ற கேள்வியைத் தொடுத்தார். அறிஞர் பெருமக்கள் நிரம்பிய அந்த அவையை
அமைதி ஆட் கொண்டது.
முக்கியமாக பயிர்ப்பு எனும் சொல்லை எடுத்துக் கொண்டால், கழகத் தமிழ் அகராதி, செந்தமிழ் அகராதி, தமிழ் அகராதி, மதுரைத் தமிழ்ப் பேரகராதி என்று அத்தனை
அகராதிகளிலும் இந்தச் சொல்லுக்கு என்ன பொருள் கொடுக்கப்பட்டு இருக்கிறது?
அசுத்தம் - குற்சிதம் - அருவருப்பு
சரி, குற்சிதம் என்ற சொல்லுக்கு தமிழ்
அகராதி என்ன பொருள் கூறுகிறது? அசுத்தம், அருவருப்பு என்ற பொருளைத்தான் குறிப்பிடுகிறது. இந்தச் சொல்லுக்குப்
பொருள் சொல்ல வந்த கழகத் தமிழ்ப் பேரகராதி மகடூஉக் குண நான்கிலொன்று அருவருப்பு,
பிசின் என்ற விரிவாக்கத்தையும் தருகிறது.
பெண்களின் நான்கு குணங்களில் இந்த அசுத்தம் என்பதும் ஒன்று என்று அடித்துச்
சொல்லுகிறது. தமிழர் தலைவர் இந்தச் சொல்லை எடுத்துக் கொண்டு பல அகராதிகளிலும்
கூறப்பட்ட அந்த அசுத்தம் என்ற சொல்லைப் பற்றி கடுமையாக பொருள் படைத்த பயிர்ப்பைச்
சாடினார்.
பெண் அருவருப்பாக, அசுத்தமாக இருந்தால் அந்தக் குடும்பம்
நாகரிகம் உள்ளதாக விளங்குமா? பொருள் புரியாமல் நமது புலவர்களும்
ஒவ்வொரு மேடையிலும் நெட்டுருப் போட்டு சொல்லிக் கொண்டு இருக்கிறார்களே. இது
நியாயமா? மானமிகு மணிவேந்தன் நூலில் இடம்
பெறலாமா என்ற வினாவை அவர் தொடுத்தபோது, திராவிடர் கழகம்
என்றால் திராவிடர் கழகம்தான்! - பெரியாரின் சீடர் என்றால் சீடர்தான்! என்று
சொல்லும் ஒரு நிலை ஏற்பட்டது. கூட்டம் முடிந்து கலைந்து சென்ற ஒவ்வொருவரும் தமிழர்
தலைவரின் பயிர்ப்பு பற்றிக் கூறியதைத்தான் அசை போட்டுச் சென்றனர். ஈரோட்டுக்
கண்ணாடி அணிந்தால்தானே இந்த உண்மை புரியும்.
பெண் அடிமை என்பது மனித சமூக அழிவு என்பதை நாம் நினைக்காததாலேயே
வளர்ச்சி பெற வேண்டிய மனித சமூகம் பகுத்தறிவு இருந்தும் நாள்தோறும் தேய்ந்து
கொண்டே வருகிறது.
- தந்தை பெரியார்
13.2.2011
நூல் : விடுதலை ஒற்றைப் பத்தி - 4
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக