திங்கள், 14 ஆகஸ்ட், 2017

பிறவியிலேயே பல படிகள்



இன்றைய வாழ்க்கை நிலைமையைப் பார்த்தால் மனிதன் வேலை செய்வதற்காக ஒரு தொழில்       கண்டுபிடித்துக் கொடுக்க வேண்டுமென்றுதான் ஏற்படுகின்றது.  இதுவும் தான் வயிற்றுக்கு வேண்டிய அளவு கூட கிடைக்க முடியாத கூலிக்கு முழுநேரத்தையும் செலவு செய்து பாடுபட வேண்டும் என்பதாகக் காணப்படுகின்றது.
இது பகுத்தறிவில்லாத மிருக வாழ்வைவிட மிக மோசமான வாழ்வேயாகும்.  எப்படி எனில் அவற்றிற்காவது (ஒரு காரண்டி) உத்திரவாதம் இருக்கின்றது.  அதாவது அதன்   எஜமான் வயிறு நிறைய அதற்கு வேண்டிய ஆகாரம் கொடுக்கக் கட்டுப்பட்டிருக்கின்றான்.  மனித வேலைக்காரனுக்கோ உத்தரவாதமே கிடையாது.  இன்னும் பட்சிகள், காட்டு மிருகங்கள் ஆகியவைகளில் எதற்கும் எவ்வித வேலையும் செய்யாமல் வாழும் சவுகரியமிருக்கின்றது.  இப்படி இருக்க பகுத்தறிவு இருக்கும் காரணத்திற்காக மனிதன் 100க்கும் 90 பேர் ஆகாரத்திற்கே வேலை செய்ய வேண்டியது என்பதும் அதுவும் காரண்டி இல்லாத அடிமையாய் இருக்க வேலை செய்வது என்பதும், அதுவும் சரியாய் கிடைக்காமல் பட்டினியாய் கஷ்டப்படுவது என்பதும் இயற்கைக்கு மாறுபட்ட ஒரு பெரிய அக்கிரமமாகும்.  ஆகவே வேலையில்லாக் கஷ்டம் ஏற்பட்டு ஜனங்கள் பட்டினி கிடந்து பரிதவிக்க ஆரம்பித்தால்தான் ""தங்களுக்குப் பகுத்தறிவும் வன்மையும் இருந்தும் தாங்கள் முட்டாள்தனமாய் பாடுபடுவதும் தங்களைப் போன்ற பிறரால் ஏய்க்கப்படுவதும் ஏன்?  என்கின்ற காரணத்தை உணர முடியும்.  உணர்ந்து சமநிலையை அடைய முயற்சிக்கவும் முடியும்.

அதை விட்டு விட்டு முதலாளி தொழிலாளி நிலைமையும், மிராசுதாரர் உழவன்       நிலைமையும் உலக வாழ்க்கையின் செளகரியத்திற்கு அவசியம்'' என்பதாகச் சொல்லி  அதுவும் ""கடவுள் செயலால் முன் ஜென்மத்தின் கர்ம பயனால் தலைவிதியால் ஏற்பட்டது'' என்று சொல்லிக் கொண்டு அவற்றை நிலை நிறுத்திக் கொண்டே எவ்வளவுக் கூலி வாங்கிக் கொடுத்தாலும் மனித வர்க்கத்தினரில் பெரும்பான்மையானவர் களின் கவலையும், தொல்லையும், கொடுமையும் ஒழியவே ஒழியாது.  எப்படி எனில் ஜாதி வித்தியாசத்தை வைத்துக் கொண்டு எவ்வளவு சமத்துவம் கொடுத்தாலும் அது எப்படி பயன்படாதோ அது போலவே முதலாளி, தொழிலாளி முதலிய பாகுபாடுகளை வைத்துக் கொண்டு அவர்களுக்குக் கொடுக்கும் எவ்வித சுதந்திரமும் பயன்படாமலேயே போய்விடுவதோடு கீழ்நிலை மேல்நிலை என்பதும் மாற்ற முடியாததாகி விடும்.  ஏனெனில் தொழிலாளி, முதலாளி, உழவன், ஜமீன், மிராசுதாரன் என்பவைகளும் ஒருவித வருணாசிரம தர்மமே தவிர வேறல்ல.  ஆச்சிரமங்கள் என்றாலே படிகள் நிலைகள் என்பதுதான் கருத்தாகும்.

நமது நாட்டில் பிறவியிலேயே பல படிகள் இருப்பதாலும் அதனாலேயே நாம் சதா  கஷ்டப்படுவதாலும் தொழில், வாழ்க்கையில் உள்ள படிகளை நாம் கவனிக்கவே நேரமும், ஞாபகமும் இல்லாதவர்களாய் பிறவிப் படிகளையும், தொழில் படிகளையும் கடந்தவனாகத் தான் இருக்க வேண்டும்.  அவ்விரண்டு படிகளையும் ஒழிந்த நிலைதான் சமதர்ம நிலையயன்று சொல்லப்படுவதாகும்.

- குடிஅரசு, தலையங்கம், 14.12.1930

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக