வியாழன், 3 ஆகஸ்ட், 2017

தேர்தல் அறிக்கை




தேர்தலில் ஈடுபடும் அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கைகளை வெளியிடுவதுண்டு. அந்த வகையில் தி.மு.க. தேர்தல் அறிக்கையில் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, திராவிடர் இயக்க ஒப்பற்ற தலைவர்கள் சர்.பிட்டி. தியாகராயர், டாக்டர் டி.எம். நாயர், டாக்டர் சி.நடேசன் ஆகியோரின் பெயர்கள் வரலாற்றுப் பெருமையோடு குறிப்பிடப்பட்டுள்ளன.

பகுத்தறிவு நெறி பற்றியும் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அண்ணா தி.மு.க. என்னும் பெயருள்ள ஒரு கட்சியின் தேர்தல் அறிக்கையில் எந்த இடத்திலும் அண்ணாவின் பெயரே பதிவு செய்யப்படவில்லை என்கிறபோது, பெரியார் பெயரும், திராவிடர் இயக்க முன்னோடிகளின் பெயர்களும் இடம் பெறும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்?

ஜாதி பேதமற்ற சமத்துவ சமுதாயத்தை உருவாக்க ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள 145 பெரியார் நினைவு சமத்துவபுரங்களுடன் மேலும் 95 சமத்துவபுரங்கள் உருவாக்கப்படும் என்று தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதுபோன்ற மறு மலர்ச்சி பற்றிய எந்த அறிவிப்பும் அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் மருந்துக்கும் இடம் பெறவில்லை. அதேநேரத்தில் தமிழ் மொழி மேம்பாடு என்னும் தலைப்பின் கீழ் அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கீழ்க்கண்ட அறிவிப்பு இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியின் பெருமையை மற்ற மொழியினரும் உணர்ந்து, அதைப்பற்றி அறிய திருக்குறள், தமிழ்க் காப்பியங்கள், இலக்கண- இலக்கியங்கள், புராண- இதிகாச நூல்கள், பாரதியார், பாரதிதாசன் கவிதைகள் மற்றும் பல்வேறு வரலாற்றுப் புகழ் பெற்ற நூல்களைப் பல்வேறு இந்திய மொழிகளிலும், ஆங்கிலம், சீன, அரேபிய மற்றும் உலகில் அதிக மக்கள் பேசும் மொழிகளில், மொழி மாற்றம் செய்யப்பட்டு, இணைய தளத்தில் இடம் பெறச் செய்து, நமது தமிழ் மொழியின் பெருமை உலக மெங்கும் பரவ வழிவகை செய்யப்படும்.

(அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை, பக்கம் 17, 18)

பெரிய புராணத்தையும், கம்ப இராமாயணத்தையும் கொளுத்த வேண்டும் என்று இரா.பி.சேதுப் பிள்ளையோடும், நாவலர் சோமசுந்தர பாரதியாரோடும் விவாதப் போரிட்டு வென்றவர் அறிஞர் அண்ணா.

அந்த அண்ணாவின் பெயரைக் கட்சியின் பெயரிலும், உருவத்தைக் கொடியிலும் பொறித்து வைத்துள்ள அண்ணா தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் தமிழில் உள்ள புராணங்களையும், இதிகாசங்களையும் மொழி மாற்றம் செய்யப்போகிறதாம் - வெட்கக்கேடு!

முதலாவதாகத் தமிழ் முன்னேற்ற மடைந்து, உலகப்பாஷை வரிசையில் அதுவும் ஒரு பாஷையாக இருக்க வேண்டுமானால் தமிழையும், மதத்தையும் பிரித்து விட வேண்டும். தமிழுக்கும், கடவுளுக்கும் உள்ள சம்பந்தத்தையும் கொஞ்சமாவது தள்ளி வைக்க வேண்டும்.

- தந்தை பெரியார் (குடிஅரசு 26-1-1936)

பெரியார், அண்ணா கருத்துகள் இவ்வாறு இருக்க அதற்கு மாறாக தமிழில் உள்ள புராண, இதிகாசங்களை மொழி மாற்றம் செய்வதாகக் கூறும் அ.தி.மு.க., பெரியார், அண்ணா பெயர்களை உச்சரிக்கத் தகுதி உடையது தானா?



5.4.2011

நூல் :  விடுதலை ஒற்றைப் பத்தி - 4
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக