ஞாயிறு, 16 ஜூலை, 2017

பெரியார் - மணியம்மை திருமணம் குறித்த அவதூறு.! - 2


இதற்கான விளக்கங்கள் எல்லாம் எப்பொழுதோ கொடுக்கப்பட்டு முடிந்துபோன சங்கதி; யார் குற்றம் சொன்னார்களோ அவர்களே பின்னாட்களில் உண்மையை உணர்ந்து விட்ட நிலைதான்.

தொடக்கத்தில் அதனை அதிர்ச்சியாகப் பார்த்தவர்கள், விமர்சனம் செய்தவர்கள் எல்லாம் கூட ஒரு செவிலியராக அன்னை மணியம்மையார் இருந்து தந்தை பெரியார் அவர்களை 95 ஆண்டு காலம் வாழ வைத்த தகைமையைக் கண்டு வாயார, நெஞ்சாரப் பாராட்டத்தான் செய்தார்களே தவிர யாரும் குற்றப் பத்திரிகை படிக்கவில்லை.

உலகியலில் கூறப்படும் சாதாரண காரணங்களை தந்தை பெரியார் மீது யாரும் திணிக்க முடியாது.
தந்தை பெரியார் அவர்களின் துணைவியார் நாகம்மையார் மறைந்த போது தந்தை பெரியார் அவர்களுக்கு வயது 54. திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று அந்த 54 வயதில் தந்தை பெரியார் நினைத்திருந்தால் அந்தக் குற்றச் சாற்றுக்கே கூட இடம் இல்லாமல் போயிருக்குமே. அவர்களின் வீட்டார்கூட எவ்வளவோ வலியுறுத் தியும் கூட திருமண எண்ணத்தை அய்யா கொண்டார் இல்லை.

நாகம்மையார் மறைவு கூட ஒருவகையில் நல்லது என்றுதான் கருதினார்.

எனது வாழ்நாள் சரித்திரத்தில் இனி நிகழப் போகும் அத்தியாயங்களோ சிறிது விசேஷ சம்பவங்களாக இருந்தாலும் இருக்கலாம். அதை நாகம்மாள் இருந்து பார்க்க நேரிட்டால் அம்மாளுக்கு அவை மிகுந்த துக்கமாகவும், துயரமாகவும் காணக் கூடியதாய் இருக்கும் என்பதில் சிறிதும் சந்தேகம் இருக்காது. அத்துடன் அதைக் கண்டு சகியாத முறையில் நானும் சிறிது கலங்கக் கூடும். ஆதலால் நாகம்மாள் மறைவால் எனக்கு அதிகம் சுதந்திரம் ஏற்பட்டதுடன் குடும்பத் தொல்லை ஒழிந்தது என்கிற உயர் பதவியையும் அடைய இடமேற்பட்டது. (குடிஅரசு 14-_5-_1933) என்று எழுதினார் என்றால் இதனுள் அடங்கியிருக்கும் தத்துவத்தைத் தன்னலம் துறந்த பொது மனத்தினரால்தான் உணர முடியும்.

ஒரு கட்டத்தில் துணைவியர் மறைந்தது நல்லது என்ற நிலை; இன்னொரு கட்டத்தில் தனக்கு ஒரு துணைவி தேவை என்ற நிலை அந்தத் துணையும் தனிப்பட்ட- தன் சுக வாழ்வுக்காக அல்ல. தான் வரித்துக் கொண்டு இருக்கிற புரட்சிகரப் பொது வாழ்வுக்கு, தனது தள்ளாமை, உடல் நோய் இடையூறாக இருக்கும் நிலையில்அதிலிருந்து விடுபடவும், தொண்டறம் புரிய சட்ட ரீதியாக அவர் மேற்கொண்ட முடிவும், துணிவும், எதிர்ப்புகளை சட்டை செய்யாத ஆளுமையும் அய்யாவை ஒரு தனித்தன்மை மேலோங்கும் வைரம் பாய்ந்த மனிதராகத்தான் ஜொலிக்கச் செய்கிறது.

திருமணம் இல்லாமல் 16 ஆண்டுகள் இருந்துவிட்டு 17 ஆம் ஆண்டில் துணை தேடக்காரணம் என்ன? திருமண ஏற்பாட்டுக்குப்பின் 24 ஆண்டுகள் தந்தை பெரியார் அவர்கள் வாழ்ந்தார்கள் என்றால், அந்த மாபெரும் தலைவரை வாழ வைத்து, அதன் மூலம் தமிழர் வாழ்வுக்குப் பெருந்தொண்டு செய்தவர் அன்னையார் என்பதிலும் அய்யமுண்டோ?

நூல் : பார்ப்பன புரட்டுக்கு பதிலடி

ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக