ஞாயிறு, 16 ஜூலை, 2017

தந்தை பெரியார் திருமணம்


தந்தை பெரியார் அவர்களின் துணைவியார் நாகம்மையார் மறைந்த போது தந்தை பெரியார் அவர்களுக்கு வயது 54. திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று அந்த 54 வயதில் தந்தை பெரியார் நினைத்திருந்தால் அந்தக் குற்றச் சாற்றுக்கே கூட இடம் இல்லாமல் போயிருக்குமே. அவர்களின் வீட்டார்கூட எவ்வளவோ வலியுறுத் தியும் கூட திருமண எண்ணத்தை அய்யா கொண்டார் இல்லை.

திருமணம் இல்லாமல் 16 ஆண்டுகள் இருந்துவிட்டு 17 ஆம் ஆண்டில் துணை தேடக்காரணம் என்ன? திருமண ஏற்பாட்டுக்குப்பின் 24 ஆண்டுகள் தந்தை பெரியார் அவர்கள் வாழ்ந்தார்கள் என்றால், அந்த மாபெரும் தலைவரை வாழ வைத்து, அதன் மூலம் தமிழர் வாழ்வுக்குப் பெருந்தொண்டு செய்தவர் அன்னையார் என்பதிலும் அய்யமுண்டோ?

இந்தி எதிர்ப்புப் போராட்டம், - பெல்லாரி சிறைச்சாலை, சட்ட எரிப்புப் போராட்டம், தேசிய கொடி எரிக்கும் போராட்டம், தமிழ்நாடு நீங்கலாக தேசப்பட எரிப்புப் போராட்டம், - பிள்ளையார்  உடைப்புப் போராட்டம், -ராமன் பட எரிப்புப் போராட்டம், கோவில் கர்ப்பக்கிரக நுழைவுப் போராட்டம் என்று அலை அலையான போராட்டங்களை அல்லவா தந்தை பெரியார் நடத்தினார்!

இந்த இடர்ப்பாடான கால கட்டத்தில் தோன்றாத் துணையாக இருந்தவர் _ அன்னை மணியம்மையார் அல்லவா! ஒவ்வொரு சொல்லும் அந்தத் தாயின் கலவையையும் கருணை உள்ளத்தையும் கருணை உள்ளத்தையும் படம் பிடிக்க வில்லையா?

தந்தை பெரியார் எதிர்பார்த்ததற்கு மேலாக அல்லவா, ஒரு தாயாக இருந்து அந்தத் தந்தையை, தலைவரை தமிழ் நாட்டின் பொது வாழ்வுக்குக் காப்பாற்றிக் கொடுத்திருக்கிறார்.

இதனைக் கொச்சைப்படுத்துபவர்கள் குணக் கேடர்களாகத்தான் இருக்க முடியும்.

தன்னைக் காண வந்த எழுத்தாளராகிய ஒரு பெண்மணியை (அனுராதா ரமணன் - பார்ப்பனப் பெண்மணிதான்) கையைப் பிடித்து இழுத்தவர்கள்தான் அவாளுக்கு ஜெகத் குரு - காமகோடி!- பார்ப்பனர்களின் யோக்கியதைக்கு ஜெகத்குருக்கள் போதாதா?

வாலிப வயதை ஒரு சமூகத்தின் புரட்சிப் பணிக்காகத் தியாகம் செய்து, தலைவரையும் காத்து, தலைவரின் மறைவுக்குப் பிறகு - அந்தத் தலைவர் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில் இயக்கத்தைக் கட்டிக் காத்த அந்த கண்ணியமிக்க கடமை உணர்வை, தியாக உணர்வை மதிப்பதற்கு மரியாதையான பண்பாடும் சீலமும் தேவைப்படும்.

பார்ப்பனர்களிடத்தில் அதனை எதிர்பார்க்க முடியுமா?

நூல் : பார்ப்பன புரட்டுக்கு பதிலடி

ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக