திங்கள், 17 ஜூலை, 2017

தோப்புக் கரணம்!


திருப்பூர் - பல்லடத்தில் ஒரு முறையான (?) நல்ல(?) காரியம் நடைபெற்று இருக்கிறது. பரவாயில்லை, காலங்கடந்தாவது இப்படி ஒரு புத்தி ஏற்பட்டுள்ளதே என்று கைதட்ட லாம்.

அருளானந்த ஈசுவரன் கோயில் ஒன்று பழமை வாய்ந்ததாம். இக்கோயிலின் சொத்து 3.36 ஏக்கர்- பல கோடி பெறுமாம். இதனை தனிநபர் ஆக்கிர மித்துள்ளாராம்.

இந்தக் கோயிலுக்கு உடனடியாகக் கும்பாபிஷேகம் செய்யவேண்டும் என்றும், ஆக்கிரமிக்கப்பட்ட கோயில் நிலத்தை மீட்க தமிழக இந்து அறநிலையத் துறைக்கு நல்ல புத்தியைக் கொடுக்க வேண்டும் என்றும் கூறி, இந்து மக்கள் கட்சியினர் பல்லடம் வட் டாட்சியர் அலுவலக முன்பு விநாயகர் படம் ஒன்றை வைத்து, அந்தப் படத்தின் முன் தோப்புக்கரணம் போட்டுள்ளனர். (தினமலர் 13-8- 2010 விடுதலை ஒற்றைப்பத்தி - 3 பக்கம் 15)

சபாஷ்! இதுதான் சரியான அணுகுமுறை; அதுவும் கடவுள் சமாச்சாரம் என்கிறபோது, அந்தக் கடவுளிடத்தில் மனு போடுவதும், வேண்டுகோள் விடுப் பதும்தானே அறிவு நாணயம்? அப்படிச் செய்யாமல் அரசாங்கத்திடம் மனு போடுவது, மன்றாடுவது என்பது கடவுளை அவமதிக்கும் காரியம் அல்லவா?

கடவுள் என்பதெல்லாம் வெறும் மண்ணுருண்டை - வெறும் சிலைகள்தாம் - அவை கையாலாகாதவை. எனவே அரசாங்கம்தான் சகல அதிகாரமும் படைத்தது என்று பக்தர்களே ஒப்புக் கொள்வது அசல் நாத்திகச் செயல்பாடு அல்லவா!

எனவே உண்மையிலேயே கடவுள் மீது நம்பிக்கை கொண்டவர்கள், இந்தச் சமாச்சாரம் மட்டுமல்ல - எல்லாப் பிரச்சினை களிலும் கடவுளை நம்பி - அவர் முன் தோப்புக் கரணம் போட வேண்டுமே தவிர, எந்த காரியத்தை முன்னிட்டும் அரசுக்கோ, காவல்துறைக்கோ, நீதிமன்றத்துக்கோ போகக்கூடாது, போகவே கூடாது.

அது போலவே நோய் தீரவேண்டுமா? மருத்துவ மனைக்குச் செல்லாதீர்கள். வைத்தீஸ்வரன் கோயிலுக்குச் சென்று பக்தர்களே, தண்டால் எடுங்கள். திருமணம் கைகூடவேண்டுமா? திருவீழிமலை கார்த்தியாயினி கல்யாணசுந்தரே சுவரர் கோயிலுக்குச் சென்று கும்பிடு தண்டம் போடுங்கள். திருமண விளம்பரங்கள், கல்யாணமாலை, இணைய தளங்களைப் பார்க்காதீர்கள். செலவுக்குத் தட்டுப்பாடா? வேலை தேடி அலையாதீர்கள்மாறாக சிதம்பரம் அருகில் உள்ள வழித்துணை நாதர் (மார்க் கசகாயேஸ்வரர்) ஆலயம் சென்று தொழுங்கள் என்று இந்து முன்னணிகள் கட்சி கள் பக்தர்களுக்கு வேண்டு கோள் கொடுக்க சத்யமாக முன்வரவேண்டும். (இந்தத் தகவல்கள் எங்கள் கற்பனையல்ல ஆன்மிக இதழ்களில் விலாவாரியாகக் கூறப்பட்டவைதான்!) அப்பொழுதுதான் அவர்கள் ஆத்திகர்கள். இல்லையென்றால் பக்திப் போர்வையில் நடமாடும், கடவுளை மறுக்கும் நாத்திகர்களே!

14.8. 2010 விடுதலை ஒற்றைப்பத்தி – 3

நூல் : ஒற்றைப்பத்தி - 3

ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக