காமராசர்
தமிழ் இன மக்களுக்குப் பச்சைத் தமிழர்
காமராசர்
தமிழின மக்களுக்குக் கண்ணொளியானவர்.
இந்த இரண்டு அடை மொழிகளையும் விரித்தால் தமிழின முன்னேற்றத்தின் வாழ்வு பளிச்சென்று தெரியும். இதற்கெல்லாம் ஆணிவேரான, அடித்தளமான தந்தை பெரியார் என்ற இரட்சகரின் வடிவம் தெரியும்.
தமிழ்நாட்டுக் கல்வி வளர்ச்சிக்குக் காரணம் தந்தை பெரியார், காரியம் காமராசர் என்று `ஆனந்த விகடன் ஒருமுறை எழுதியிருந்தது.தமிழர்களின் வாழ்வுக்கு கல்விக்குப் பள்ளிப் படிப்பைத் தாண்டாத இருபெரும் தலைவர்கள் பொறுப்பு என்பது எத்தனைப் பெரிய வரலாறு!
பெயருக்குப் பின் பட்டம் பொறிக்கும் தமிழர்களும், சட்டைப் பையில் பேனாவைச் செருகி வைக்கும் தமிழர்களும், மின் விசிறியின்கீழ் அட்டாணிகால் போட்டு உட்கார்ந்திருக்கும் தமிழர்களும், காமராசர் பிறந்த இந்த நாளில், ஒரே ஒரு நிமிடம் உட்கார்ந்தபடியோ, எழுந்து நின்றோ நன்றி உணர்வுடன் கண்ணீர் மல்கவேண்டும். அப்பொழுதுதான் நன்றி என்கிற மனிதப் பண்பின் மலர் வாசனை காலம் காலமாகத் தொடர்ந்து மனிதச் சமூகத்தில் வீசிக்கொண்டே இருக்கும்.
``உழைக்க வேண்டியதே ஏழையாய் இருப்பதே தலையெழுத்து என்றால், அந்தத் தலையெழுத்தை மாற்றி எழுதுவோம்! எழுத வேண்டியது அவசியம் என்று தான் சொல்கிறேன்!
இது தந்தை பெரியார் பேசுவதுபோல் இல்லையா? உண்மை எது எனில் இவ்வாறு பேசியவர் காமராசர்தான். (கிருட்டினகிரி, 12.1.1967).
காமராசரை ``பச்சைத் தமிழர் என்று தந்தை பெரியார் அடையாளம் காட்டியதற்கு இப்பொழுது காரணம் புரிகிறதா?
கதர்ச்சட்டைக்குள் கறுப்புச்சட்டை என்று காமராசர்பற்றி `கல்கி கார்ட்டூன் போட்டதற்கு இப்பொழுது விளக்கம் கிடைத்திருக்க வேண்டுமே!
`குழந்தைக்கு நல்ல பெயர் வைக்கவேண்டுமா? `காமராசர் என்று பெயர் சூட்டுகிறேன் என்றாரே தந்தை பெரியார், அந்த உள்ளுணர்வை தமிழர்களே கொஞ்சம் உணர்ந்து பாருங்கள்.
தந்தை பெரியாரின் உணர்வு, காமராசரின் எண்ணம் இவற்றை மறந்தால் தமிழனுக்கு மீண்டும் மனு தர்மம்தான்; தமிழர்களே எச்சரிக்கை! இதுதான் காமராசர் பிறந்த நாள் சிந்தனை!!
15.7.2005 (விடுதலை ஒற்றைப்பத்தி - 2)
15.7.2005 (விடுதலை ஒற்றைப்பத்தி - 2)
நூல் : விடுதலை ஒற்றைப்பத்தி - 2,
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக