திருப்பதி கோயில் அதன் கடவுள் வெங்கடாசலபதிதான் இந்தியாவின் பெரிய கல் முதலாளி. பாமர மக்கள் பக்தியின் காரணமாக கோயில் உண்டியலை நிரப்பிக் கொண்டிருக்கிறார்கள். கறுப்புப் பணக்காரர்கள் தங்களின் பாவங்களைக் கழுவிக் கொள்வதற்காக ரூபாய் நோட்டுகளை கத்தைக் கத்தையாக முகவரி இல்லாமல் போடுகிறார்கள். இதன் பொருள் இவற்றை எல்லாம் இலஞ்சமாக வாங்கிக் கொண்டு திருப்பதி ஏழுமலையான் என்ற கடவுள் பக்தர்களின் பழி
பாவங்களை பழி பாவத்திற்கு அஞ்சாமல் போக்கிக் கொண்டிருக்கிறது என்பதாகும்.
திருப்பதி தேவஸ்தானம் ஒரு புதிய முடிவை எடுத்துள்ளதாம். திருப்பதிக் கோயிலுக்குக் காணிக்கையாக அளிக்கப்படும் நகைகளை, உருக்கி, தங்க மாங்கல்யங்களாகச் (தாலிகளை) செய்து பக்தர்களுக்கு விலைக்கு விற்கலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாம்!
இதனை எதிர்த்து நகை செய்யும் தொழிலாளிகள் சுவர்ணகாரர்கள் திருப்பதியில் பேரணி ஒன்றை நடத்தியுள்ளனர்.
திருப்பதி தேவஸ்தானத்தின் புதிய முடிவால் அவர்களின் வேலை வாய்ப்புப் பாதிக்கப்படுகிறது என்பது ஒருபுறம் இருக்கட்டும்; ஆன்மிக ரீதியாக அவர்கள் வைத்துள்ள மற்றொரு குற்றச்சாட்டுக்கு ஆன்மிகவாதிகள், திருப்பதி தேவஸ்தானத்தைச் சேர்ந்தவர்கள், சங்கராச்சாரியார்கள், ஜீயர்கள் என்ன சொல்லப் போகிறார்கள் என்பதுதான் அந்தக் கேள்வி!
கல்யாணம் நிச்சயித்த பிறகே நாள் நட்சத்திரம் பார்த்து மாங்கல்யம் செய்வித்து, அதனை மணப்பெண்ணுக்கு மணமகன் கட்டுவது என்பதுதான் சம்பிரதாயம்.
ஆனால், திருப்பதி தேவஸ்தானமோ சம்பிரதாயங்களைச் சற்றும் பொருட்படுத்தாமல், அதனைத் தூக்கி எறிந்துவிட்டு, மாங்கல்யம் என்பது ஏதோ விலைக்கு விற்கப்படும் சாதாரண ஒரு பண்டமாக கருதுகிறதே என்கிற அவர்களின் குற்றச்சாட்டை எந்த அளவுக்கு எதிர்கொள்ளப் போகிறார்கள்?
எதற்கெடுத்தாலும் சம்பிரதாயம், பழக்கவழக்கம், பக்தி வழி என்று தம்பட்டம் அடித்துக் கொள்வோர் இதில் மட்டும் நழுவுவது ஏன்?
பக்தி என்பது அசல் வியாபாரம், கோயில் என்பது சுரண்டல் தொழிற்சாலைதான் என்பதை இப்பொழுதாவது பொதுமக்கள் ஒப்புக்கொள்வார்களா? பக்தர்கள்தான் சிந்திப்பார்களா?
26.07.2004 (விடுதலை ஒற்றைப்பத்தி - 2)
நூல் : விடுதலை ஒற்றைப்பத்தி - 2
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
நூல் : விடுதலை ஒற்றைப்பத்தி - 2
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக