ஞாயிறு, 16 ஜூலை, 2017

பச்சையானது இப்படிதான்!

திருவான்மியூரில் நடைபெற்ற சலவைத் தொழிலாளர் மாநாட்டில் (29.6.1952) உரையாற்றிய முதல் அமைச்சர் ராஜகோபாலாச்சாரியார் என்ன பேசினார்?

அவரவர் குலத் தொழிலை அவரவர் செய்ய வேண்டும். சலவைத் தொழிலாளர்களாகிய நீங்கள் துணியைக் கிழிக்காமல் சலவை செய்வது எப்படி என்பதைத் தான் கற்றுக்கொள்ள வேண்டும். எல்லோரும் படிக்க ஆரம்பித்தால். இந்தத் தொழிலை வேறு யார்தான் செய்வார்கள் என்று பேசவில்லையா? பச்சைப் பார்ப்பனர் என்று ஆச்சாரியார் ஆனதும். இதனை எதிர்த்ததால் பச்சைத் தமிழர் என்று காமராசர் ஆனதும் இப்படிதான்.

செந்தமிழுக்கும், சங்கத் தமிழுக்கும் உரிய இடம் அருங்காட்சியகம் தான்! அவற்றை அங்கேயே விட்டு வைத்திடுக, செந்தமிழ் என்பது (சிறிய) மெழுகு வர்த்திதான். அதைக் கொண்டு அய்.பி.எல். கிரிக்கெட் விளையாட்டுத் திடலுக்கே ஒளியூட்ட முனையும் வேலை பலிக்காது! (தினமணி_21.6.2010) பெரியார் காமராசரை ஆதரித்தார் என்றால் என்ன காரணம்? ஆச்சாரியாரின் குலக்கல்வித் திட்டத்தை ஒழித்ததோடு அல்லாமல், ஆச்சாரியாரால் மூடப்பட்ட ஆறாயிரம் பள்ளிகளைத் திறந்ததோடு மட்டுமல்லாமல், புதிதாக 12 ஆயிரம் பள்ளிகளைத் திறந்து, ஆண்டாண்டு காலமாக மனுதர்மத்தின் அடிப்படையில் கல்வி உரிமை மறுக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்கள்கல்வி என்னும் கண்ணொளி பெற வழிவகுத்தாரே!

ஆச்சாரியாரால் 50 ஆகக் குறைக்கப்பட்ட நேர்முகத் தேர்வு மதிப்பெண்ணை 150 ஆக உயர்த்தினாரே!
முக்கியமான பதவிகளில் எல்லாம் பார்ப்பனர் அல்லாதாரை அமர்த் தினாரே -_ இவையெல்லாம் காமராசரைப் பெரியார் ஆதரித்ததனால்  கிடைத்த வெற்றியா, தோல்வியா?

பெரியார் காமராசரை பச்சைத் தமிழர் என்றும், கர்மவீரர் என்றும், கல்வி வள்ளல் என்றும் தூக்கிப் பிடித்தது  வீண்போகவில்லையே!

அந்தக் காலகட்டத்தில் பார்ப்பனர்களும், பார்ப்பன ஏடுகளும் இதழ்களும் காமராசர் மீது சேற்றை வாரி இறைக்கவில்லையா? கறுப்புக் காக்கையைக் கல்லால் அடித்துக் கொல்ல வேண்டும் என்று ஆச்சாரியார் பேசவில்லையா? பெரிய பதவி சின்னப் புத்தி என்று கல்கி விஷம் கக்கவில்லையா?

பெரியார் கொள்கை என்னும் குயிலிட்ட முட்டையைக் காமராசர் எனும் காகம் அடைகாக்கிறது என்று கல்கி கார்ட்டூன் போட்டதன் தாத்பரியம் என்ன?

காமராசரை தன்வயப்படுத்தி தம் கொள்கைகளை சாதித்துக் கொண்டது குற்றமா? ஆம், பார்ப்பனர்களின் பார்வையில் குற்றம்தான், மகா மகா குற்றம்தான்!

இதுவே மனுதர்ம ராஜ்ஜியம் என்றால் பெரியாரையும், காமராசரையும் கழுவில் ஏற்றிக் கொன்றே இருக்காதா ஆரியம்?

நூல் : பார்ப்பன புரட்டுக்கு பதிலடி

ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக