பெண்கள் பிள்ளை பெறும் எந்திரமா? என்று கேட்டார் தந்தை பெரியார். இந்த வாக்கியத்துக்குள் மானுட வாழ்வின் மிக முக்கியமான பேரம்சம் அடங்கி இருக்கிறது. மேலோட்டமாகப் பார்ப்பவர்களுக்கு இது ஏதோ விளையாட்டு வார்த்தையாகவோ, நகைச்சுவைத் துணுக்காகவோ தோன்றக்கூடும்.
ஆழமாக எதையும் பார்ப்பதுதான் அறிவுடைமைக்கு அழகாகும்.
ஒரு குழந்தையைப் பெற்று எடுத்து ஆளாக்குவதுவரை எல்லாப் பொறுப்புகளும் ஒரு தாயையே சாருகிறது. அடுத்தடுத்துக் குழந்தை என்றால், அந்தப் பெண்ணின் வாழ்க்கை அத்தோடு மூழ்கி மறைந்து போய்விடுகிறது.
பெண் மானுடத்தின் முக்கிய கூறு என்பதே இதன் மூலம் அடிபட்டு வீழ்ந்து விடுகிறது.
அதேநேரத்தில், பெண் ஆணுக்கு நிகரானவர் ஆற்றலில், அறிவில், சாதனையில் ஆணுக்குச் சளைத்தவர்களல்லர் என்று பலவகைகளிலும் நிரூபிக்கவும்பட்டுள்ளது. ஆணாதிக்க சமுதாயம், உல கம் இவற்றையெல்லாம் கணக்கில் கொள்வதும் கிடையாது.
இன்றைய நாளேட்டில் ஒரு செய்தி இடம்பெற்றுள்ளது. திருவாரூர் மாவட்டம் மன்னார் குடி வட்டம், வடக்கு நாணனூரைச் சேர்ந்தவர் ரவிபாரதி (வயது 36) அவருக்கும், தஞ்சாவூரைச் சேர்ந்த செந்தமிழ்ச் செல்விக்கும் 7 ஆண்டுகளுக்குமுன் திருமணம் நடந்தது. குழந்தை இல்லை.
குழந்தை இல்லை என்பதற்காக செந்தமிழ் கலா என்ற இன்னொரு பெண்ணை மூன்று ஆண்டுகளுக்குமுன் திருமணம் செய்துகொண்டார். அந்தப் பெண்ணுக்கும் குழந்தை பிறக்கவில்லை.
விரக்தியின் விளிம்புக்குச் சென்ற ரவிபாரதி தற்கொலை செய்துகொண்டார் என்பது தான் அந்தச் செய்தி.
அறிவியல் வளர்ந்ததாக மெச்சப்படும் ஒரு காலகட்டத்தில் மனிதர்கள் எந்த அளவுக்கு அறியாமை இருட்டுக் குகையில் தொங்கிக் கிடக்கிறார்கள் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு.
குழந்தை பிறக்காததற்கு எத்தனையோ காரணங்கள் உண்டு. குழந்தை இல்லையென்றால் உடனே பெண்ணைத்தான் குறை கூறுவார்கள். ஆணிடமும் குறைபாடு உண்டு என்று நினைக்கவே சமுதாயம் தயாராக இல்லை.
யாரிடம் குறைபாடு இருந்தாலும் அதற்கு மருத்துவப் பரிகாரங்கள் உண்டு. அந்த வகையில் சிந்தனா வெளிச்சம் இல்லாததே இந்தத் தற்கொலைக்குக் காரணம்.
அதேபோல, குழந்தை ஆணாகப் பிறப்பதற்கும், பெண்ணாகப் பிறப்பதற்கும் ஆண்தான் காரணம் என்ற அடிப்படை அறிவுகூட இல்லா மல் பெண்ணைச் சபிக்கும் கொடுமையும் உண்டு.
இந்தப் பிரச்சினைகளை பெண்களே கர்ப்பப்பையைத் தூக்கியெறியுங்கள்! என்ற தந்தை பெரியாரின் சிந்தனை வெளிச்சத்தில் பார்க்கப் பெண்கள் தயாராவார்களாக!
11.6.2005 (விடுதலை ஒற்றைப்பத்தி - 2)
நூல் : விடுதலை ஒற்றைப்பத்தி - 2,
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
நூல் : விடுதலை ஒற்றைப்பத்தி - 2,
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக