ஞாயிறு, 16 ஜூலை, 2017

சோவின் புத்தி


கேள்வி: இரா. செழியனுக்கு, சமூகநீதிக்கான தந்தை பெரியார் விருதை வழங்கியுள்ளதே தமிழக அரசு?

பதில்: சிறந்த பார்லிமென்டேரியன் என்ற விருதாக இதை நினைத்துக்கொண்டு, அவருக்கு என் பாராட்டைத் தெரிவிக்கிறேன். பல வருடங்கள் எம்.பி.,யாக இருந்து சிறப்பாகப் பணியாற்றிய அவருடைய நேர்மை, இன்றைய சூழலில் பிரமிப்பைத் தருவது. அரசியல் சட்டம், நாடாளுமன்ற ஜனநாயக விதிமுறைகள், பல நாடுகளின் அரசியல் அமைப்புகள், நமது நாட்டுப் பொருளாதாரம்... போன்ற பல விஷயங்கள்பற்றி ஆழமான அறிவும், தெளிவான சிந்தனையும் உடையவர் செழியன். அவர், அரசினால் கௌரவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
(துக்ளக், 5.10.2005, கேள்வி பதில் பகுதி)

மொட்டைத் தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு என்று சொல்லுவார்களே, அது இந்த விடயத்தில் மிகவும் பொருத்தமானது (சோ  மொட்டைத் தலை என்பதால் அல்ல!).

உயர்திரு இரா. செழியன் அவர்களின் நாடாளுமன்றப் பணியின் சிறப்பு, நேர்மைகள்பற்றி சோ சொல்லித்தான் தெரிந்துகொள்ளவேண்டும் என்கிற நிலையில் இரா. செழியன் அவர்கள் இல்லை. அந்தத் துறையில் அவர் பதித்த முத்திரைகள் ஊருக்கும், உலகுக்கும் தெரிந்ததுதான்!

கேள்வி அதுவல்லவே! மானமிகு இரா. செழியன் அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள தந்தை பெரியார் சமூகநீதி விருதுபற்றியது கேள்வி.

அதுகுறித்து யோக்கியமான முறையில் பதில் கூற விமர்சனம் செய்ய துப்பில்லை. திராணியில்லை. பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப் பாக்கு இன்ன விலை என்கிற தன்மையில் உளறிக் கொட்டுகிறார். இவர்தான் பெரிய அறிவாளியாம்! பார்ப்பன வட்டாரங்களும், பார்ப்பனத் தொங்கு சதைகளும் இவ்வாறு கதைப்பதுண்டு!

மானமிகு இரா. செழியன் அவர்களால் பிஞ்சுப் பருவத்திலிருந்து அறியப்பட்ட தலைவர்  மதிக்கப்பட்ட தலைவர் தந்தை பெரியார்! அவர் குடும்பம் என்பது தன்மான இயக்க  திராவிடர் இயக்க மரபுக்குச் சொந்தமானது.

அன்றுதொட்டு இன்றுவரை தந்தை பெரியார் அவர்களின் பகுத்தறிவுக் கொள்கையில் அசைக்க முடியாத நம்பிக்கை  நம்பிக்கையும், தெளிவான சிந்தனையும் கொண்டவர்.

சமூகநீதிக் கொள்கையில் அழுத்தமான பிடிப்புக் கொண்டவர். மகளிர் இட ஒதுக்கீடு குறித்து அண்மையில்கூட தினமணியில் சிறப்புக் கட்டுரை எழுதியுள்ளார்.

இந்த வகையில் தந்தை பெரியார் விருது அளிக்கப்பட எல்லா வகையிலும் பொருத்தமானவர் மானமிகு இரா. செழியன் அவர்கள்.

தந்தை பெரியார் பெயரில் விருது என்பதை சோவால் ஜீரணிக்க முடியவில்லை. அந்த ஆத்திரத்தில் எதையோ பிதற்றுகிறார்.

உண்மையான சோவின் பூணூல் உருவம் இந்த இடத்தில்தான் பதுங்கி இருக்கிறது  தமிழர்கள் புரிந்துகொள்வார்களாக!

08.10.2005 (விடுதலை ஒற்றைப்பத்தி - 2)

நூல் : விடுதலை ஒற்றைப்பத்தி - 2,

ஆசிரியர் : கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக