சனி, 15 ஜூலை, 2017

ஆரியர்கள் இந்தியாவுக்கு வந்தது


ஆரியர்கள் இந்தியாவுக்கு வந்ததைப்பற்றி, A.L. Saunders, C.S.I.I.C.S. என்கிற ஓர் ஆராய்ச்சிக்காரர் சுமார் 20 வருஷங்களுக்கு முன், இந்தியர்கள் மதம் என்னும் ஆராய்ச்சியில் எழுதியிருப்பதாவது:-

சுமார் 5000 வருஷங்களுக்குமுன் இந்தியாவின் சீதோஷ்ண நிலை, இப்போது இருப்பதை விடச் சற்றுக் குறைந்த குணம் உள்ளதாக இருந்தது. இந்தியாவின் மக்கள் பல பிரிவுகளாக ஆங்காங்கு இருந்து வந்தார்கள். அவர்கள் கருப்பு நிறமுடையவர்கள்; சற்று உயரம் குறைந்தவர்கள். இப்போது போலவே நன்கு கஷ்டப்படக் கூடியவர்களாகவும், மிக்க உற்சாகமும் மன மகிழ்ச்சியுள்ளவர்களாகவும், நல்ல சுபாவமுள்ளவர்களாகவும், கவலை இல்லாதவர்களாகவும் இருந்து வந்தார்கள். அப்படிப்பட்டவர்கள், ஆரியர்கள் படையெடுப்பினால் நிலைகுலைந்தார்கள். ஆரியரின் ஆதிக்கத்தினால், அடிமை ஜாதி மக்களாக ஆக்கப்பட்டார்கள்; ஆரியர்கள், தங்கள் நாட்டில் புல்தரை இல்லாததாலும், மங்கோலியர்கள் அவர்களை விரட்டி அடித்ததனாலும் பிழைப்புக்காக இடம் கண்டுபிடிப்பதற்கென்றே சிறுசிறு கூட்டமாக வந்தார்கள்.

அவர்கள் வந்த சமயத்தில், இந்தியாவில் பல பிரிவுகளாக, ஆங்காங்கு தனித்தனியே சிறு சிறு பாகத்துக்கு அதிகாரிகளாக, இருந்து ஆட்சி செலுத்தி வந்தார்கள். ஆனதால், அவர்களில் ஒருவருக்கொருவர் கலகம், சண்டை செய்து கொண்டிருந்தார்கள். இந்த நிலையில் அப்போது இங்கு பிழைக்க வந்த ஆரியர்கள், உள்நாட்டு கலகத்தில் கலந்துகொண்டு, தாங்கள் ஆளுக்கொரு கட்சியில் சேர்ந்து கலகங்களையும் , போர்களையும் பெருக்கி, ஒருவரையொருவர் மடியும்படியும், இளைக்கும்படியும் செய்தனர்.

முதல் முதல் ஆரியர்களுக்கு சுவாதீனமான நாடு வடமேற்கு மாகாணமாகும். பிறகு, அங்கேயிருந்து தொடர்ந்து மக்களைக் கொடுமைப்படுத்தி, அடக்கி வெற்றி பெற்றுக்கொண்டே வந்தார்கள் ஆரியர்கள். இந்தியாவில் ஒரே தடவையில் ஒரே கூட்டமாக வந்து ஜெயித்தவர்களல்லர்! ஆதியில் அவர்கள் தனித்தனி சமயங்களில் தனித்தனிக் கூட்டங்களாக வந்து தனித்தனி இடங்களில் தனித்தனியாகப் போரிட்டுத், தனித்தனியே வெற்றி கொண்டவர்கள்.

ஆதியில் இவர்கள் வந்தவிதம் சொல்லவேண்டுமானால், வேவுகாரர் போலவும், திடீரென்று புகுந்து தாக்கியும், கையில் கிடைத்ததைப் பற்றிக்கொண்டும், பிறகு நிலைத்த ஆதிக்கம் தேடிக்கொண்டார்கள். சில மேன்மையான இடங்களையும், சகல சவுரியமும் பிரபலமும் உள்ள இடங்களையும், யுத்தம் செய்தும், கொன்றும், பலரை அடிமைப்படுத்தியும் சுவாதீனம் செய்துகொண்டார்கள்.

இவை தங்களுக்குப் போதுமான அளவு கிடைக்காததால் அவர்கள் இங்கு நிலைத்தவர்களாகி, நாடெங்கும் தங்கள் கலைகளை, பழக்க வழக்கங்களை தங்கள் சவுகரியத்துக்கும் மேன்மைக்கும் ஏற்ற கொள்கைகளைப் பரப்ப ஆரம்பித்தார்கள். இங்கு வந்த ஆரியர்களின் சொந்தத் தன்மைகளையும் சரித்திரங்களையும் சொல்ல நமக்குப் போதிய சரித்திரம் இல்லை; என்றாலும், வேதம் ஆகியவைகளாலும் அவர்களது தன்மை, மதம், பாஷை ஆகியவைகளாலும் ஒருவாறு ஊகித்தறியலாம்.
அவர்களுக்குப் புரோகிதமும், சடங்குமே பிரதான மதக்காரியமாகும். அவர்களுடைய கடவுள்களாகப் பஞ்ச பூதங்களும் இந்திரன் முதலியவைகளும் இருந்து வந்தன. (இது ஆதியில் ரோம், கிரீஸ் முதலிய அய்ரோப்பிய நாடுகளிலும் இருந்தது போலவே ஆகும்).

இன்று ஆரியர்கள் கடவுள்களாக விளங்கும் இராமன், கிருஷ்ணன் என்பவர்கள், ஆரிய ஆதிக்கத்தை நிலைநிறுத்த வேலை செய்த வீரர்கள். ஆரியப் புரோகிதர்கள் யுத்த வீரர்கள் அல்லாவிட்டாலும், மிகவும் சக்தி உடையவர்கள். ஆரியர்களின் இப்படிப்பட்ட மதத்துக்கு விரோதமாக யார் யாரோ என்னென்னமோ முயற்சி எடுத்தும், அவை பலனில்லாமல் போய்விட்டன என்றும், புத்தமதத்தை ஆரியர்கள் தங்களுக்கு விரோதமான மதமென்று கருதியே ஒழித்துவிட்டார்கள். அந்த மதங்களையும், மதத்தைச் சேர்ந்த மக்களையும் இழிவுபடுத்தி வெறுக்கச்செய்து ஆரியர்களே மனித சமூகத்தில் மேம்பட்டவர்கள், அவர்களே எஜமானர்கள், குருமார்கள், புரோகிதர்கள், பூஜைக்காரர்கள், உயர்ந்த ஜாதியார்கள் என்று ஆகி, மற்ற சமுதாயம் தலையெடுக்க வொட்டாமல் செய்துவிட்டார்கள்.


நூல் : ஆரியமாயை

ஆசிரியர் “ அறிஞர் அண்ணா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக