சனி, 15 ஜூலை, 2017

நமது தமிழகம்!


இணையில்லா வீரத்துடன் வாழ்ந்துவந்த இனத்திலுதித்த வீரர்களே! எடுப்பார் கைப்பிள்ளையாய் இருக்கலாமா? இமயத்திலே புலி பொறித்த கரிகாலன் வழிவந்த நாம், இதயத்திலே சூதே நிரம்பிய ஆரியத்தின் அடிபணிவது கேட்டால், உலகு நகையாதோ

சேரன் புகழ், கனக விசயரின் சென்னியிலே சூட்டேற்றியதாம். அலைகளை ஆலவட்டமாகக் கொண்டு, மரக்கலத்தை ஆட்சிபீடமாகக்கொண்டு, அஞ்சா நெஞ்சுடன் அரசோச்சிய இராசேந்திரனின் பெயரைக் கூறவும் உரிமை இலாதவரானோம், ஊமைகளானோம், குருடரானோம், அடிமையானோம்! பொன் ஒருபுறமும் மணி மற்றோர்புறமும் திகழப் பூங்காவிலே தூங்காவிளக்கென ஒளிவிடு கண்களுடன் ஓடி விளையாடிய குமரிகள், மணி என விளங்கினராம் இங்கு

வீரரின் வேலின் ஒளியும், வேல்விழியாரின் புன்னகைப் பாணமும் ஒன்றையொன்று எதிர்த்திடும் மாட்சியினைத் திறம்பட உரைத்திடும் நாவலர் நடமாடிய நாட்டிலே, இன்று சோறு இல்லை, சோறு இல்லை என்று அழும் வேதனை வெண்பாவே மிகுந்திடக் காண்கிறோம்

மாடமாளிகை மண்மேடாகிவிட்டது! மதி கெட்டதால் நமது நிதி கெட்டது; கதி கெட்டது. சதிகாரர் விட்ட சரங்கள் நமது உயிரைத் துளைத்திடக் காண்கிறோம். என்னே நம்நிலை! ஏனோ இன்னமும் நம்மவருக்குத் தெரியவில்லை ஆரியத்தின் வலை!

``அகிலும் தேக்கும் அழியாக் குன்றம்
அழகாய் முத்துக் குவியும் கடல்கள்,
முகிலும் செந்நெலும் முழங்கும் நன்செய்
முல்லைக் காடு மணக்கும் நாடு

நமது தமிழகம்! முல்லைக்காடு இன்று முட்புதராகிக் கிடக்கிறது! மீண்டும், தமிழகம் பூங்காவாக வேண்டும்! ஆரிய மாயையிலிருந்து விடுபட்ட அன்றே அறியாமையிலிருந்து நம்மக்கள் விடுபடுவர்! ஆண்மை பெறுவர்! உலகின் அணியாவர்! ஆரியம் ஒரு மாயை என்பதை விளக்க அறிவாளிகள் தந்துள்ள அரிய உண்மைகளைக் காண்மின். பிறருக்குக் கூறுமின்! அறப்போர் தொடுமின்! வெற்றி நமதே!


நூல் : ஆரியமாயை

ஆசிரியர் “ அறிஞர் அண்ணா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக