திங்கள், 17 ஜூலை, 2017

ஆர்.கே. சண்முகம்


தென்னாட்டுத் தாகூர் என்றும், திராவிட மணி என்றும் அறிஞர் அண்ணா அவர்களால் மகுடஞ் சூட்டப்பட்ட ஆர்.கே. சண்முகம் (செட்டியார்) அவர்களின் பிறந்த நாள் இந்நாள் (1892).

பொருளாதாரத்தில் பட்டப்படிப்பு -அதற்குமேல் சட்டப்படிப்பு, மாணவர் பருவத்திலேயே சரளமாக ஆங்கிலத்தில் பேசும் ஆற்றல், பேச்சுப் போட்டிகளில் முதல் பரிசு இவை எல்லாமே வளரும் பருவத்தில்  ஆர்.கே.எஸ். அவர்களிடத்தில் குடி கொண்டு விட்டன.

இந்தியாவின் முதல் நிதி அமைச்சராக இருந்த பெருமையும் அவருக்குண்டு. கொச்சியின் திவானாக, அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக அவர் ஒளிவீசினார்.

இந்தச் சிறப்புகளைவிட தந்தை பெரியார் அவர்களின் தன்மான இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டது அவர்தம் பெருமை மகுடத்தில் என்றும் ஒளிதரும் அத்தியாயம் ஆகும்.

1930ஆம் ஆண்டில் ஈரோட்டில் நடைபெற்ற இரண்டாவது சுயமரியாதை இயக்க மாநாட்டின் வரவேற்புக் குழுத் தலைவராக இருந்தவர் ஆர்.கே.எஸ். ஆவார். வரவேற்புக்குழு தலைவர் என்கிற முறையில் அவர் ஆற்றிய உரையில் மின்னித் தெறித்தவை - அவரின் கொள்கைச் சான்றாண்மைக்கான ஆவணமாகும்.

சுயமரியாதை, ஒவ்வொருவருக்கும் தனிப்பெரும் சொத்து. சுயமரி யாதை இயக்கம்தான் மக் களின் சிந்தனா சக்தியை வளர்த்திருக்கிறது. மந்தி ரங்களையும், பாராயணத்தையும், ஜபமாலையை உருட்டுவதையும் விட்டு விட்டு,

கதவுகள் எல்லாம் மூடப்பட்டிருக்கும் கோயிலின் மூலையில் அமர்ந்து யாரைத் துதிக்கிறாய்?

கண்களைத் திற! உனது கடவுள் உனக்கு முன்னால் இல்லை என்ப தைப் பார்! என்று கூறிய ரவீந்திர நாத்தாகூர் நாத்திகரா? என்று பேசியவர் சண்முகனார்.

1931ஆம் ஆண்டில் விருதுநகரில் நடைபெற்ற மூன்றாவது மாகாண சுயமரியாதை மாநாட்டுக்குத் தலைமை வகித்தவரும் சண்முகனாரே ஆவார்.

1.8.1927 குடிஅரசு இதழில் நால்வர் சந்திப்பு என்ற தலைப்பில், இராமசாமி நாயக்கர், டாக்டர் வரதராசலு நாயுடு, திரு.வி. கலியாணசுந்தர முதலியார், ஆர்.கே. சண்முகம் செட்டியார் ஆகிய நால்வரும் சென்னையில் கூடிப் பேசியபோது, அரசியலைப் பொறுத்தவரை தங்களிடையே கருத்து வேறுபாடு இருந்தாலும், சமுதாய சம்பந்தமான எல்லாக் காரியங்களிலும் ஒன்றாக இருந்து வேலை செய்வதெனத் தீர்மானித்துக் கொண்டனர் என்று செய்தி வெளியாகியுள்ளது.
அந்த இனவுணர்வு வெல்லட்டும்!

17.10. 2010 விடுதலை ஒற்றைப்பத்தி - 3

நூல் : ஒற்றைப்பத்தி - 3


ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக