ஞாயிறு, 16 ஜூலை, 2017

இராஜாஜி செய்த கொலை


கொலைக் குற்றம் இராஜாஜி சேலத்தில் தொழில் செய்து வந்த காலத்தில் நாமக்கல்லில் டி. விஜயராகவாச்சாரியார் என்பவர் மாவட்ட துணை ஆட்சியராக இருந்தார். அவருடைய நீதிமன்றத்தில் அடிக்கடி தோன்றுவார் இராஜாஜி அவர்கள். இராஜாஜி அவர்களுடைய மதிநுட்பத்தையும், வாதத் திறமையையும் கண்ட நீதிபதிக்கு அவரிடம் மிகுந்த பற்று உண்டாயிற்று. அதுவே பின்னர் இவ்விருவருக்கும் ஏற்பட்ட நட்புக்குக் காரணமாக இருந்தது.

ஒரு நாள் இரவு; நடுநிசி; அக்காலத்தில் இக்காலத்தைப்போல் பிரயாணத்திற்கு மோட்டார் வண்டிகள் இல்லை. ஒரு கொலை விசாரணை வழக்கு சம்பந்தமாக நாமக்கல்லுக்குச் சென்றிருந்த இராஜாஜி திரும்பி வருவதற்கு நேரமாகி விட்டது; குதிரை வண்டியில் சேலத்திற்கு வந்து கொண்டிருந்தார். அக்காலத்தில் வழியில் கொலை களவுகள் நடப்பது வெகு சாதாரணம். ஆகையால் தமது கைத் துப்பாக்கியில் ரவைகள் போட்டுத் தற்காப்புக்கெனத் தயாராக வைத்திருந்தார். வண்டியிலிருந்த இராஜாஜி நன்றாக உறங்கி விட்டார். வழியில் ஒரு சுங்கச்சாவடி, அங்கே வண்டி நின்றது. காவற்காரன் சுங்கப்பணம் வசூல் செய்ய வண்டியின் பின்புறம் சென்றான். உறங்கிக் கொண்டிருந்த இராஜாஜி கண் விழித்தார். தம்மை யாரோ தாக்க வந்து விட்டதாக நினைத்தார். அரைத் தூக்கம்; ஆயினும் குறி தவறாது, கைத்துப்பாக்கியை எடுத்துக் காவற்காரனைச் சுட்டு விட்டார். காவற்காரனும் மண்ணில் சாய்ந்தான். இதற்குள் அவர் தூக்கமும் கலைந்தது. துப்பாக்கிச் சத்தம் கேட்டவுடன் பலர் அங்கே கூடி விட்டனர். விளக்கெடுத்து வந்து பார்த்த போது சுடப்பட்டவன் காவற்காரன் என்று உணர்ந்தார். தமது தவறை உணர்ந்த இராஜாஜி மிகவும் வருந்தினார். அவனை உடனே வண்டியில் ஏற்றிக் கொண்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். வழியிலேயே அவன் இறந்து விட்டான்.
இராஜாஜியின் பேரில் கொலைக் குற்றம் சாட்டப்பட்டு வழக்கும் நடந்தது; தவறு இருட்டில் தற்காப்புக்காகச் சுட்டார் என்று நீதிபதி வழக்கை தள்ளி விட்டார்.

(இராஜாஜி வாழ்க்கை வரலாறு பக்கம் -_ 20, 1949இல் வெளியானது)

நூல் : பார்ப்பன புரட்டுக்கு பதிலடி
ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக