ஞாயிறு, 16 ஜூலை, 2017

பழங்காலக் கோவில்களில் பார்ப்பனர்கள் அனுபவித்த சுகங்களும் அடித்த கொள்ளையும்


(கல்வெட்டுகள் கூறும் தகவல்கள்)
(ஆதாரம் : நூல் : “கல்வெட்டில் வாழ்வியல்” ஆசிரியர்: டாக்டர் அ. கிருஷ்ணன்)

இப்படி ஒரு பழமொழி மக்களிடையே வழங்கி வருவதையும் இதன் பொருளையும் அனைவரும் அறிவோம்.

ஆனால், இந்தப் பழமொழிக்குப் பொருத்தமான சான்றுகள் என்று பார்க்கும்போது, தமிழ்நாட்டை ஆண்டுவந்த பழைய வேந்தர்கள் பொதுமக்களின் வரிப்பணத்திலும் மாற்றாரிடம் கைப்பற்றிய பொருள்களிலும் திருக்கோவில்கள் என்று கட்டி வைத்ததையும், அவற்றுள் எந்தவித உரிமையும் இல்லாத பார்ப்பனர் கூட்டம் புகுந்து கொண்டு கோவில்களின் வருவாயில் தின்று கொழுத்து வந்த செய்திகளும்தான் நம் கண்களில் படுகின்றன.
நேரடியாக உட்கார்ந்து கொண்டு நிரம்பத்தின்று கொழுத்தது மட்டுமன்றி திருட்டுத்தனம் செய்து கொள்ளையடித்து வாழ்வை வளம்படுத்திக் கொண்ட திடுக்கிடும் சில புதிய தகவல்களும் நமக்கு கிடைத்திருக்கின்றன.
அவற்றை நாம் இப்பொழுது அறிந்துகொள்வோம்.
முதலில், கோவில்களின் வருவாயில் அந்த பார்ப்பனக் கூட்டம் அனுபவித்த சுகவாழ்வைப் பார்ப்போம்.
பழந் தமிழகத்தின் கல்வி ஓடையில் பார்ப்பன முதலைகள்
இந்த நாட்டு மன்னர்கள் அன்றைக்குக் கல்வியை வளர்க்கிறோம்; மக்களுக்குக் கல்வியைக் கற்றுத்தரப் பள்ளிகளை நிறுவுகிறோம் என்ற பெயரில் வேதக் கல்வியாம் சனாதனத்தையும், பார்ப்பன மாணவர்களையும் வளர்த்து வந்தனர்.

இந்த மன்னர்களின் ஆதரவிலும் கோவில் வருவாயிலும் இந்தப் பார்ப்பனக் கூட்டம்தான் படித்து வந்தது; பயன்பெற்று வந்தது; சுகத்தை அனுபவித்து வந்தது.

இந்த நாட்டுக்கே உரிய தமிழினத்துப் பிள்ளைகளுக்கு இந்த வாய்ப்புகளும் வசதிகளும் கொடுக்கப்படாத கொடுமைகளும் அநீதிகளும் இங்கு நிலவிவந்துள்ளன.

சில கல்வெட்டுச் செய்திகளைத் தருகிறோம்.

திருமுக்கூடல் கோவில்...

திருமுக்கூடல் என்னும் ஊரில் இருந்த வெங்கடேசப் பெருமாள் கோவிலில் - நான்கு வேதங்களைக் கற்பிக்க என்றே ஒரு வேதக் கல்லூரி நிறுவப் பெற்றிருந்தது. இந்தக் கல்லூரியில் பயில்கின்ற பார்ப்பன மாணவர்கள் தங்கியிருக்க மாணவர் விடுதிகள் 2 கட்டப்பெற்றிருந்தன.
இந்தக் கல்லூரியில் நான்கு வேதங்கள், சாத்திரங்கள், சம°கிருத வியாக்கனங்கள் எனப்பட்ட வடமொழி இலக்கணங்கள் முதலியவை கற்றுத் தரப்பட்டன.

மாணவர் விடுதியில் தங்கிப் பயின்ற பார்ப்பனச் சிறுவர்களுக்கு சுவையான உணவு வழங்கப்பட்டது.
சனிக்கிழமை தோறும் எண்ணெய் நீராட நல்லெண்ணெய் தரப்பட்டது.
இத்தகவல்களை திருமுக்கூடல் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.

எண்ணாயிரம் கோவிலில்...
எண்ணாயிரம் கோவில் என்றதும் எட்டாயிரம் கோவில்களின் எண்ணிக்கை என்று எண்ணிவிட வேண்டாம். ‘எண்ணாயிரம்’ என்னும் ஊரில் இருந்த கோவில் இந்தப் பார்ப்பனர் கூட்டம் அனுபவித்த கல்விச் சுகத்தினையும் தின்று கொழுத்த செய்திகளையும் அறிய இருக்கிறோம்.
கி.பி. 1023-ல் முதலாம் இராசேந்திரசோழன் காலத்தில் எண்ணாயிரம் என்ற இந்த ஊரில் இருந்த கோவிலில் ‘கங்கை கொண்ட சோழ மண்டபம்’ என்ற பெயரில் பெரிய மண்டபம் ஒன்று இருந்தது.
இந்த மண்டபத்தில், இருக் வேதம் படிக்கும் பார்ப்பன மாணவர்கள் 75 பேர்; யசுர் வேதம் படிக்கும் பார்ப்பன மாணவர்கள் 75 பேர்; சாம வேதம் படிக்கும் பார்ப்பன மாணவர்கள் 50 பேர். அதர்வண வேதம் படிக்கும் பார்ப்பன மாணவர்கள் 10 பேர்; மற்ற சாத்திர பாடம் படிக்கும் பார்ப்பனர்கள் 20 பேர்; தெய்வக் கலையின் பழம் பிறப்பைப் பயின்றவர்கள் 40 பேர்; ஆக மொத்தம் 270 பார்ப்பன மாணவர்கள் படித்து வந்தனர்.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பார்ப்பன மாணவருக்கும் 6 நாளி நெல் தானமாகக் கொடுக்கப்பட்டு வந்தது.
இந்த மண்டபத்தில், வடமொழி வியாக்ரணம் கற்றோர் 25 பேர்; பிரபாகரம் என்னும் மீமாம்சை கற்றோர் 25 பேர்; வேதாந்தம் பயின்றோர் 10 பேர்; இவர்களும் அந்த மண்டபத்தில் தங்கிப் படித்தனர். ஒவ்வொரு நாளும், ஒவ்வொருவருக்கும் 1 குறுணி 2 நாழி நெல் அளிக்கப்பட்டு வந்தது.
வியாக்ரணம் கற்பித்த பார்ப்பன ஆசிரியர்களுக்கு 1 கலம் நெல், பிரபாகரம் கற்பித்த பார்ப்பன ஆசிரியர்களுக்கு 1 கலம் நெல், வேதாந்தம் கற்பித்த ஆச்சாரியார்களுக்கு 1 கலம் நெல் கொடுக்கப்பட்டது.
வேதப் பேராசிரியர் எனப்பெற்ற பார்ப்பனர்கள் 10 பேருக்கு நாள் ஒன்றுக்கு 30 கலம் நெல்வீதம் ஆண்டுக்கு 10,506 கலம் நெல்லும் அவர்கள் பயன்படுத்த பொன்னும் தரப்பட்டது.
இதுமட்டுமா? இந்த அநியாயத்தையும் பாருங்கள்! வியாக்ரணத்தை (சம°கிருதஇலக்கண நூல்) விளக்கிய பேராசிரியர்களுக்கு, ஒவ்வொரு அத்தியாத்துக்கு 1 கழஞ்சு பொன்வீதம் 8 கழஞ்சு பொன் வழங்கப்பட்டு வந்தது.
பிரபாகரம் விளக்கியவர்களுக்கு, அத்தியாயம் 1-க்கு 1 கழஞ்சு பொன் வீதம் 12 கழஞ்சு வீதம் விளக்கியவர்களுக்கு - வேதப் பேராசிரியர்கள் 13 பேருக்கு, அரை கழஞ்சு வீதம் ஆறரை கழஞ்சுப் பொன் கொடுக்கப்பட்டது.

கலைப் பேராசிரியப் பார்ப்பனர்களுக்கு ஆளுக்கு அரை கழஞ்சுப் பொன்; வியாகரணம், பீமாம்சை பயின்ற மாணவர்கள் 70 பேர். 1 ஆளுக்கு அரை கழஞ்சு வீதம் 35 கழஞ்சுப் பொன் குறைவின்றிக் கொடுக்கப்பட்டு வந்தது.

இந்தப் பார்ப்பன மாணவர்கள், பேராசிரியர்களுக்குச் செலவழிக்க நிரந்தரமான ஓர் ஏற்பாடும் செய்யப்பட்டிருந்தது.

மாம்பாக்கச் சேரி என்னும் பவித்திர மாணிக்க நல்லூர் என்னும் ஊரைச் சுற்றியிருந்த 45 வேலி நிலம் கோவிலுக்குத் தானமாக உரிமைப்படுத்தப்பட்டது. இவையாவும் எண்ணாயிரம் கோவில் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.

ஒரத்தநாடு சத்திரத்தில்...

எண்ணாயிரம் கோவில் கல்விதானத்தை அடி ஒற்றி 1821-ல் தஞ்சை மராட்டிய ஆட்சியில் ஒரத்தநாடு முத்தம்மாள்புரம் சத்திரக் கல்வெட்டுகள் அமைந்துள்ளன.

1.11.1869-ல் ஆங்கில ஆட்சியின் ஆணைப்படி சத்திரத்தில் 1 பள்ளி; 1 விடுதி இருந்தன. 120 மாணவர்கள் தங்கிப் படித்தனர். அனைவரும் யார் என்று கேட்க வேண்டாம்! எல்லாம் ‘அவாள்’களே!

நாள்தோறும் ஒவ்வொரு மாணவருக்கும் அளிக்கப்பட்ட உணவுப் பொருள்களுக்கு ஆனப்பட்டியலைப் பாருங்கள்!

அரிசி 1 படி; பருப்பு 1/32 படி; மிளகாய் 1/64 சேர்; புளி 3/64 சேர்; உளுந்து 1/30 படி; கொத்துமல்லி 1/64 சேர்; மிளகு 1/60 சேர்; கடுகு 1/160 சேர்; வெந்தயம் 1/800 சேர்; உப்பு 1/64 படி சேர்; நெய் 1/64; ந.எண்ணெய் 1/64 சேர்; மஞ்சள் 3/6400 சேர்; சுக்கு 1/3200 சேர்; மோர் 1/8 படி; விறகு 2 1/2 சேர்.

வாரம் 2 தடவை நல்லெண்ணெய் தேய்த்துக் குளிக்க, 1 குளியலுக்கு 3/16 சேர் நல்லெண்ணெய், அரப்புத் தூளுக்கு 1/2 காசு வழங்கப்பட்டு வந்தது.

தமிழர் கட்டிய கோவிலில் பள்ளியும் கல்வியும், விடுதியும் பார்ப்பனக் கும்பலுக்கே தாரை வார்க்கப்பட்ட கொடுமைகளைப் பார்க்கும்போது நம் உள்ளம் குமுறுகிறதே!

கல்வி நிலையங்களில் இன்றைக்கு இடஒதுக்கீடு ஏற்பாடு, மய்ய அரசில் மண்டல் குழு பரிந்துரை நிறைவேற்றம் கண்டு வாயிலும் வயிற்றிலும் ‘லபோ’, ‘லபோ’ என அடித்துக் கொண்டு, கல்வியிலே சாதியின் பெயரால் எங்களைப் புறக்கணிப்பதா? சாதியின் பெயரால் இட ஒதுக்கீடா? அநியாயம்! அக்கிரமம்! என்று கூக்குரல் இடும் இந்தப் பார்ப்பனக்கூட்டம் - அன்றைக்குத் தமிழ்நாட்டுக் கோவில் பணத்தைக் கொண்டு தங்களின் இனமே கல்வியை ‘ஏகபோக’மாக அனுபவித்துக் கொண்டு வந்துள்ள கொடுமைக்கு என்ன பதில் கூறப்போகின்றார்கள்?

பார்ப்பனர் அடித்த பயங்கரக் கோவில் கொள்ளைகள்:

தமிழ்நாட்டு மன்னர்களின் அறியாமையால் - மூடத்தனத்தால் கோவில் சொத்துகளை நேரடியாகத் தின்று கொழுத்ததோடு எவருக்கும் தெரியாமல் கோவில் நகைகளை, கோவில் நிலங்களை, சொத்துக்களை ‘அபகரித்து’ மோசடி செய்து வந்த சில கல்வெட்டுத் தகவல்களைப் பாருங்கள்!

திருமேனி அணிகலன்களைத் திருடியமை:

கோவிலிலே உள்ள கடவுளின் திருமேனியில் (சிலையில்) அணிந்திருந்த அணிகலன்களைக் கோவில் அர்ச்சகப் பார்ப்பனர்கள் 3 தடவை திருடி பின் மாட்டிக் கொண்டனர்.
இது முதலாம் குலோத்துங்க சோழனின் 29 ஆவது ஆண்டில் (கி.பி. 1099) பொறிக்கப்பட்ட திருப்பனந்தாள் கல்வெட்டு தெரிவிக்கின்றது.

சோழன் அதிராசேந்திரனின் 3ஆம் ஆட்சியாண்டில் (கி.பி. 1070) ஒருமுறை இவ்வாறு அணிகலன்கள் திருடப்பட்டன.

இந்தத் திருட்டு, கோவில் கருவூல அலுவலர் இராசராச மூவேந்த வேளார் என்பவர் தணிக்கை செய்தபோது கண்டுபிடிக்கப்பட்டது.

மூன்றாம் குலோத்துங்கனின் 8-ஆம் ஆட்சியாண்டில் (கி.பி. 1186) அர்ச்சகப் பார்ப்பனர்கள் நகைகளைத் திருடிக் கையாடல் செய்த திருட்டு, சேனாபதி, பல்லவராயர் என்பவர் தணிக்கை செய்தபோது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுபோல, மூன்றாம் குலோத்துங்கனின் 21-ஆம் ஆட்சியாண்டிலும் இந்த அர்ச்சகப் பார்ப்பனரின் நகைத் திருட்டு கண்டுபிடிக்கப்பட்டது.

சேனாபதி நந்தியராசன் தணிக்கை செய்தபோது இந்தத் திருட்டுக் கண்டுபிடிக்கப்பட்டு தகவல் மன்னனுக்குத் தரப்பட, மன்னன் திருடிய அணிகலன்களின் மொத்த மதிப்பான 540 காசுகளை திரும்ப ஒப்படைக்க வேண்டும் எனப் பார்ப்பனர்களுக்கு ஆணையிட்டாள்!

அத்தோடு தண்டனையும் கொடுத்தார்.

தண்டிக்கப்பெற்ற அர்ச்சகப் பார்ப்பனர்களுள் ஒருவன் பெயர் பாண்டன் குமாரசாமி, மற்றவர் பெயர்கள் தெரியவில்லை!

ஆசைநாயகிக்கு அம்மன் நகைகள்

திருச்சிற்றம்பலப்பட்டர் என்னும் அர்ச்சகன் இன்னொரு அர்ச்சகப் பார்ப்பனன் (சிவப்பிராமணன்) ஒருவனின் (இவனின் உதவியோடு பெயர் கல்வெட்டில் அழிக்கப்பட்டுள்ளது) கோவிலில் இருந்த அம்மன் அணிந்திருந்த அணிகலன் ஆன ‘திருமுத்துவாளி’ எனப்படும் நகையினைத் திருடி தன் ஆசைநாயகியாகிய ஒரு வேசிக்கு அணிவித்து மகிழ்ந்தான்.

திருட்டு - கணக்கு:

இன்னும் சில அர்ச்சகப் பார்ப்பனர்கள் கோவிலில் ‘எழுந்தருளி’ யுள்ள ‘எல்லாம் வல்ல’ எம்பெருமானின் உருவத்திருமேனியையே பெயர்த்து எடுத்து மறைத்து வைத்துவிட்டனர்.

இன்னும் சில அர்ச்சகப் பார்ப்பனர், வைப்புக்கால கோவில் நெல்லினைத் திருட்டுத்தனமாக விற்பனை செய்துள்ளனர்.

இன்னும் சில அர்ச்சகர், கடவுளர் சிலைக்கு 1/2 கழஞ்சுப் பொன் செலவு செய்துவிட்டு 2 கழஞ்சுப் பொன் செலவழித்ததாகப் பொய்க் கணக்கு எழுதி வைத்திருந்தனர்.

இந்தத் தகவல்கள் 3-ம் இராசராசன் காலத்து 3 கல்வெட்டுகளில் காணக்கிடக்கின்றன.

கொள்ளைப்போன கோவில் நிலம்:

தீக்காலிவலம் கோவில் ஆட்சிப் பொறுப்புப்பற்றி மதுராந்தகன் கண்டராதித்தன் என்னும் அதிகாரி விசாரணை செய்ததில் ஒரு பெரிய நிலச்சுரண்டலைக் கண்டு பிடித்தான்.

அது என்ன சுரண்டல் என்றால், கோவில் நிலத்தின் பெரும்பகுதியை சைவப் பார்ப்பனர் (சிவப் பிராமணர்) சிலர் சுருட்டி வைளத்துக் கொண்டு கோவில் வருவாயில் சேர்க்காது தாமே அனுபவித்துக் கொண்டிருந்தனர்.
கையாடல் செய்த அந்தப் பார்ப்பனர்களுக்கு அவன் 74 கழஞ்சு பொன் தண்டம் விதித்திருக்கிறான்.

மோசடியின் மொத்த உருவங்கள்

தென் ஆற்காடு மாவட்டத்தைச் சார்ந்தது திருப்பாதிரிப்புலியூர். இங்குள்ள கோவிலுக்கு நத்தமாகவும், விளைநிலமாகவும், புன்செய் ஆகவும் சொத்துகள் உண்டு.

இந்தக் கோவில் நிலங்களையெல்லாம் கோவில் பார்ப்பனர்கள் தாமே அனுபவித்துத் தங்கள் அனுபோகத்துள் வைத்திருந்தனர்.

விக்கிரப்பாண்டியனின் 3-ஆவது நாளில், சுப்பிரமணிய பிள்ளையார் கோவில் ஒன்று கட்டப்பட்டது. 2 மா அளவு நிலம் ‘சுவாமி’க்குத் தானமாக அளிக்கப்பட்டது. இது திருப்பாதிரிப் புலியூர் கோவில் நிலங்களிலிருந்து தரப்பட்டது. அந்த நிலத்திற்கு எல்லைக் கற்களும் நாட்டப்பட்டன.

இருநபர் விசாரணைக் குழு

இது தங்கள் நிலம்; இதனைப் பிள்ளையார் கோவிலுக்குத் தரக்கூடாது என்று அந்தப் பார்ப்பனர்கள் கூறி அந்த நிலப்பகுதியைத் தர மறுத்து விட்டனர்.

இந்தச் செய்தியறிந்த பாண்டியன், பல்லவராயர், அழகிய மணவாளப் பல்லவராயர் ஆகிய இரண்டு அலுவலர்களைக் கொண்ட ஒரு விசாரணைக்குழு அமைத்து சிக்கலைத் தீர்க்க அனுப்பி வைத்தான்.

சோழகுலவல்லி நல்லூர் என்ற ஊரின் பொது இடத்தில் விசாரணைக் குழு வந்து தன் விசாரணையை மேற்கொண்டது.

தீக்குளிப்பு மிரட்டல்:

உரிமை கொண்டாடிய பார்ப்பனர்களும் வந்தனர். திடீர் என ஒரு பார்ப்பனர். எங்கள் உரிமையைப் பறிக்காதே என்று கூச்சல் இட்டு தன்னையே தீ வைத்துக்கொண்டு எரிந்து செத்துப் போனான். இந்த மிரட்டலுக்கு விசாரணைக் குழு அஞ்சவில்லை.

விசாரணை தொடங்கியது.
பார்ப்பனரின் திமிரான பதில்

“பார்ப்பனர்களே! நீங்கள் அனுபவிக்கும் நிலத்துக்கு உரிமைச் சான்று ஏதேனும் உண்டா?” - விசாரணைக் குழுவினர் கேட்டனர்.

“இது எங்கள் பிரம்ம nக்ஷத்திரம்! (பிராமணர்க்குரிய நிலம்) சான்று காட்டத் தேவை இல்லை!” - பார்ப்பனர்களின் பதில்.

“பல்லாண்டுக் காலமாக, பள்ளர்கள், பரம்பர்கள் இந்த நிலத்தை உழுது பயிர் செய்கிறார்கள். ஆகவே, இது பிரம்ம nக்ஷத்திரம் ஆகாது! அதுசரி, உங்களின் உரிமை நிலம் என்பதற்கு கல்வெட்டுச் சான்று இருக்கிறதா? இருந்தால் காட்டுங்கள்!” - விசாரணைக்குழு

செல்லாத சான்றுகள்

“அதெல்லாம் இல்லை! அது தேவையும் இல்லை! அவ்வப்போது இந்த நிலப்பகுதிகளை எங்களுக்குள் விற்பனை செய்த சான்றும். அடகு வைத்துக்கொண்ட ஆவணமும் எங்களிடம் இருக்கின்றன! இதோ!” என்று கூறி அந்தச் சான்று ஆவணச் சீட்டுக்களை விசாரணைக் குழுவினரிடம் காட்டினர் பார்ப்பனர்கள்.

“உங்களுக்குள் நீங்களே விற்பனை செய்த மற்றும் அடகு வைத்துக் கொண்ட சான்றாவணங்கள் செல்லாது. இவற்றை ஏற்க மாட்டோம்!” என்று உறுதியாகக் கூறிவிட்டு கோவில் அலுவலர்களை வரவழைத்து விசாரித்தனர்.

அசைக்க முடியாத ஆதாரங்கள்:

“இது கோவில் நிலம்தானா? பார்ப்பனர்க்கு உரியதா? கோவில் நிலம் என்றால் சான்றுகள் உளவா?” விசாரணைக் குழுவினர் கேட்டனர்.

“இது உறுதியாகக் கோவில் நிலம்தான் பார்ப்பனர்களுக்கு உரியதல்ல!” எனறு அலுவலர்கள் கூறி அதற்கான ஆவணங்களையும் காட்டினர்.

அந்த ஆவணங்களில் உரிமை கொண்டாடிய பேராசைக்காரப் பார்ப்பனர்களும் அந்நிலப் பகுதி கோவிலுக்கு உரியதுதான் என்று எழுதி கையொப்பமும் இட்டிருந்தனர்.

அதுமட்டுமின்றி, “இந்த ஆவணம் பற்றிக் கல்வெட்டிலும் பொறிக்கப்பட்டுள்ளது!” - என்று கூறி, கல்வெட்டுக்களையும் சாட்சியமாகக் காட்டினர்!

சான்றாவணங்களைப் பார்த்த விசாரணைக்குழு அலுவலர்கள் அந்தப் பார்ப்பனர்களைக் கண்டித்ததோடு, உடனடியாக - அந்த நிலங்களைக் கோவிலுக்கு ஒப்படைக்கவேண்டும் என்று தீர்ப்புக்கூறி, சர்ச்சைக்குரிய, அந்த நிலப்பகுதியைப் பிள்ளையார் கோவிலுக்கு உரிமையாக்குகிறோம் என்றும் அறிவித்து விட்டனர்.
- தென்னிந்தியர் கல்வெட்டுத் தொகுதி (7-759)



பார்த்தீர்களா பார்ப்பனக் கொள்ளையை?

திருட்டு, சுரண்டல், ஒழுக்கக்கேடு, போலிச் சான்று காட்டுதல், கோவில் சொத்தைக் கொள்ளையடித்தல், ஏமாற்றுதல் முதலான மோசடி ஊழல்களின் மொத்த உருவங்களாக விளங்கிய கல்வெட்டுச் செய்திகளைப் பார்த்தீர்களா?

இப்படி ஊழல்களின் ஊற்றுக்கண்ணாகவும், மோசடிகளின் மொத்த உருவங்களாகவும், ஒழுக்கக் கேட்டின் உறைவிடமாகவும் பித்தலாட்டத்தின் பிரதிநிதிகளாகவும் மன்னர் ஆட்சியில் விளங்கிய இந்த மகா யோக்கிகள்தான் இன்றைக்கு நாட்டில் ஊழல் மோசடி! ஏய்ப்பு என்றெல்லாம் ஊளையிடுகின்றனர்!

இப்படிப்பட்ட பார்ப்பனர் பண்பாடுகளை நம் நாட்டுக் கோவில் கல்வெட்டுக்கள் பறைசாற்றி வருகின்றன.

(ஆதாரம் : நூல் : “கல்வெட்டில் வாழ்வியல்” ஆசிரியர்: டாக்டர் அ. கிருஷ்ணன்)

நூல் : பார்ப்பனர் புரட்டுக்குப் பதிலடி
ஆசிரியர் : கவிஞர் கலி.புங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக