ஞாயிறு, 16 ஜூலை, 2017

கட்டாயக் கல்வி

கவர்னர் ஜெனரலாய் இருக்கும் நேரத்தில் ராஜாஜி கட்டாயக் கல்வியைப் பற்றிப் பேசியிருக்கிறார். குழந்தைகள் அவர்களுடைய குடும்பக் கலைப் பயிற்சியிலிருந்து முற்றிலும் தனியாகப் பிரித்துக் கட்டாயக் கல்வியைப் புகுத்த நிர்ப் பந்திக்கக் கூடாதாம்பெற்றோர்கள் செய்துவரும் தொழிலை மேற்கொள்ளத்தக்க விதமாக வாரத்தில் 3 நாள் மட்டும் படிப்புச் சொல்லிக் கொடுக்க வேண்டுமாம்.

இந்த நாட்டில் அதிர்ஷ்டவசமாக பண்டைத் தொழில் முறை (அதாவது குலத் தொழில்) பாதுகாக்கப்பட்டு வருவதனால்தான் இன்றைய அமைதியாவது காணப்படுகிறதாம். இந்த அமைப்பு மாற வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் பைத்தியக்காரர்கள்தானாம்.

ஆச்சாரியாரவர்கள் வருணாசிரம தர்மத்தைத்தான் குடும்பக் கலைப் பயிற்சி என்று கூறுகிறார். வெளுப்பவன் என்றைக்குமே பரம்பரையாக வெளுத்துவர வேண்டும். சிரைப்பவன் பரம்பரையும் அப்படியே தெருக் கூட்டுபவன், மாடு மேய்ப்பவன், கக்கூஸ் எடுப்பவன் பரம்பரையும் அப்படியே செய்துவர வேண்டும். இதுதான் அவர்களுக்கு குடும்பக் கலைப் பயிற்சி! ஆரிய முன்னோர்கள் எழுதி வைத்த வர்ணாசிரம தர்மம்!

வாரத்தில் 3 நாள் சொல்லிக் கொடுக்கும் படிப்பு, எந்த அளவுக்குப் பலன் கொடுக்கும் என்பதை அவர் அறியாதவரல்லர். ஏதோ கட்டாயப் படிப்பு சொல்லிக் கொடுத்ததாகவுமிருக்க வேண்டும். அதே நேரத்தில் பலனைப் பார்த்தால் கல்லாதவர்களாகவும் ஆகியிருக்க வேண்டும்.

படிப்பிலேயே முழு நேரத்தையும் செலவழிக்கும்படிச் செய்து விட்டால் அப்படிப் பழக்கப்படுத்தப்பட்ட யார்தான், பிறகு அவரவர்கள் குலத் தொழிலை - _ இழிவு என்று மற்றவர்களால் கருதப்படுகின்ற தொழிலை - _ உடலை வருத்தி உழைத்தாக வேண்டிய தொழிலை செய்ய முன்வருவார்கள் என்கிற கவலையைத் தவிர, இந்தத் திட்டத்தில் வேறு என்ன நியாயமிருக்கிறது என்று சொல்ல முடியும்?

(1949 ஆகஸ்டு 13  குடி அரசு தலையங்கம்)

நூல் : பார்ப்பன புரட்டுக்கு பதிலடி

ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக